ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.
ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.
ஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ – 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.
பதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல், இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.