_._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._
வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம் முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை.
இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.
ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில் மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின் விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.
பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.
ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.
தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான் ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.