24

24

கண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை

keheliya-rambukwella.jpgகண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற காரணத்தினால் அமைச்சுப் பொறுப்புக்களை தற்போதைக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
 
நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் “மினி பட்ஜட்” ஜுலையில்

parliament.jpgபுதிய அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான “மினி பட்ஜட்” எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக மூன்று மாத காலத்திற்குரிய ஒரு கணக்கறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்த அமைச்சர் சில்வா, ஜுலை மாதத்தில் மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே 2011 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படு மென்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கணக்கு அறிக்கையின் பின்னர், அரசாங்கம் இதுவரை செய்த செலவுகள், வரவுகள் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அடித்தளம் இடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் நிமல், எதிர்க்கட்சி குரோத அரசியலையிட்டு நாகரிக அரசியலுக்குப் பிரவேசித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.

அமைச்சரவையில் புதுமுகங்கள்

wimal-weerawansa.gifபுதிய அமைச்சரவையில் புதிய முகங்களாக பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நேற்றுப் பதவியேற்ற அமைச்சரவையில் முன்னைய அரசாங்கத்தில் வகித்த பொறுப்புகள் மாற்றப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் பிரதி அமைச்சர்களாகப் பின்வரும் புது முகங்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிருபமா ராஜபக்ஷ, லலித் திஸாநாயக்க, சரண குணவர்தன, விஜிதமுனி சொய்ஸா, வீரகுமார திஸாநாயக்க.

அடுத்த சில மாதங்களுக்குள் அரசியலமைப்பில் மாற்றம்

parliament.jpgநாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரச சேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் விளைதிறனுடன் பணியாற்றுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படுமென அவர் கூறினார். கிராமத்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இப்போது முழுப் பிரதேசத்திற்குமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அந்த நிலையைத் தோற்றுவித்த விருப்பு வாக்கு முறைமை இல்லாமற் செய்யப்படுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நிறைவுற்றதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலாவது செய்தியாளர் மாநாட்டை நேற்று (23) கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தியது. இதில் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளர் டலஸ் அழகப்பெரும உப தலைவர்கள் நிமல் சிறிபால டி சில்வா டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினர்.

“நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் யாப்பு மறுசீரமைக்கப்படும். எந்த நிறுவனங்களினதும் தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுமென்றும், 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்து வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக் கப்படுமென்றும் அவர்கள் கூறினர்.

ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவையில் இடம்பெறாதமை குறித்து ஆச்சரியம்

arumugam.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஆறுமுகம் தொண்டமானுக்கு முக்கியமான அமைச்சுப் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவை பட்டியலில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.அவரின் கட்சியைச் சேர்ந்த முத்துசிவலிங்கத்துக்கு முக்கிய பொறுப்பான பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லையா? என்று கேட்கப்பட்டபோது அவருக்கு முக்கியமான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என்றும் அரச உயர்மட்டத்துடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் ஆறுமுகம் தொண்டமானுக்குக் கால்நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதாகவும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சில வட்டாரங்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இ.தொ.கா.வட்டாரங்களிடம் கேட்டபோது, முக்கிய அமைச்சுப்பதவி ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பெரும்பாலும் அடுத்த இரு தினங்களில் ஆறுமுகம் தொண்டமான் முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன

தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ

ranil-mano.bmp  தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ கணேசனின் கட்சி இன்று தீர்மானம் தனித்து செயற்படுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா? என்பது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவும் மத்திய குழுவும் இன்று சனிக்கிழமை கூடித் தீர்மானம் எடுக்கவுள்ளது.

“எமது இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக நாளை (இன்று) பிற்பகல் நாங்கள் சந்திக்கவுள்ளோம் ” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து தான் வெளியேறுவதாக ஜனநாயக மக்கள் முன்னணி வியாழக்கிழமை கூறியிருந்தது. ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உறுதியளித்ததன் பிரகாரம் தேசியப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் வழங்காததால் ஐக்கிய தேசிய முன்னணியுடனான உறவை ஜனநாயக மக்கள் முன்னணி முறித்துக்கொண்டது