வடமராட்சி மாணவி ஒருவர் இனந்தெரியாத சிலரால் வானில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். வல்லைவெளிப் பற்றையொன்றிற்குள் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவியொருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அடி காயங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த மாணவியான சண்முகராஜா அனுசியா (வயது 18) என்ற மாணவிக்கே இந்நிலை ஏற்பட்டது. வான் ஒன்றில் வந்தவர்கள் இவரை பலவந்தமாக அதில் ஏற்றிச்சென்று, கடுமையாக தாக்கிய பின் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவர்கள் அம்மாணவியின் வாயினுள் திராவகம் ஒன்றை பருக்கியதாகவும், மாணவி கூக்குரலிடவே அவரைத் தள்ளி விழுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது இது கடத்தல் சம்பவமா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது தெரியவரவில்லை.
இது இவ்வாறிருக்க, வல்லை வெளியில் பற்றை ஒன்றிற்குள் காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். அவ்வழியால் சென்றவர்களின் தகவலையடுத்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் இப்பெண் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் வழங்கிய தகவலில், தான் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி முகாமில் தங்கியிருந்து விட்டு பின் கரவெட்டிப் பகுதியில் வசித்து வந்ததாகவும், கடந்த திங்கள் கிழமை காலை வீதியில் தன்னை வழிமறித்த நான்குபேர் வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும், செவ்வாய்கிழமை கண்விழித்து பார்த்த போது பற்றையொன்றில் கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் கழுத்து, பிடரிப் பகுதிகளில் சிறிய கத்தியொன்னிறனால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இப்பெண்மணி வழங்கிய முறைப்பாட்டில் அவரின் பெயர் வி.லங்காதேவி வயது 37 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.