நோர்வே நியூஸ் இணையத்தள ஆசிரியர் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூன் மற்றும் அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்திற்கு எதிராகப் பதிவு செய்த வழக்கில் ஏசியன் ரிபியூனுக்கு எதிராக சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சேது என்று அறியப்பட்ட நடராஜா சேதுரூபனுக்கு அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் செய்திகளை ஏசியன் ரிபியூன் வெளியிட்டதாக அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்தை சுவீடன் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இவ்வாறான அவதூறுகளால் நடராஜா சேதுரூபனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு 125 000 குரோணர் (12 000 பவுண்கள்) நட்டஈடு செலுத்தும்படி சுவிடன் நீதிமன்றம் ஏசியின் ரிபியூனுக்கு எதிரான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக நட்டஈடு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (தீர்ப்பு : Judgement_on_KTR_V_Sethu )
சுவீடன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பையும் அதன் அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திலும் இலங்கையில் வெளியாகும் பத்திரிகையிலும் முன் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது. மேற்படி தீர்ப்புக்கு எதிராக ஏசியன் ரிபியூன் மேன்முறையீடு செய்வதாக இருந்தால் யூன் 2ம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீடு செய்ய வேண்டும்.
‘இத்தீர்ப்பு நீதியை நிலை நாட்டியுள்ளது. நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னைப் புலி உறுப்பினராகக் குற்றம்சாட்டி எனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே ஏசியன் ரிபியூன் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இந்தத் தீர்ப்பு உண்மைக்காக நான் போராடியதற்குக் கிடைந்த வெற்றி.’ என்று நடராஜா சேதுரூபன் இத்தீர்ப்புத் தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்தார்.
நடராஜா சேதுரூபன் பற்றி ஏசியன் ரிபியூனில் வெளியான செய்திகளும் கட்டுரைகளும் இலங்கையிலும் வேறு நாடுகளில் உள்ள இணையத் தளங்களிலும் பரவலாக மீள்பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏசியன் ரிபியூனுக்கு இலங்கை அரசு நிதியுதவி வழங்கி வருவது தெரிந்ததே.
சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய கற்கைகளுக்கான மையமே ஏசியன் ரிபியூனை இயக்குகின்றது. ஆதனால் இவ்வழக்கு சுவீடனிலேயே நடத்தப்பட்டது. நோர்வேயில் வாழும் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூனுக்கு எதிரான வழக்கை நோர்வே அரச சட்டத்தரணிகள் மூலமாகப் பதிவு செய்திருந்தார். ஏசியன் ரிபியூனின் மேன்முறையீடு செய்து அது தோல்வி காணும் பட்சத்தில் நட்டஈடு சில மில்லியன் குரோணர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி வீரகேசரி பத்திரிகைக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அப்பத்திரிகை நட்ட ஈட்டினை வழங்கப் பணிக்கப்பட்டது. ஆனால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மற்றுமொரு தமிழ் ஊடகத்திற்கு எதிராக ஊடகவியலாளருக்கு எதிராக மானநட்ட வழக்கினை தொடுத்து அதில் வெற்றி பெற்றது அண்மைக்காலத்தில் இதுவே முதற்தடவையாகும். இவ்வழக்கு ஊடகங்கள் தங்கள் செய்திகள் கட்டுரைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சுயாதீன ஊடகவியலாளர்களாக அறியப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் செயற்பட்டவர்கள். செய்திகளையும் கட்டுரைகளையும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிரசுரித்து வந்திருந்தனர்.
இணைய வலையத்தின் அனாமதேயத் தன்மையினால் புனைப்பெயர்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் மிகமோசமாக நடத்தப்பட்டு வந்தது. இதில் கே ரி ராஜசிங்கம், நடராஜா சேதுரூபன் உட்பட பலரது பெயர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் நன்கு அறியப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வகையான தனிநபர் தாக்குதலை மட்டுப்படுத்தவதற்கு உதவும் வாய்ப்பு உள்ளது.
நடராஜா சேதுரூபன் தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள்:
புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்
சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்
முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்