மத்திய மாகாணத்திற்குட்பட்ட நுவரெலியா மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்பது எவரும் அறிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்திலிருந்தே அதிகமான தமிழர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். அதாவது, ஆளும் கட்சி சார்பில் மூவரும் எதிர்க்கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். அத்துடன், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக தலா ஒருவர் வீதம் இருவர் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்றுள்ளனர். அதன்படி நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகப் பாராளுமன்றத்தில் ஏழு பிரதிநிதிகள் உள்ள அதேவேளை, அவர்களில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் உள்ளனர்.
மேலும், இம்மாவட்டத்திலுள்ள அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரேதசசபைகளில் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரு பிரதேசசபைகளின் தலைவர்களாகத் தமிழர்களே பதவியிலுள்ளதுடன், சகல பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழர்கள் அங்கம்வகிக்கின்றனர்.
அத்துடன், மாவட்டத்திலுள்ள ஒரே மாநகரசபையான நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், மாவட்டத்தில் இரு நகரசபைகளான அட்டன் டிக்கோயா மற்றும் லிந்துல தலவாக்கலை ஆகிய நகரசபைகளின் தலைவர்களாகவும் தமிழர்களே உள்ளனர்.
அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக இடம்பெற்று செயற்படுவதானது, தாம் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வது என்ற கருத்து நாட்டில் பரவலாக அரசியல்வாதிகளிடமுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை நிலை.
அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தவும் செயற்பட வேண்டும். அதுவே அவர்களின் பொறுப்பு. அதற்காகவே மக்கள் அவர்களைத் தம்சார்பாகத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்மக்களால் பாராளுமன்றத்திற்கும் மாகாணசபைக்கும் மாநகர, நகர, பிரதேசசபைகளுக்கும் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தமிழ்மக்களின் மொழி, கல்வி, தொழில், சுகாதாரம், இருப்பிடம் உட்பட பல அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள்.
அவர்களுக்குரிய கடப்பாட்டில் மொழியுரிமையைப் பேணுவது முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நாட்டின் அரசகரும மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு தமிழர் தனது அரசாங்கத் தொடர்புகளையும் அன்றாடக் கடமைகளையும் தமிழ்மொழியில் ஆற்றிக்கொள்ளும் உரிமை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள இந்த மொழியுரிமையை மேலும் வலியுறுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேசசபைகளின் எல்லைக்குள்ளும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகச் செயற்படுத்த வேண்டுமென்று விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த ஆகிய நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழ்மொழி நிர்வாக மொழியாகச் செயற்படுத்தப்படவேண்டுமென்று 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 1105/25 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்பே பொது நிர்வாக அமைச்சு ஊடாக பல்வேறு தமிழ்மொழியின் செயற்பாடு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் நிர்வாக உரிமை தொடர்பாகவும் செயற்படுத்தும் முறைமை தொடர்பாகவும் தெளிவான விளக்கங்கள், வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் நடைமுறையில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு ஏன் இடம்பெறுகின்றது என்பது பற்றி ஆராயவேண்டும். இதற்கு முதற்படியாகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தைக் கவனத்தில் கொள்வது பொருத்தமாயமையும்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல அரச அலுவலகங்களிலும் மொழிப் பிரச்சினையால் தமிழ்மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். அரச அலுவலகங்களில் பணி புரிபவர்கள் சிங்கள மொழி மூலம் பணியில் சேர்ந்தவர்கள், உயர் அதிகாரிகளும் அவ்வாறே இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பணியாற்றும் தமிழ் அலுவலர்கள் தமிழ்மொழியில் கடமையாற்றும் வாய்ப்போ வசதியோ அற்றவர்களாக வெறும் தொடர்பு அலுவலராகவே அதாவது, மொழி பெயர்ப்பாளர்களாகச் செயற்படவேண்டியுள்ளது.
மாநகர,நகரப் பிரதேசங்களின் நிலையும் அதுவே. தமிழர்கள் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட அரசியல் அமைப்புகளில் அதிகாரம் செலுத்தினாலும் நிர்வாக மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கையாலாகாத நிலையிலேயே உள்ளனர்.மேற்படி அமைப்புகளில் அதிகாரம் செலுத்தும் தகைமையில் உள்ளவர்கள் இது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.அதிகாரம் செலுத்தச் சட்டப்படி உரிமையிருந்தும் ஏவலாளாக இருப்பது சமூகத்தின் மதிப்பை கீழிறக்கம் செய்துவிடும். ஏனையவர்கள் ஆளும் இனமாகவும் சட்டப்படி உரிமைகளிலிருந்தும் தமிழர்கள் ஆளப்படும் இனமாகவும் கருதப்படுவது மட்டுமல்ல, கொள்ளப்படவும் வழியமைத்துவிடும். தற்போது நடைமுறையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியாகக்கூடிய பிரதிநித்துவங்களைக் கொண்டவர்களாகவிருந்த போதும் யதார்த்த நிலையில் மொழியுரிமை இழந்து ஆளப்படும் மக்கள் கூட்டமாகவேயுள்ளனர்.
அரசியல் தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கப்பாலிருந்து நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களின் அடிப்படை உரிமையான மொழியுரிமையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம், பேணலாம், உறுதிப்படுத்தலாம் என்பது தொடர்பில் சகல தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புணர்ந்து செயற்பட மக்கள் பிரதிநிதிகள் முன்வருவார்களா?
நன்றி: தினக்குரல்