17

17

ஐ.தே.க.வில் மறுசீரமைப்பை வலியுறுத்துகிறார் சஜித் பிரேமதாஸ

unp-logo.jpgபாராளு மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி கண்டிருக்கும் நிலையில் ஐ.தே.க.வை மறுசீரமைக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றிருப்பவருமான சஜித் பிரேமதாசாவிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் உட்பட தாழ்ந்த மட்டத்திலிருந்து பிரதிநிதித்துவத்தை கட்சி கொண்டிருக்கும வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக பி.பி.சி.க்கு சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐ.தே.க. 46 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளும்கட்சி 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது.ஆளும் ஐ.ம.சு.மு.வுக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 143 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் மத்தியிலேயே அதிகாரம் குவிந்து கிடப்பதால் மறுசீரமைப்பை மேற்கொள்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கட்சியின் தலைவருக்கே அதிகளவு அதிகாரப்பகிர்வு உள்ளது என்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்காலத் தேர்தல்களில் கட்சி மேம்பாடடைய மறுசீரமைப்பு முக்கியமானது என்பதே கட்சியின் தலைமைத்துவம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு ஹக்கீமுக்கு அழைப்பு

rauff.jpgசிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. வியாழக்கிழமை இரவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஹக்கீம் கூறியுள்ளார். இந்த அழைப்பை ஹக்கீம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 ஏப்ரல் 20 இல் நாவலப்பிட்டியில் மறுவாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் தான் கொழும்புக்குத் திரும்பி வந்து தனது கட்சியுடன் கலந்தாலோசிப்பதாக ஹக்கீம் சம்பந்தனுக்கு உறுதியளித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் குரலை வலுப்படுத்துவதே எமது பிரதான அக்கறையாகும். அரச தரப்பில் சில இன மேலாதிக்கவாதிகள் உள்ளனர். அவர்கள் சில சந்தர்ப்பவாதத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று ஹக்கீம் கூறியுள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்குக் கூடவிருப்பதாக அறிவித்திருக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் சபையில் அமரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

முதலாவது சபை அமர்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமுகம் தந்து உரையாற்றவிருப்பதுடன் அன்றைய தினம் சபாநாயகர் தெரிவுடன் உப சபாநாயகர், குழுக்களின் செயலாளர் சபை முதல்வர் ஆகியோரின் தெரிவுகளும் இடம்பெறவிருக்கின்றன. இதனையடுத்து சபை அமர்வு ஒத்தி வைக்கப்படுமெனவம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாவதற்குச் சமாந்தரமாக எதிர்வரும் 18 ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் இரவு முழுவதும் பிரித்ஓதும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருக்கின்றது. மறுதினம் திங்கட்கிழமை காலையில் மகா சங்கத்தினர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.இந்த வைபவங்களிலும் பங்கேற்குமாறு தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்திருக்கின்றார்.

அமெரிக்கா, இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி

அமெரிக்கக் கடற்படையும் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம், 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம், மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.

பொன்சேகா நாளுக்குநாள் பலவீனம் பேச முடியாமல் கஷ்டப்படுகிறார் – அனோமா

anma.jpgஇராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களாக பேச முடியாமல் கஷ்டப்படுவதாகவும்,அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாக அவரை பரிசோதித்த விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருப்பதாகவும் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தனது கணவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை மூடி மறைத்து வருவதாகவும் அனோமா பொன்சேகா அரசு மீது குற்றம் சுமத்தினார்.நேற்று வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகாவின் றோயல் கல்லூரி வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் முறையிட்ட போது அவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களின் அனுதாபத்தை தேடுவதற்காக நாம் பொய் சொல்வதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்க தெரிவித்திருந்தார். நான் எனது கணவரைச்சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது உடல் நிலையில் தாக்கம் ஏற்பட்டு வருவதை உணரமுடிந்தது. இப்போது அவரால் பேசமுடியாது. கஷ்டப்பட்டு வருகிறார். வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவரமுடியாது அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்.

அவரைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு சுமார் மூன்று நாட்களாக தொடர்ந்து பரிசோதித்த பின்னர் அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து ஆறு வகையான மருந்துகளை பாவிக்க நியமித்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனது கணவருக்கு மருந்துகளை விட சூழல் வசதிகளே முக்கியமானதாகக் கருதுகின்றேன். அவரை அடைத்து வைத்து நோய்க்குள்ளாக்கி இயற்கை மரணத்தின் பக்கம் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுமே ஏற்கவேண்டியேற்படுமெனவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம் – இம்மாத இறுதிக்குள் வவுனியாவில் குடியமர்வு

வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவாரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

கட்டுநாயக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை பாதிப்பு

srilankan-airlines.jpgஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சாம்பல் பரவி வருவதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ள பயணிகள் தமது விமானப்பயணம் தொடர்பாக அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று பல பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவைகளிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக் காலை 3 மணிக்கு பிறாங்போர்ட் செல்லவிருந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. அதேபோல நேற்று நள்ளிரவு செல்லவிருந்த விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 2.55 க்கு லண்டனிலிருந்து வரவேண்டிய யு.எல்.510 விமானம் நேற்று முற்பகல் 11.40 க்கு வந்து சேர்ந்துள்ளது.லண்டனிலிருந்து நேற்று மாலை 4.55 க்கு கட்டுநாயக்கா நோக்கி புறப்படவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.விமானச் சேவைகள் தொடர்பாக 0112252861 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமம் பெற்ற வங்கிகளின் கிளைகளை வடக்கு, கிழக்கில் திறக்க மத்திய வங்கி அனுமதி

உரிமம் பெற்ற வங்கிகள் பலவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற்பாடுகளிற்கு துணைபுரி வதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டி வருகின்றன. அதன்படி கொமர்சல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, சம்பத் பாங்க் பிஎல்சி மற்றும் செலான் பாங்க் பிஎல்சி என்பன அக்கரைப்பற்று, அச்சுவேலி, களுவாஞ்சிகுடி, கிளிநொச்சி, மல்லாவி, மானிப்பாய், மாங்குளம், மன்னார், பரந்தன், துணுக்காய் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அடுத்து வரும் ஒருசில மாதங்களில் கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்குத் தேவையான அனுமதிகள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் உரிமம் பெற்ற வங்கிகளும் 2010ஆம் ஆண்டில் ரூ. 56 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் 2011ம் ஆண்டில் ரூ. 70 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் அர்ப் பணிப்புடன் செயற்படுகின்றன.

எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் – ஹக்கீம்

rauff-hakeem.jpgசிறுபான் மைச் சமூகங்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதான கரிசனையாகும். சமத்துவம், நியாயம், நல்லாட்சிக்கான சூழ்நிலை போன்றவற்றை சிறுபான்மைச் சமூகங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.இதேவேளை அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறாரா? என்று கேட்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்துள்ளார். ஐ.தே.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்திலுள்ள எவருடனுமோ நான் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. அவர்கள் என்னை அணுகவும் இல்லை. ஐ.தே.க.வுடன் நாம் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் அந்த மாதிரியான நோக்கம் கிடையாது என்று ஹக்கீம் கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தால் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்வீர்களா என்று கேட்கப்பட்டபோது அதனை மறுத்த ஹக்கீம் நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். “அரசில் இணைவது தொடர்பான இந்தக் கதைகள் அடுத்தவாரம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எனது பிரதிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியைக் கொண்டவையாகும். ஐ.தே.க.வாக்காளர்களின் அதிகளவு வாக்குகளை நான் கொண்டுள்ளேன். எனக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் என்று ஹக்கீம் தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.

காதல் காவியம் ‘மாதா’ கணனியிலிருந்து திருட்டு – ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் காவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்த ‘மாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘மாதா’ படம் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய விவரணச் சித்திரமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் நான்கு கோடி ரூபா செலவில் சுமார் ஒரு வருட காலமாக வட மாகாணத்தில் வைத்து இது படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதில் போட்டியிடும் வகையில் இந்த விவரணச் சித்திரம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவரணச் சித்திரம் அடங்கிய சகல ஆவணங்களும் கொண்ட ஹார்ட் டிஸ்க் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கூறினார்.

நாவலையில் அமைந்துள்ள அவர்களது, ‘ரூம் சினிமா கிரியேஷன்ஸ் ஹவுஸ்’ எனும் ஸ்டூடியோவில் வைத்தே திட்டமிட்ட சதிகார கும்பலொன்று கணனியிலிருந்து இதனை திருடிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வரணச் சித்திரமடங்கிய ஹார்ட்டிஸ்க் திருட்டுப் போன சம்பவம் குறித்து மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் சில சதிக் கும்பல்கள் இதனைத் திருடியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.