மே 18 2009ல் பிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்யும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டியா மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து உள்ளது. www.littleaid.org.uk இலங்கையில் இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களைப் பொறுப்பேற்று முற்றிலும் இலவசமாக விநியோகித்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் – Medicine Without Borders (Denmark) அமைப்பினரால் வழங்கப்பட்ட மருந்து வகைகளை இலங்கையில் பெறுப்பேற்று அதன் விநியோகத்தை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளின் இறுதித் தொகுதி இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் முதல் லிற்றில் எய்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த நான்கு மாதங்களாக மேற்குறிப்பிடப்பட்ட உள்ளுர் வைத்தியசாலைகளின் தேவையையொட்டி அவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கையில் இம்மருந்துப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகத்தைப் பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவப் அமைப்பில் இருந்து இருவர் உட்பட நால்வர் இலங்கை வந்திருந்தனர். இவர்களில் இருவர் டென்மார்க் தேசிய நாளிதலான பொலிரிக்கன் பத்திரிகையில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் டென்மார்க் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த Hans Frederik Dydensborg லிற்றில் எய்ட் இன் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டதில் தங்களுக்கு எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் ஆலோசனைக்கு அமைய நீர்கொழும்பில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு இடம் ஒன்னை லிற்றில் எய்ட் 10000 ரூபாய் மாத வாடகைக்குப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் மருந்து மற்றும் பொருட்களை தனியார் சேமிப்பு இடங்களில் வைக்காமல் தங்களது கட்டிடத்திலேயே விநியோகிக்கப்படும் வரை பாதுகாக்க முடியும். இலங்கைக்கு விஜயம் செய்த டென்மார்க் குழு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்சை சந்தித்து உரையாடி இருந்தனர். இக்குழு அருணாச்சலாம் இடப்பெயர்வு முகாமுக்குச் சென்றும் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு இருந்தனர்.
இம்மருத்துவ உதவிக்கு முன்னதாக 1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள் – டென்மார்க் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.)
இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் லிற்றில் எய்ட் இன் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.
இந்த ஓராண்டில் குறிப்பாக வன்னி முகாம்களுக்கு மக்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கி இருந்த ஆரம்பக்கட்டத்தில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்க்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் மேற்கொண்ட நூவிநியோகத் திட்டத்திற்கும் லிற்றில் எய்ட் நிதிப் பங்களிப்புச் செய்திருந்தது. மேலும் மன்னாரில் டிலா பிரதர்ஸின் ஒத்துழைப்புடன் அகிலன் பவுண்டேசன் செஞ்சோலைச் சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.
லிற்றில் எய்ட் உதவி வழங்குவதை மட்டுமல்ல உதவி வழங்கும் நிறுவனங்களை தாயகத்தில் உதவி தேவைப்படும் மக்களுடன் தொடர்புபடுத்தி விடுவதிலும் கவனம் எடுத்து வருகின்றது. லிற்றில் எய்ட் நேரடியாக நிதி உதவிகளைப் பெற்று மேற்கொண்ட உதவிகள் 10 000 புவண்களுக்குள் அமைய, சர்வதேச மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக் கொடுத்து வரும் உதவிகள் சில மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படுகின்றது.
லிற்றில் எய்ட் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிதிப் பரிமாற்றங்களையும் அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் இணையத்தில் வெளியிட்டு வருகின்றது. தமிழ் பொது அமைப்புகள் மத்தியில் உள்ள பொறுப்பற்ற ஒளிவு மறைவான கணக்கியல் நடைமுறைக்கு மாறாக லிற்றில் எய்ட் திறந்த புத்தகமாக உள்ளமை அதன் நம்பகத்தன்மையின் வெளிப்பாடாக உள்ளது.
லிற்றில் எய்ட் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk