அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.
இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும், அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும், ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இலங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநியோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.