இந்தியா வின் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் வெடித்துச் சிதறிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முன்பகுதி சிதைந்து கிடந்த இடத்தில் புதையுண்ட நிலையில் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய உண்மையை கண்டறிய முடியுமென நம்பப்படுகிறது. கறுப்புப் பெட்டி தற்போது மும்பாய்க்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதேவேளை விமான விபத்து குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குன ரகம் தனி விசாரணை நடத்துகிறது. இந்த குழு அமெரிக்க நிபுணர் குழுவின் உதவி களையும் நாடியுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் நிபுணர்கள் இந்தியா வர உள்ளனர். விமானப் பாதுகாப்பு விசாரணை அதிகாரி ஜியோ கேசர் தலைமையில் இந்தக் குழுவினர் வருகின்றனர். அவர்களுடன் விபத்துக் குள்ளான விமானத்தைத் தயாரித்த போயிங் விமான நிறுவன நிபுணர்களும் மங்களூர் வருகின்றனர்.
நாளை செவ்வாய்க்கிழமை அவர்கள் மங்களூர் வந்து சேருவார்கள். இந்திய நிபுணர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். இதன் பின்பே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்.
மங்களூர் விமான விபத்து: 128 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மங்களூரில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானவர் களில் 128 பேரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக எயர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து எயர் இந்திய நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுடன் எயர் இந்தியா நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் எயர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
மங்களூர் விமான நிலையத்தில், ஓடு பாதையின் தொடக்கத்தில் தரை இறக்காமல், சற்றுத் தள்ளி இறங்கியதால் விபத்து நேரிட்டதாக விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.
துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு வந்த ஏயார் இந்தியா விமானம், தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு ஆகும். அது கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
மங்களூர் விமான நிலைய ஓடுபாதையின் நீளம் 2,450 மீட்டர். ஓடு பாதையின் முடிவில் உள்ள பாதுகாப்பு பகுதி 90 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் வி. பி. அகர்வால் புதுடில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மலை உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தில் தினமும் 32 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இறக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள ஓடுபாதைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அவற்றை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே போக்குவரத்துக்கு அனுமதித்தனர். விபத்துக்குள்ளான விமானம், நல்ல முறையில் இருந்தது. அதன் தரை இறங்கும் என்ஜின்கள் சிறப்பாக இயங்கி வந்தன. அதன் விமானிகள், விமானம் மங்களூரை அடைவதற்கு 10 கி.மீ. இருக்கும் போதே விமானத்தின் வருகை பற்றி விமான கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு 4 கி.மீ. தொலைவில் விமானம் வந்தபோது, அது தரை இறங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது, காற்று எதுவும் வீசவில்லை. மழையும் பெய்யவில்லை. 6 கி.மீ. தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வெளிச்சம் இருந்தது. விமானம் தரை இறங்க இந்த வெளிச்சம் போதுமானது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. விமானிகளும் பிரச்சினை எதுவும் இருப்பதாக அபயக்குரல் கொடுக்கவில்லை.
ஆனால், விமானத்தின் சக்கரம், ஓடுபாதையின் தொடக்க முனையில் கால் பதிக்காமல் சற்றுத் தள்ளி கால் பதித்ததால் ஓடுபாதையை தாண்டியும் விமானம் ஓடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இவ்வாறு வி. பி. அகர்வால் கூறினார்.
மங்களூர் விமான நிலைய இயக்குநர் பீட்டர் ஆபிரகாம் கூறியதாவது, பொதுவாக, ஓடுபாதையின் எல்லைக்கு சற்று முன்பே விமானம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த விமானம், எல்லையைத் தாண்டி ஓடியுள்ளது. அதன் உதிரிப்பாகங்கள் சிதறியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது, விமானி தனது கணிப்பில் தவறு செய்திருக்கலாம் அல்லது விமானத்தின் பிரேக்கில் கோளாறு இருந்திருக்கலாம். இது பற்றி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.