புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.
புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.
சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.