வன்னி யுத்தம் முற்றுப் பெற்று ஓராண்டுகள் நினைவு கூரப்படுகின்றது. சுதந்திர இலங்கையில் காலம் காலமாக தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியம் என்பது நினைவு கூரலிற்கு அப்பால் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. இதற்கு தமிழ் மிதவாதத் தலைமைகளோ தீவிரவாதத் தலைமைகளோ விதிவிலக்கல்ல. வன்னி யுத்தத்தைத் தடுப்பதற்கான அரசியல் வழிமுறைகள் இருந்த போதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவத் தலைமையும் அது தெரிவு செய்திருந்த ஒருவழி அரசியல்பாதையும் தமிழ் மக்களை பணயம் வைத்து தன்னுடன் மக்களையும் உடன்கட்டையேறச் செய்துள்ளது. ஆதன் ஓராண்டை சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசியத் தலைமை தனது அரசியல் உயிர்ப்பிற்கு கையிலெடுத்துள்ளது.
சுதந்திர இலங்கையில் பல்வேறுபட்ட சமூக முரண்பாடுகள் இருந்த போதும் பிரதான முரண்பாடாக இருப்பது ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. இந்த முரண்பாட்டில் குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற தமிழ் சமூகத்திற்கும் ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் இடையிலான முரண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பிரதான முரண்பாடாக இருந்து வந்துள்ளது. ஒடுக்குகின்ற குழுமம் அல்லது ஒடுக்குகின்ற அரசு தானாக முன்வந்து ஒடுக்குமுறையைக் கைவிடப் போவதில்லை. அது தொடர்ந்தும் ஒடுக்குமுறையை தக்க வைத்துக் கொள்வதற்கான வழிவகைகளை தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டே இருக்கும். ஆந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்கின்ற சக்திகளுக்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய பொறுப்பு உண்டு. அம்மக்கள் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை தடுத்து அல்லது மட்டுப்படுத்தி அம்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்களின் பொறுப்பு.
ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் அரசியல் என்பது தமிழ் மக்களின் வாழ்வியலை மிகமோசமாகப் பின்னடையச் செய்துள்ளது. கடந்தகால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி 2009, 1983, 1977, 1956 என்று சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையைக் காட்டி அரசியல் செய்கின்ற போக்கே தொடர்கின்றது. இந்தக் காலகட்டத்திற்கு இன்னும் சற்றுப் பின் சென்று பிரித்தானிய காலனித்துவம் தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம் என்று பழிபோடுவதும் இவர்கள் கையாள்கின்ற மற்றுமொரு யுக்தி. சுpங்கள பேரினவாதம், காலனித்துவம் பூச்சாண்டிகளெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரியாததல்ல. இதனை ஆண்டாண்டு காலம் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை அவசியமில்லை. இந்தச் சூழலில் உங்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறையை நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியுமா? துமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முடியுமா? அதனைச் செய்ய முடியாத தலைமைகள் அப்பொறுப்பில் இருந்து தங்களை வெளியேறுவதே அழகு.
ஆனால் இதுவரை அவ்வாறு நிகழவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களில் சவாரி செய்த தமிழ் தலைமைகள் சவாரி செய்வதில் ருசி கண்டனவேயன்றி இலக்கு நோக்கி நகரவில்லை. மாறாக அதற்கு எதிராகவே நகர்ந்துள்ளன. ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாதத் தீவிரவாதத் தமிழ் தேசியவாதத் தலைமைகளால் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள எவ்வாறு முடிந்தது என்ற இந்திய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து சரி செய்தோம்;. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தோம்.’ என்று தெரிவித்திருந்தார்.
ஒடுக்குமுறை மேற்கொள்கின்ற அரசிடம் தனது இலக்குநோக்கி இருந்த விவேகமும் தூரநோக்கும் அதனிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தங்களை ஏகபிரதிநிதிகளாகக் அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. அதனாலேயே அரச இயந்திரம் ‘புரஜக்ற் பீக்கன்’ என்று கால அட்டவணை போட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டும் அறியாமல் இருக்கவில்லை தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையுமே அறியாமல் இருந்துள்ளனர்.
மூன்று தசாப்த கால விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துப் போராளிக் குழுக்களையும் மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகைளயும் அழித்து தங்களை ஏக பிரதிநிதிகள் என்று அறிவித்தனர். மே 16 2009 வரை அவர்கள் ‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி யுத்தம்’ என்றும் ஒவ்வொரு நிலப்பரப்பையும் இழக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் ‘தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்றும் அறிவித்தனர். ‘தலைவர் திட்டமிட்டபடியே பின்வாங்குகிறோம். உள்ளுக்கு விட்டு அடிப்போம்.’ ஏன்று அரசியல் இராணுவ ஆய்வுகள் களைகட்டின. 30 ஆண்டுகால போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மே 17 2009ல் இரவோடு இரவாக வரலாறாகிப் போனார்கள். வுரலாற்றை கற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தங்கள் உச்சவிலையை அதற்குச் செலுத்தினர். இவர்களால் அப்பாவி மக்களும் தங்கள் உச்சவிலையைச் செலுத்த வேண்டி ஏற்பட்டது.
ஆனால் இந்த மிக மோசமான நிலையிலும் மிதவாத தீவிரவாத தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையை இதுவரை மீளாய்வு செய்யவில்லை. தமிழ் தேசியவாதத்தை புலம்பெயர்ந்த மண்ணில் உசுப்பி விட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களில் உள்ள இரத்தக் கறையைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஒரு சமூகத்தைத் தலைமை தாங்குவதற்கான அடிப்படைத் தகுதியை இழக்கின்றனர். இத்தலைமைகள் கடந்த காலத் தவறுகளை ஏற்க மறுப்பது அதே தவறுகளை அவர்கள் மீண்டும் விடுவதற்கே வழிகோலும். தமிழ் மக்களுக்காக தமிழ் தலைமைகளால் எதனையும் சாதிக்க முடியாமல் போனதற்கான முழுமுதற் காரணம் அவர்களுடைய கட்சிசார்ந்த அல்லது தனிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளே. தங்களுடைய அரசியல் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் என்றும் மேற்கொண்டதில்லை. எதிரியின் மீது பழியைப் போட்டுவிட்டு எதிரியின் பலவீனத்தில் அரசியல் செய்கின்ற தலைமைத்துவமே இதுவரை இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது.
இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள முதலாளித்துவக் கட்சிகளே தேர்தலில் மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கத் தவறும்பட்சத்தில் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை ஏற்று கட்சிப் பதவியில் இருந்து வெளியேறி புதிய தலைமைக்கு வழிவிடுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்த மிதவாதத் தலைமையாக இருந்தாலென்ன, தீவிரவாதத் தலைமையாக இருந்தாலென்ன எப்போதும் மக்கள் அபிப்பிராயம் பற்றி கணக்கிலெடுத்ததில்லை.
எஸ் ஜே வி செல்வநாயகம் நோய்வாய்ப்படும் வரை அவரே தமிழரசுக் கட்சித் தலைவர் தலைவர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படும் வரை அவரே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம், தமிழீழ விடுதலைப் புலிகளால் அல்லது வேறுவழிகளில் கொல்லப்படும்வரை ஒரே தலைமையே அந்தந்த இயக்கங்களை வழிநடத்தியது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் கொல்லப்பட்டாரா இல்லையா என்ற விவாதம் தொடர்கிறது. அதற்கு இன்னமும் தலைமை இல்லை.
வன்னியில் மக்கள் தினம்தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் ஆட்சியாளர்களுடன் பேச மறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தற்போது அதே அரசுடன் பேசத் தயார் என்கிறார். இதையே அன்று அந்த அரசுடனும் பேசி தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் பேசி பணயமாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஆயிரக் கணக்கான வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ‘யுத்தத்தின் ஆரம்பத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தித்து இருக்க முடியும்’ என எம் கே சிவாஜிலிங்கம் 2009 பெப்ரவரியில் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. இன்று சகல பழியையும் தமிழீழ விடுதலைப் புலிகளிலும் இலங்கை அரசின் மீதும் போட்டுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஆர் சம்பந்தன் தக்க வைத்துள்ளார். வன்னி மக்களின் இவ்வளவு அழிவிலும் ஆர் சம்பந்தனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொறுப்பு உள்ளது. இந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை தடுத்து நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாத இயலாமைக்காக ஆர் சம்பந்தன் தனது தலைமையைத் துறந்திருக்க வேண்டும்.
அதேபோல் தமிழ் மக்களால் தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன் போன்றவர்கள் தங்கள் தலைமையை தொடர்ந்தும் வைத்திருப்பது மக்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது. இவர்கள் தங்கள் தலைமைகளைத் துறப்பதுடன் இவ்வமைப்புகள் தங்கள் அரசியல் பற்றி தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டும். அவசியமானால் கூட்டிணைவை ஏற்படுத்துவது அமைப்பினைக் கலைத்துவிடுவது பற்றி இவர்கள் சிந்திப்பது அவசியம்.
தமிழ் மக்களின் தலைமைத்துவம் என்பது யாருக்கும் ஆயுட்காலப் பதவியல்ல. குறிப்பிட்ட காலத்தில் இத்தலைமைகளால் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியாது போயுள்ள நிலையில் இவர்கள் தங்கள் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குவதே மேல். தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அம்மக்களின் விடுதலையை வென்றெடுத்து அம்மக்களால் நேசிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அந்தத் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளவில்லை. தமிழ் சமூகம் அவ்வாறான தலைவர்களை உருவாக்காது போனது அல்லது அவ்வாறானவர்கள் கொல்லப்பட்டமை மிகவும் துரதிஸ்டமானது.
பொதுவாகவே இந்தத் தலைமையை தக்க வைத்துள்ளவர்கள் அமைப்பில் கட்சியில் உள்ளவர்கள் வற்புறுத்துகின்றார்கள், தலைமையை ஏற்பதற்கு ஆளில்லை போன்ற நொண்டிச்சாட்டுக்களையே தெரிவிப்பது வழமை. நீங்கள் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்து இருந்தால் ஒருவர் எப்படி தலைமை ஏற்க முன்வருவார். இத்தலைமைகளுடைய இவ்வளவு கால அனுபவமும் சாணக்கியமும் தமிழ் மக்களுக்கு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு தங்கள் ஆயுட்காலம் முழுவதும் தலைமை தாங்குவதற்கு மட்டுமே அவை பயன்படுகின்றது.
இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி நாம் செல்லாது இருக்க வேண்டுமானால் தமிழ் மக்களினால் இதுவரை காலமும் எதனையும் சாதிக்க முடியாது போன காரணங்களை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். தமிழ் சமூகத்தின் அரசியல் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுக்கு வன்னி மக்களை அழைத்துச் சென்ற தமிழ் அரசியல் தலைமைகள் அவர்கள் தயாகத்தில் இருந்தாலென்ன புலம்பெயர் நாடுகளில் இருந்தாலென்ன அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு தங்கள் தலைமைகளில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதிய திட்டமிடலை புதிய தலைமையொன்று முன்னெடுக்க வேண்டும். ஒரே குட்டையில் கூறிய மட்டைகள் தலைமைத்துவத்தை தங்கள் ஆயுள் வரைக்கும் தக்கவைப்பதற்கும் பழைய புதிய பிளாவில் பழைய கள்ளு அருந்தும் அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலமே இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழ் மக்கள் நகர்த்தப்படுவதை தடுக்க முடியும்.
இனியொரு முள்ளிவாய்க்கால் செய்திடோம் என்று சங்கே முழங்கு!!!