16

16

ஐ.ம.சு.முவின் மே தினக் கூட்டம் கொழும்பு மாநகர சபைத் திடலில்!

alavi.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதென மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19ம் திகதி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதும் நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பிலும் இம் மே தினத்தில் கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் நாவலப்பிட்டி வாக்காளர் கைகளில் உள்ளது மனோகணேசன்

mano-ganesan.jpgஎதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் மறுவாக்களிப்பில் நாவலப்பிட்டி தொகுதி தமிழ்பேசும் வாக்காளர்கள் அளிக்கின்ற வாக்குகளில்தான் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் தங்கியுள்ளதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி மறுவாக்களிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ மேலும் கூறியதாவது

இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின்படி நான் வெற்றிபெறக்கூடிய நிலையில் இருக்கின்றேன். நாவலப்பிட்டி வாக்காளர்கள் தேர்தல் மறுவாக்களிப்பில் அளிக்கப்போகின்ற வாக்குகளின் மூலமாகவே எமது வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்படும். சின்னத்திற்கு வாக்களிப்பதுடன், விருப்பு வாக்கு இலக்கத்திற்கு விழிப்புணர்வுடனும் விவேகத்துடனும் வாக்களிப்பதன் மூலமாக இதை சாத்தியமாக்கலாம். நாவலப்பிட்டி தொகுதியில் தமிழ்பேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்ற வாக்களிப்பு பிரதேசங்களில் மறுவாக்களிப்பு நடைபெறுவதற்கு முதற்காரணமாக இருந்ததன் மூலமாக வெற்றி பெறுவதற்கு முன்னாலேயே நான் கண்டி மாவட்ட மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றேன்

மீள்குடியேற்ற செயற்பாடு இன்று முதல் துரிதகதியில் – இன்று முல்லைத்தீவில் 1200 பேர்; 18ந் திகதி மேலும் 1300 பேர்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் எஞ்சியுள்ளவர்களை மீளக்குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இன்று (16) முல்லைத்தீவு நகரில் 1200 பேரும் எதிர்வரும் 18ம் திகதி 1300 பேரும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேவேளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தவர்களையும் எதிர்வரும் 20ம், 22 ஆம் திகதிகளில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த திட்டமிட்டி ருப்பதாகவும் இதற்கமைய அவர்களது தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு நகரிலுள்ள முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, வண்ணான்குளம், உன்னாப்பிளவு, கரச்சிக்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீள்குடியேற்றும் பணிகள் இன்று முதல் மீண்டும் துரிதப்படுத்தப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரிலுள்ள மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, அவை மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை எதிர்வரும் 20, 22 ஆம் திகதிகளில் முல்லைத்தீவின் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவிலிருந்து இன்று முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய கொடுப்பனவு, உலர் உணவுகள் ஆகியவை வழங்கப்பட்ட பின்னர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். நிலக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கும் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கமநெகும வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளை கட்டுவதற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வவுனியா நிவாரணக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக இன்னமும் 80 ஆயிரத்து 669 பேர் இருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவர்களனைவரையும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

ஜூனில் போலந்து ஜனாதிபதி தேர்தல்

போலந்து நாட்டு ஜனாதிபதி லெக் கக்சியான்ஸ்கி விமான விபத்தில் ரஷியாவில் பலியானதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது.

வருகிற ஜூன் மாதம் 13 அல்லது 20ந் திகதி இந்த தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இந்த 2 திகதிகளில் எந்த திகதி என்பதை இடைக்கால அதிபர் கொமோரோவ்ஸ்கி முடிவு செய்வார். இதற்காக அவர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 முதல் 27ஆந் திகதி வரை

sri-lankas.jpgதரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை’ என்னும் கோரிக்கையை முன்வைத்து இவ்வருடத்துக்கான சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்தின் போது மலையக கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்ற விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலியுறுத்தப்படவுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார் .

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய டீசல் களஞ்சியம் கண்டுபிடிப்பு; 25,000 லீட்டர் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய டீசல் களஞ்சியம் ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்தக் களஞ்சிய தொகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்தும் இடையிலான லீற்றர் டீசல்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற் கொண்டுள்ளனர். இதன் போதே பெருந் தொகையான டீசலை கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, 12.7 மி.மீ. ரக 2250 ரவைகள் மற்றும் மோட்டார் குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். டீசல் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் இராணு வமும், பொலிஸாரும் தொடர்ந்து பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலப்பகுதியில் கைகலப்பு, வாகன விபத்து, பட்டாசு வெடி; 750 பேர் காயம்; மூவர் உயிரிழப்பு

சிங்கள – தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசுவெடி விபத்துக்கள் என்பவை காரணமாக 750 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளனர் என்று கொழும்பு, களுபோவில ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ஆரியவன்ச கூறுகையில், சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசு வெடி விபத்துக்கள் என்பன காரணமாக காயமடைந்து 486 பேர் சிகிச்சை பெற வருகை தந்தனர். இவர்களில் 196 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன விபத்துக்களுக்கு உள்ளாகிய 160 பேரும், கத்தி குத்துக்கு இலக்காகிய 58 பேரும், விளையாட்டின்போது காயமடைந்த 29 பேரும் கிசிச்சை பெற வந்தனர். பட்டாசு வெடி விபத்து காரணமாக ஒருவரே சிகிச்சை பெற வந்தார்.

புத்தாண்டு காலப் பகுதியில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிடவும் இவ்வருடம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கைகலப்பு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். இதேவேளை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில், புத்தாண்டு காலப்பகுதியில் 264 பேர் சிகிச்சை பெற வந்தனர். இவர்களில் 61 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர். வீதி விபத்து காரணமாக 43 பேரும், கைகலப்பு காரணமாக 21 பேரும், வீட்டு வன்முறை காரணமாக 37 பேரும், பட்டாசு வெடி விபத்து காரணமாக 3 பேரும் சிகிச்சை பெற வந்ததாக அவர் கூறினார்.

கும்புறுப்பிட்டிய வாக்குச் சாவடியிலே எண்ணும் பணி

திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு நடைபெற உள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளும் அதே இடத்திலே நடத்தப்படும் என திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய கூறினார். மோசடிகள் இடம்பெற்றதையடுத்து கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.

இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பண்டிகைக்கு வீடு சென்றோர் வேலைக்கு திரும்ப நேற்று முதல் விசேட ரயில், பஸ் சேவைகள்

train.jpgபுத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் வேலைக்கு திரும்புவதற்காக நேற்று (15) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி 26 மேலதிக ரயில்களும் 400 இ. போ. ச. பஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு மேலதிகமாக பண்டாரவளை நுவரெலியா, ரம்புக்கன, மாகோ, காலி ஆகிய இடங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

இதேவேளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ. போ. ச. பஸ்கள் குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 19ம் திகதி வரை அவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இ. போ. ச. கூறியது.

இந்திய கிழக்கு மாநிலங்களில் கடும் சூறாவளி: 76 பேர் பலி

இந்தியாவின் கிழக்கு மாநிலங் களில் கடுமையான புயல் வீசிய தால் பெங்கால், பீஹார் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டன.

கடந்த புதன்கிழமை இப்புயல் வீசியது. நாற்பது நிமிடங்கள் வரை இப்புயல் வீசியது, இதனால் இவ் விரு மாநிலங்களிலும் சுமார் 116 பேர் உயிரிழந்தனர் எனவும் 76 பேரின் சடலங்களே கண்டெடுக்கப் பட்டன. ஐம்பதாயிரம் வீடுகள் சேத மடைந்தன.

மரங்கள், வீட்டுக் கூரைகள், மின் கம்பங்கள் என்பன வீதியில் இடிந்து விழுந்து கிடந்தன. மின் சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலை பேசிகளும் செயலிழந்தன. இப்பிர தேசமெங்கும் மக்கள் பதறியடித்துக் கொண்டோடினர். போக்குவரத்து கள் யாவும் தடைப்பட்டதாக அங்கு ள்ளோர் தெரிவித்தனர். கால் நடைகள், பயிர்கள் என்பனவும் இந்தச் சூறாவளியால் நாசமடைந்தன. இடம் பெயர்ந்தோரை வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அவசர ஏற்பாடு களை அரச அதிகாரிகள் மேற் கொண்டனர்.

ஹெம்டாபத், இஸ்லாம்பூர், கலிங் காஞ்சி, கராண்டிங்கி, றைகலின் ஆகிய நகரங்கள் இந்தச் சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.