11

11

கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! : ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்

EPDPLogoஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எந்தவொரு நபரிடம் இருந்தும் எவ்வித நிதியும் அறவிடுவதில்லை என்பது எமது மக்கள் அறிந்த விடயமாகும்.
இந்த நிலையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வதந்திகளைப் பரப்புவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 021 2229824 0112503467 0777781891 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கு உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகச் செயலாளர்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – ஈபிடிபி

பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையும் பலவீனமும் ஆணாதிக்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றது! : விஸ்வா

Feminism_Faces _._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._

வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம்  முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை. 

இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது  பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத  இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில்  மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின்  விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.

பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.

ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.

தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை  அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே  நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான்  ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை  இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள்

eastern-province.jpgகிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக இருவர் இன்றுகாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மாகாணசபை அமர்வு இன்று காலை கூடியபோது ஐ.ம.சு.மு யின் உறுப்பினராக காத்தான்குடியைச் சேர்ந்த கே.எல்.எம். பரீட் மற்றும், ஐ.தே.க. உறுப்பினராக புல்மோட்டையைச் சேர்ந்த ஆர்.எம். அன்வர் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பாராளுமன்றத்துக்குத் தெரிவான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.தெளபீக் ஆகியோரின் வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு வணிகர்கள் தங்களுக்கான நட்டஈடு படிவத்தை தாமதமின்றி பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு அறிவிப்பட்டுள்ளது!

கிளிநொச்சி, முல்லைத்தீவு வணிகர்கள் தங்களுக்கான நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த நட்டஈட்டுப் படிவத்தை பூர்த்தி செய்யாத வணிகர்கள் அதற்கான படிவங்களைப் பெற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்குமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வணிக, கைத்தொழில், வேளான் ஒன்றியம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வணிகர்கள் கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள இலக்கம் 13, 2ஆம் பண்ணை எனும் முகவரிலும், முல்லை மாவட்ட வணிகர்கள் முதலாம் யுனிற், யோகபுரம், மல்லாவி எனும் முகவரியிலும் உள்ள அலுவலகங்களில் இப்படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு இவ்வொன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே வேளை, இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற பகுதிகளிலிருந்து மீட்கபட்டு, கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் மோட்டார் சைக்கில்களில் நூறு மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஏனையோர் தங்கள் மோட்டார் சைக்கில்களை அடையாளம் காட்டுவதற்கா கால அவகாசம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற புதுக்குடியிருப்பு,  மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட ஐயாயிரம் மோட்டர் சைக்கிள்களும், ஏழாயிரம் சைக்கில்களும் முதற்கட்டமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் ஜி,ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்

வவுனியா நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி எஸ். சுhர்ள்ஸ் தெரிவித்தள்ளார்.இதே வேளை வவுனியா மாவட்டத்திலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட சில பகதிகளிலிருந்து இராணுவம் தமது முகாம்களை அகற்றும் பணியினை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் முதற் கட்டமாக பேயாடி கூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 60 குடும்பங்கள் மிளக்குடியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம் – ஜூன் மாதத்தில் அரசியலமைப்பு மாற்றம்

maithri-pala.jpgஅரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறையினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.  இன ரீதியான பிரச்சினைகள், அரசியலமைப்பு அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இது பற்றி இங்கு கருத்து வெளியிடும் போது செனட் சபை முறைமை பற்றி குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும்போது பாராளுமன்றத்தினால் மாகாண சபைகளுக்கு சட்டமொன்றை விதிக்க முடியும்.இவ்வாறான சூழ்நிலைகளில் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தி அங்குள்ள பிரச்சினைகள் பற்றி பேசும் ஒரு ஏற்பாடாகவே இந்த செனட் சபை அமையும்.இதில் 25 இற்கு மேற்படாத உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அநேகமாக ஒவ்வொரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் அந்தந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இருக்கக் கூடும்.எனினும் இந்த ஏற்பாடானது இப்படிதான் இருக்குமென்பதை இப்போதே உறுதிபடத் தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கைகொடுக்க வேண்டும் – ஜனாதிபதி

p.jpgஇனங் களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேசநாடுகள் கைகொடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். கடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இராஜதந்திரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனதுரையில், மேலும் தெரிவித்ததாவது, உங்களில் பலர் நீண்ட காலமாக இலங்கையில் சேவை செய்தவர்கள். இதற்கு முன் நான் உங்களை நாட்டில் பாரிய பகுதியொன்று புலிகளின் அதிகாரத்திலிருந்த போதே சந்தித்திருக்கிறேன். அன்று போலவே இன்றும் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை எமது அரசாங்கம் மதிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேறு வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே சகல இன மக்களுக்கும் அச்சுறுத்தலாக விருந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நாம் பல முறை முயற்சித்துள்ளோம். நான் முதல் தடவை ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன். ஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். அதற்காக நாம் உயர் மட்டப் பிரதிநிதிகளை அனுப்பினோம். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

உலகில் மிக மோசமான பயங்கரவாதக் குழுவுடன் நாம்யுத்தம் புரிந்த போதும் நாம் முழுமையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக செயற்பட்டதைப் பெருமையுடன் கூற முடியும். புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்த 2,60,000 மக்களில் 70 வீதமானோரை நாம் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியமர்த் தியுள்ளோம்.

அவசரக் கால சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம். அதில் பல சரத்துக்களை நீக்கியுள்ளோம். இதனை மிகவும் கவனமாகவே மேற்கொண்டோம். புலிகளின் ஆயுதங்கள் இப்போதும் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நாடு கடந்த அரசசொன்றை நிறுவுவதற்காக புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான தேர்தலொன்றை நடத்தவும் முயற்சித்தனர்.

இது போன்று வெளிநாடுகளில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவசரகால சட்டத்தை மேலும் தொடர முடிவெடுத்தோம். பயங்கரவாதத்தினால் பல உலக நாடுகள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளமையை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கான மக்கள் இதனால் இடம்பெயரவும் நேர்ந்துள்ளது. இதனால் எமது தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

முரண்பாடான தவறான கருத்துக்கள், பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலங்கை மீண்டும் முகங்கொடுக்க நேரிடுமோ என்பதில் அரசாங்கம் மிக கவனமாகச் செயற்படுகிறது. அதனால் நாட்டின் பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

நான் இது சம்பந்தமாக வெளிநாட்டுத் தூதுவர்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனைக் கருத்திற் கொண்டு நீங்கள் உங்கள் நாடு களில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது விடயத்தில் தூதுவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியதன்

முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறேன். பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற போதும் அரசாங்கத்துடனும் வெளிநாட்டமைச்சுடனும் தொடர்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி எமது நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேலும் பலப்படுத்த தூதுவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

நாம் எமது கலாசாரம் மரபுரிமைகளுடன் கட்டுப்பட்டவர்கள். அதற்கிணங்கவே நாம் தீர்மானங்களை மேற்கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையுடனும் நாம் இத்தகைய விதமாகவே நட்புறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் போன்றே மதங்களுக்கிடையிலான நட்பு றவில் இலங்கை முன்னுதாரணமாக வுள்ளது. அதனால்தான் எத்தகைய பிரச்சினை வந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அத னைத் தீர்க்க முடிகின்றது. இதனால் மனித உரிமை மற்றும் இன நல்லுறவு தொடர்பில் ஆழமான உணர்வுண்டு.

தேசிய நல்லுறவில் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் கவனமெடுத்துள்ளது. அதற்காக மீளிணக்க ஆணைக் குழுவொன்றை விரைவில் நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மூன்று தசாப்த காலங்கள் தந்த துயரங் களை எதிர்கால சந்ததியும் சந்திப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது. 2002ம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை அதன் வீழ்ச்சி முதல் 2009 மே மாதம் இடம்பெற்ற நெருக்கடி நிலைமை வரை ஆராய்வதற்கு இவ்வாணைக் குழுவுக்கு உரிமையுண்டு. இந்த ஆணைக்குழுவில் அங்கம் வசிப்போர். நாட்டின் கெளரவத்தையும் சுயாதீனத்தையும் நம்பகத் தன்மையையும் பாதுகாக்கும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் என்பது எனது நம்பிக்கை.

இதேவேளை விரைவில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இதேவேளை எமக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது சர்வதேச சமூகம் எம்முடன் சேர்ந்திருந்ததை கூறியாக வேண்டும். அதே போன்று சர்வதேச நாணய நிதியம் எமது அபிவிருத்தி நடவடிக்கைகளில் திருத்தி தரும் வகையில் பங்களிப்பு செய்ததையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும்.

உலகளாவிய பிணைப்பை போன்றே ஸ்திரம் எமது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என நாம் நம்புகிறோம். அதற்கேற்ப ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட்ட பல்தரப்பு மேடைகளில் எமது பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்தும் பேணவிரும்புகிறோம். நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக நீக்கம் – அமைச்சர் மைத்திரி

drage.jpgஅரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 47 மருந்துவகைகள் நேற்று முன்தினம் முதல் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இரு வாரங்களில் மேலும் 97 வகை மருத்துகள் கிடைக்க உள்ளதோடு ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் காலத்தில் இவ்வாறான மருந்துத் தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடு சுமூக நிலைக்கு வரும். மருந்துக் கம்பனிகள் தொடர்பிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். தேவையான மருந்து வகைகளை விமானப் படை விமானம் மூலம் தருவிக்க ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் அனுமதி வழங்கியுள்ளனர் என்றார்.

இந்த வருடம் இரு பட்ஜட்டுகள் – ஜுலையில் டிசம்பர் வரை மினி பட்ஜட் வருட இறுதியில் 2011க்கு முழு பட்ஜட்

parliament2.jpgஇந்த வருடத்தில் இரு வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்காக ஜுலை மாதத்தில் மினி வரவு செலவுத் திட்டமொன்றும் 2011 ஆம் ஆண்டிற்காக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முழுமையான வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது திரைசேரியினூடாக பணம் பெற்று அரச செலவினங்களை சமாளிக்க அரசாங்கம் தயாராவதாக ஐ. தே.க. குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறோம். அழுத்தம் காரணமாக நாம் வரவு செலவுத் திட்டத்தை தாமதப்படுத்தவில்லை.

ஏப்ரல் 22ஆம் திகதியே புதிய அமைச்சுகள் நியமிக்கப்பட்டன. பல அமைச்சுக்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவுகளின் அடிப்படையிலேயே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதால் இதில் தாமதம் ஏற்பட்டது.  எஞ்சிய மாதங்களுக்கான மினி வரவு செலவுத் திட்டம் ஜுலை மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். 2011ஆம் ஆண்டிற்கான முழுமையான வரவு செலவுத் திட்டம் வருட இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

landmines.jpgவவுனியா வுக்கு அப்பாலுள்ள இரணை இலுப்பை குளத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணியின் போது பிரான்ஸ் நாட்டு அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கண்ணவெடி வெடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று எப். எஸ். டி. நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எப். எஸ். டி. நிறுவனம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுவிஸ் நாட்டு அமைப்பாகும். இந்நிறுவனத்தில் தொழில் நுட்ப உத்யோகத்தராகப் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.

இரணை இலுப்பைக்குளத்தில் நேற்று காலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கண்ணி வெடியொன்று வெடித்ததால் இந் நபர் உயிரிழந்திருக்கிறார்.

இந் நபர் கண்ணி வெடி விபத்துக்கு உள்ளானதும் உடனடியாக எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும், மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவரின் சடலமும் வவுனியா சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெறுவதற்கு இந்திய அரசு அனுமதி கருணாநிதி சட்டசபையில் அறிவிப்பு

parwathy.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை முதல்வர் கருணாநிதி நேற்று திங்கட்கிழமை சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பார்வதி சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, பார்வதி கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரிந்துரைத்தார். இதையடுத்து மத்திய அரசு பார்வதி மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. இதற்காக அவருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.