ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே. முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். சமீப காலமாக தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்படும் நபராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் மனோகணேசன். ஐ.தே.கட்சியுடன் இணைந்து அக்கட்சி முன்னெடுத்த போராட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர் இன்று….
சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் களமிறங்கி வெற்றி பெற்றார்கள். கிட்டத்தட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரைப் போலவே அரசியல் செயற்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்ட நீங்கள் தற்போது அதுவொரு இனவாதக் கட்சியெனக் கூறுகிறிர்களே!
அதுவொரு இனவாதக் கட்சியென எமக்கு நன்றாகத் தெரியும். அப்போதைய காலகட்டங்களில் அக்கட்சியுடன் இருந்து பல விடயங்களைச் செய்திருக்கிறோம். முள்ளை முள்ளால் எடுப்பது போல ஒவ்வொரு விடயத்தையும் அங்கிருந்து கொண்டே அதனை மாற்றியிருக்கிறோம்.
இன்று ஐ.தே.கவுக்கோ அதன் யானைச் சின்னத்திற்கோ வாக்களிக்கக் கூடிய நிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த மாகாண சபைத் தேர்தலில்கூட ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட எமது உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருக்கும் அதேசமயம் ஐ.தே.க வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பதைப் பார்த்தோம். எமது உறுதியான பலத்தினால்தான் வெற்றிபெற எம்மால் முடிந்தது.
இந்நிலைமை மாறுவதற்கான காரணமென்ன? உண்மையில் என்ன நடந்தது?
கொழும்பு மாவட்டத்தில் நாம் சக்திவாய்ந்த கட்சியாக மாறி வருவதை ஐ.தே.கவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அது எப்போதும் எம்மை அழித்து விடும் நோக்கிலேயே செயற்பட்டிருக்கிறது. ஐ.தே.கவின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க கட்சியின் பேரினவாதப் பிரிவின் தலைவராக செயற்படுகிறார். இவருக்கு தனிப்பட்ட இலட்சியம் இருக்கிறது.
ஐ.தே.கவின் தலைவர், உப தலைவர் அல்லது பிரதித்தலைவராக வரவேண்டும் என்ற அவாவில் இருக்கிறார். ஆனால் அந்தளவிற்கு அவருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. கோட்டே தொகுதியில் ஆரம்பத்தில் அவருக்கு இரண்டரை இலட்சம் வாக்குகளாக இருந்த ஆதரவு படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது அங்கிருந்து விரட்டப்பட்டு வடகொழும்பு தொகுதியில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அத்தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அம் மக்களின் வாக்குகள் இல்லாமல் கொழும்பு மாவட்டத்தில் தனக்கு இடம் இல்லை என்பது நன்றாக அவருக்குத் தெரியும். ஜனநாயக மக்கள் முன்னணி இருக்கும் வரையில் அது இயலாத காரியமென எண்ணிய அவர் ஜனநாயக மக்கள் முன்னணியின் முதுகெலும்பை உடைத்துவிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். தேசியப்பட்டியல் மூலமாக நான் பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பை தலைவர் ரணில் மூலமாக தடுத்து நிறுத்தியுள்ளார். இதுதான் உண்மை.
எனக்குப் பதிலாக தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டிருப்பவர் மீது எனக்கு தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபமும் கிடையாது. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் துன்பங்களுக்குள்ளான போது அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து நீதியை நிலைநாட்டியவன் நான்.
இன்று ஐ.தே.க. தேசியப்பட்டியல் எனக்கூறி பின்கதவு வழியாக வந்தவர்கள் கடந்த காலங்களில் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவ்வாறான பொம்மைகளையே ரணில், ரவி கருணாநாயக்க போன்றோர் மக்களின் தலைவர்கள் எனக்கூறிக்கொண்டிருக்கின்றனர். நேர்மையும் துணிச்சல் மிக்கவர்களாக இருந்த எம்மை சதித்திட்டத்தின் மூலம் புறந்தள்ளியுள்ளனர்.
தேசியப்பட்டியல் உறுப்புரிமை என்பது ஐக்கிய தேசிய முன்னணியின் நான்கு கட்சிகளுக்கும் உரித்துடையது. தேர்தலில் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் கூட ஒரு உடன்பாட்டுடனேயே போட்டியிட்டோம். ஒவ்வொரு ஸ்தாபக கட்சிக்கும் குறைந்தபட்ச உறுப்புரிமை இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியதியாகும். அதற்கு மேலதிகமாக கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
சவாலை எதிர்கொள்ளுமுகமாகவே நான் கண்டிக்குச் சென்றேன். கொழும்பில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதல்ல காரணம். கொழும்பில் போட்டியிட்டிருந்தால் ரணிலுக்கு அடுத்ததாக நான் வெற்றி பெற்றிருப்பேன். அத்துடன் மேலும் இரு தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பார்கள். மூவரில் இருவராக குறைத்துவிட்டு நான் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிடக் காரணமென்ன? உங்களது தனிப்பட்ட முடிவாக இருந்ததா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி எடுத்த முடிவா?
எனது பிறப்பிடம் கண்டி மாவட்டம், அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க நானாக விரும்பியே கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன. தேசியப் பட்டியல் உறுப்புரிமையில் எமது கட்சிக்கென ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
20 ஆம் திகதி நள்ளிரவு வரையில் 5 பேர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும், இரு இடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கும் எமக்கும் தலா ஒவ்வொரு ஆசனங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் ரணிலுடன் உரையாடும் போதும் கூட அதனை உறுதிப்படுத்தினார்.
21 ஆம் திகதி காலை வேளையில் எமக்கும் ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை திடீரென எதேச்சதிகார முறையில் அகற்றி தமக்கு வேண்டியவர்களின் பெயர்கள் திணிக்கப்பட்டு ஐ.தே.க. தலைவரின் உத்தரவின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் நம்பிக்கைத் துரோகம். பச்சைத் துரோகம். இது தனிப்பட்ட மனோகணேசனுக்கோ, ஜனநாயக மக்கள் முன்னணிக்கோ செய்த துரோகத்தைவிட ஐ.தே.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ் மக்களுக்குச் செய்திருக்கும் பச்சைத் துரோகமாகும்.
ஐ.தே.க எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெற்றுக்கொடுக்கவில்லை என ரவி கருணாநாயக்க கூறியிருக்கிறாரே?
ஐ.தே.முன்னணி என்பது ஒரு கூட்டணி அரசியல் என்பதை முதலில் ரவி கருணாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும். தனியொரு கட்சியாக இருந்து ஆதிக்கம் செலுத்திய ஐ.தே.கட்சியின் அரசியல் வரலாறு முடிந்து விட்டது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சிகள் ஒரு கூட்டமைப்புடனேயே செயற்பட முடியும். ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறந்த கட்டமைப்பின் காரணமாகவே ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. அவ்வாறானதொரு அரசியல் கலாசாரமே தற்போது நமது நாட்டில் காணப்படுகிறது. எந்த அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஆசனம் ஒதுக்கப்படுகிறது என்ப தெல்லாம் ரவி கருணாநாயக்கவுக்கு தெரியாது. ஐ.தே. முன்னணியில் அவர் இல்லை. அவருடன் பேசவேண்டிய அவசியம் எமக்கில்லை.
எமது கட்சிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கிறது. இது ஐ.தே.கவிற்கு கிடைத்த வாக்குகளாகும். இந்த வாக்குகளின் அடிப்படையில்தான் தேசியப்பட்டியல் தீர்மானிக்கப்படுகிறது.
எமது கட்சி பெற்ற வாக்குகளை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா கூட பெறவில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மனோகணேசன் யார்? ஐ.தே.முன்னணிக்குள் நாம் வைத்திருந்த பாத்திரம் என்ன என்பது அந்த முட்டாளுக்குத் தெரியாது.
10 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவன் நான். கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறி ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டனர். சிலர் மீண்டும் ஐ.தே.கட்சியில் சேர்ந்துகொண்டனர். ஆனால் நாம் அப்படியெல்லாம் செய்யவில்லை. மு.காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். ரவி கருணாநாயக்கவின் கடந்தகால அரசியலை எடுத்துப் பார்த்தால் புரியும் அவர் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஐ.தே.கட்சிக்கு வந்தவர்.
ஆரம்பகாலத்தில் லலித் அத்துலத்முதலி, சிறிமணி அத்துலத்முதலி மற்றும் சந்திரிக்காவுடன் சென்று எல்லாம் அனுபவித்துவிட்டு வந்தவர்தான் அவர். அவரை விட அக்கட்சியின் மீது பற்று கொண்டிருந்த விசுவாசமிக்க ஒருவனாக நான் இருந்திருக்கிறேன்.
ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் தலைவராக இருக்கும் வரையில் அக்கட்சியுடன் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. ஐந்து சதத்திற்கு அவரை இனி நம்பமாட்டோம். நாம் நடத்திய அரசியல் போராட்டங்கள் ஊர்வலங்கள், பிரசாரங்கள் அனைத்தையும் ஐ.தே.க நன்கு பயன்படுத்திக்கொண்டு இப்போது உதறி எறிந்து விட்டது.
கண்டி மாவட்டத்தில் நீங்கள் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்கிர்களா?
கண்டி மாவட்டத்தில் நான் தோல்வியடைந்ததாக கருதவில்லை. வெற்றியடைந்திருக்கிறேன். தமிழ் மக்கள்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள். மனோகணேசன் தோல்வியடையவில்லை. நான் தோல்வியடையவும் மாட்டேன். இரு காரணங்களுக்காக கண்டியில் போட்டியிட்டேன். அங்கே 1994 இல் தமிழ்ப் பிரதிநிதியொருவர் கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் கொழும்பில் இலகுவாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன். தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் துன்பம் துயரம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதனை தீர்ப்பவனே தலைவன். எனக்கு ஒரு கடமை இருக்கிறது. பதவி பட்டங்களை சலுகைகளை வரப்பிரசாதங்களைத் தேடிச்செல்லும் நபரல்ல நான். அதனை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் நிரூபித்திருக்கிறேன். தமிழ் மக்கள் எனக்கு முழுமையாக வாக்களித்திருப்பார்களானால் நான் வெற்றிபெற முடிந்திருக்கும். இன்று கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தாம் விட்ட தவறை இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
அது மாத்திரமல்லாமல் அச்சுறுத்தல்களையும் மீறி வாக்களித்திருக்கலாமோ தவறு செய்து விட்டோமா என்ற குற்றவுணர்வு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
அதனையே நான் எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் மனோகணேசன் இல்லாவிட்டாலும் கூட எவரும் வந்து போட்டியிடக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் ஆரம்பித்த இந்த இயக்கம் நிச்சயம் வெற்றிபெறும்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதாக பரவலாக பேசப்படுகிறதே!
ஐ.தே. முன்னணியிலிருந்து நான் விலகிவிட்டதன் காரணமாக ஆளுங்கட்சியில் இணையப்போவதாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதனை நான் அமோதிக்கவுமில்லை. நிராகரிக்கவுமில்லை. ஐ.தே.மு.வில் இருந்து விலகியதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
நாங்கள் பாராளுமன்றத்திலும் மேல் மாகாண சபையிலும், மத்திய மாகாண சபையிலும் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்திருக்கிறோம். அதேபோல ஆளுங்கட்சியில் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. அவை கூடி வருமானால் நிச்சயம் சாதகமாக பரிசீலிப்போம். கடந்த காலங்களில் நாங்கள் செயற்பட்டதற்கு நியாயங்கள் இருந்தன. தொடர்ந்தும் இறந்த காலத்தில் வாழ்வதற்கு நாம் தயாராக இல்லை. முற்போக்கு வாதிகள் என்ற அடிப்படையில் கடந்தகால படிப்பினைகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டு இனி எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஐ.தே.க தலைவர் ரணில் செய்த துரோகத்தின் காரணமாக சலிப்படைந்து விடுபவனல்ல நான்
எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ர்கள்?
கட்சியின் உயர்பீடம் இது குறித்து ஆராய்ந்து வருகிறது. இன்றைய அரசியல் யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.
அதுபோல தென்னிலங்கையிலும் மலையகத்திலும் இருக்கும் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இறுதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்தத் தேர்தலின் பின்னர் இ.தொ.கா தலைவர் நண்பர் ஆறுமுகன் தொண்டமானுடன் தொடர்புகொண்டு பேசினேன். அரசியல் ரீதியில் நாமிருவரும் இரு துருவங்களாக இருப்பினும் எம்மிடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்பு இருக்கிறது. பலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
எதிர்வரும் காலங்களில் ஒன்றாக இணைந்து செயற்படுவது பற்றி ஆராய்வோம் எனக்கூறியிருக்கிறார். இதில் ஏனைய கட்சிகளையும் உள்வாங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
நன்றி-தினகரன்
பேட்டிகண்டவர்:- பி. வீரசிங்கம்