ஐரோப்பாவில் வாழும் தமிழர் எதிர்காலத்திலும் தமிழர் என்ற அடையாளத்தினை பேணுவார்கள். ஆனால், ஈழத் தமிழர்கள் என்ற பதத்திற்கு பதிலாக ஐரோப்பிய தமிழர் என்று அடையாளப்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாக லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல்களை ஆணவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நூலகர் என். செல்வராஜா தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் புலம்பெயர் தமிழ் சூழலில் வெளியீடுகளை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், தமிழ்த்துறை உள்ளிட்ட பல மாணவர்களும் பங்குபற்றினர்.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலகவியலாளர் என். செல்வாராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்:
ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் இலங்கை தமிழர் பற்றி பல ஆய்வுகளை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்கின்றனர். ஐரோப்பியரும் இவ்வாறான ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். பல்வேறு மொழி அகராதிகளும், மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களினாலும் அவர்களது இரண்டாம் தலைமுறையினராலும் நேரடியான மூல மொழியிலிருந்தும், மூல நூலாசிரியரின் வாழிடச் சூழலை அனுபவித்தும் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. படைப்பாளி நிலக்கிளி பால மனோகரன் (டென்மார்க்) சரவண பவன் (ஜேர்மனி) கலாமோகன் (பாரிஸ்) போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
1980களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களின் தலைமுறையினர் இன்று சிலோன் தமிழர்களாக வாழ்வது போல ஐரோப்பிய தமிழரும் தனித்துவ அடையாளத்துடன் வாழ்வார்கள்.
இன்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட பல இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களில் இலங்கையிலிருந்து சென்றவர்களே 1870-1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல இலக்கியங்களை படைத்துள்ளனர். மலேசியா மான்மியம் ஈழத்தமிழராலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியாவின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் ஈழத்தமிழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இவை ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றை தனியான ஒரு மலேசிய நூல்தேட்டம் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளேன்.
ஐரோப்பிய தமிழ் ஆவணகாப்பகமும், ஆய்வு நிலையமும் என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களின் நூல்கள் ஆவணப்படுத்தப்படுவதோடு, அங்கு இலங்கை தமிழர் பற்றிய நூல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் தமிழர் பற்றி ஆய்வு செய்யும் ஐரோப்பியர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பல்கலைக்கழகங்களில் கற்பவர்களுக்கும் ஒரு ஆய்வகமாகத் திகழப் போகிறது. பிரித்தானியாவிலுள்ள முன்னணி ஆறு பல்கலைக்கழங்களில் 600ற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் வருடாந்தம் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். எமது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர்.
நூல்தேட்டத்தின் 7வது நூல் தொகுப்பு பேராதனை பல்கலைக்கழக வெளியீடுகளையும், பல்கலைக்கழக நூலகத்தின் அரிய வளங்களையும் ஆவணப்படுத்தி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் தேட்டம் விற்பனை நோக்கத்துடன் செய்யப்படவில்லை. ஈழத்தமிழரின் வெளியீடுகள் உலகளாவிய ரீதியில் ஆவணப்படுத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடத்திலிருந்து கொண்டே இலங்கை தொடர்பான பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இவை இலங்கையிலும் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் அச்சிடப்படுகின்றன. இந்த நூல்கள் பலவற்றில் எழுத்தாளரின் இலங்கை விலாசமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.
இளம்தலைமுறையினரும் இலங்கை பற்றி ஆய்வு செய்யவே ஆர்வமாகவுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் பல வெளியீடுகளை மேற்கொள்வார் எனவும் புலம் பெயர் தமிழரின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தாயகத்திலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். உரையின் முடிவில் திரு. செல்வராஜா ஒன்றுகூடலில் கலந்துகொண்டோரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.