16

16

யாழ் அல்வாயில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையே கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த குடும்பத்தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மோதல்கள் கடந்த சனிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இரு தரப்பம் எதிரெதிர் தரப்புகளின் விடுகளுக்குள் புகுந்து கண்டபடி வாள்வீச்சில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற இவ் வாள்வெட்டுச் சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை இரட்ணசிங்கம், என்ற 8 பிள்ளைகளின் தந்தை, 20 வயதான முருகதாஸ் என்ற இளைஞன், இரட்ணசிங்கத்தின் 10 வயது மகளான ஜென்சி, அவரது மைத்துனியான 30 வயது ஜெயரஞ்சி, ஆகியோரே படுகாயமடைந்தவர்களாகும் இம்மோதல்களைத் தடுக்கும் முயற்சியில் பருத்தித்துறை பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘தேசிய நல்லிணக்க ஆணைக்குழு’ சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்’ தமிழ்தேசிய கூட்டமைப்பு பா உ பா அரியநேத்திரன்

மகிந்த ராஜபக்ச அரசின் புதிய அறிவிப்பான தேசிய நல்லிணக்க ஆணைக்கழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறியுள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் ‘பம்மாத்து’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசினால் ஏழு பேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று  ஜனாதிபதியினால் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரவிக்கும் போதே திரு. அரிய நேத்திரன் இவ்வாறு கூறினார்.

“இலங்கை சுந்திரம் அடைந்ததாக கூறப்படும் 1948ஆம் ஆண்டு தொடக்கம் 61 வருடங்களாக பல்வேறு ஒப்பந்தங்களை தமிழ் மக்களுடன் செய்து கொண்ட தெற்குத் தலைமைகள் இப்போது தமிழர்களின் பிரச்சினை குறித்து ஆராய ஆனைக்குழு நியமிக்க முன்வருவது வேடிக்கையான விடயமாகும்.  செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – டட்லி ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பிரதான இரு கட்சிகளுடன் செய்யப்பட்டன. அதன் பின்னர், திம்பு பேச்சவார்த்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தன்னாட்சி அதிகாரசபை யோசனை, சுனாமி மீள் கட்டமைப்பு உடன்பாடு, அனைத்துக்கட்சி தெரிவுக்குழு, நிபுணர் குழு என்றெல்லாம் காலத்திற்குக் காலம் எத்தனையோ ஒப்பந்தங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த 61 ஆண்டுகளாக இவ்வாறு வந்து போன உடன்பாடுகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கான மூலகாரணத்தை கண்டறிய முடியாத அரசு இப்போது தமிழர் பிரச்சனைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்கவிருப்பது காலத்தை இழுத்தடிக்கவும், தமிழர்களையும், இந்தியா உட்பட சாவ்தேசத்தையும் ஏமாற்றுவதற்கேயாகும், அத்தோடு நடைபெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடனானதுமாகும்” எனவும் திரு.பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த நாளை ஏற்பு – ஈரானில் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

mahinda-raja_1.jpgஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.

ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

ஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ – 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.

பதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல்,  இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் நேற்று காலமானார்

பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் இவரும் ஒருவர். மிருதங்க வித்துவானாக விசேட தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.

மிருதங்கக்கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர்.கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும்,டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.

இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.அன்னாரின் பூதவுடல் இல. 89/2, பஸல்ஸ் லேன், வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸ்சேவைக்கு தெரிவானோர் வடக்கில் கடமையாற்றுவர்

sri-lanka-police.jpgயாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 355 தமிழ் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் ஆறு மாதகால பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியைப் பெற்ற பின்னர் அவர்கள் தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவார்கள்.இவ்வாறு யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சர் நிஹால் மெண்டிஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முப்பது வருடங்களின் பின்னர் தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படுகின்றனர். அரசின் திட்டத்தின்படி மூவாயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொலிஸ் அத்திட்சர்களே கடமையாற்றுவார்கள்.களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் சேவையில் சேர்ந்துள்ள சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் தமிழ் இளைஞர்களுக்கும் வழங்கப்படும்.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பகுதிகளில் சேவையாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு விரைவில் நியமனக்கடிதம் வழங்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் நோக்கமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் போக்குவரத்து விதிமுறைகள்,மது,போதைவஸ்து என்பவற்றை தடுப்பது சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட வெள்ளம் – 37,000 பேர் கடும் பாதிப்பு

9colombo.jpgநாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் சுமார் 7848 குடும்பங்களைச் சேர்ந்த 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்த போதும் கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. கொழும்பு, களுத்துறை மாவட்டத்தில் சுமார் 4108 குடும்பங்களைச் சேர்ந்த 20,540 பேர் பாதிக்கப்பட்ட போதும் நேற்று இவர்கள் தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். எனினும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பகுதியில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதால் சுமார் 3740 குடும்பங்களைச் சேர்ந்த 16,410 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை அந்தந்த கிராம சேவகர் மட்டத்தில் வழங்குவதற்கு அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. வத்தளை பகுதியில் 14 கிராம சேவகர் பிரிவுகளே பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அழுத்கம, பண்டாரகம பகுதியே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதுரமீமுல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்த குடும்பங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன.  கொழும்பிலும், களுத்துறை மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி நேற்று குறை வாக காணப்பட்டதால் இடம்பெ யர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நேற்று செல்ல ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக சுபைர் நாளை பதவியேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மொகமட் சரிப் சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்கிறார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்காக மாகாண அமைச்சர் பதவியையும், சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சுபைர் புதிய அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி ஏற்பு விழா நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற வுள்ளது. நிகழ்வில் புதிய அமைச்சர் மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம முன்னிலையில் பதவி ஏற்பார் என ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றவர் கைது

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்த சம்பவம் தொடர்பாக 28 வயது டைய சந்தேக நபர் ஒருவரை பதுரலிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாடசாலைச் சிறுமி மோல்காவ அஸ்கெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் வைத்திய பரிசோதனைக்காக நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. பதுரலிய பொலிஸார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.