01

01

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை? யுத்தகாலத்தில் கொல்லப்பட்டவர்களுடையவை?

கிளிநொச்சி நகரை அண்டியுள்ள கணேசபுரம் பகுதி மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை என தெரியவருகின்றது. ஆனால் இத் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று முன்தினம் (29-05-2010) மீள் குடியேற்றப்பட்ட கணேசபுரம் பகுதி வீடொன்றின் மலசலக்கூடக் குழியிலிருந்து கறுப்பு நிறப் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து சடலங்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து நேற்றுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல சடலங்கள் அப்பகுதியில் இருக்கலாம் என்கிற அச்சம் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து எமக்கு கிடைத்துள்ள பொது மக்களின் தகவலின்படி போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் எனவும், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின் நடைபெற்ற சம்பவமாக இது இருக்க சாத்தியமில்லை எனவும் தெரிய வருகின்றது.

எது எவ்வாறிருப்பினும், வன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் இச்சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளமை மக்கள் மனங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு களுத்துறையில் பயிற்சி!

யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட 266 இளைஞர் யுவதிகள் நேற்று (May 30 2010) பொலிஸ் பயிற்சிக்காக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சேவைக்கு யாழ். மாவட்டத்திலிருந்து நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 18ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள்  களுத்துறை பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

இவர்கள் May 30 காலை 9.00 மணியளவில் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வு ஒன்றின் பின்னர் 11 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மரட்ண தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச விசாரணை நடத்துவதற்கான அவசரம் எதுவும் இல்லை: கெஹலிய

kahiliya.jpgஇலங் கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே தேவை- நவநீதம்பிள்ளை

nawaneethapillai.jpgஇலங்கையில் நடந்து முடிந்த போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே தேவை. அதுவே தகுந்த, சிறப்பான பலனைத்தரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு விசாரணையின் மூலமே நீதியும், நீண்டகால நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 14வது அமர்வில் திங்களன்று உரையாற்றிய நவநீதம்பிள்ளை  உலகளவில் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் அங்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில், போர்க்காலத்தில் நிகழ்ந்த சில விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள,  படிப்பினைகள் மற்றும் நல்லிணக் கத்துக்கான ஆணைக் குழு குறித்தும் குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை  இருந்த போதிலும், முந்தைய அனுபவங்கள் மற்றும் புதிய தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கின்ற போது, இந்த விடயம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச சுயாதீன ஏற்பாடே சிறப்பானது என்றும் அத்தகைய சர்வதேச ஏற்பாட்டுக்கே, இலங்கையிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் மக்களின் நம்பக்கை கிடைக்கும் என்றும்  அவர் தெரிவித்தார். மனித உரிமை நிலைவரங்களை பொறுத்தவரை சர்வதேச மட்டத்திலான சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை அதில் முதலாவதாக இலங்கை நிலைவரம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐயாயிரம் குடும்பங்கள் இம்மாதம் மீள்குடியமர்வு

House_Without_Roofஇடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இம்மாதம் (ஜூன் மாதம்) கிளிநொச்சி மாவட்டத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றத் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியுடன், இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முடிவடைந்துள்ள மே மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் 3,000 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாதத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவ தாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக அவரிடம் நேற்று வினவியபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் சில கிராமங்களில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதுடன் அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன. கரச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேசங்களில் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள குடும்பங்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடியகற்றப்பட்டு வரும் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றன. கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுறும்போது சகல மக்களும் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேத்ராவில் செய்தி ஒளிபரப்பு நேரம் மாற்றம்

tv.jpg‘நேத்ரா’ தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழ்ச் செய்திகள் நாளை 2 ஆம் திகதி முதல் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகுமென ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி நடப்பு விவகாரப்பிரிவின் பணிப்பாளர் எம். என். ராஜா தெரிவித்தார்.

தனுன திலகரட்னவை 30இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு – ‘தவறினால் சொத்துக்கள் பறிமுதல்’

danu.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவ்வாறு ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரட்ன நேற்று உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவு தொடர்பாக நாடு முழுவதும் பொது அறிவிப்பை மேற்கொள்வதுடன், தனுன நாட்டில் மிகவும் தேவைப்படும் மனிதன் என சிங்களத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நீதிமன்ற வளவிலும் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டுமாறும் நீதிவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் தனுன திலகரட்ன எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதைக் கூறும் அறிவித்தல்கள் பலவற்றை தயார்படுத்துமாறும், தனுன திலகரட்னவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதிவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார். ஹைகோர்ட் நிறுவன மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான தனுன திலகரட்னவை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் பேரில் தனுனவை கைது செய்யுமாறு கூறும் சுவரொட்டிகள் நேற்று நீதிமன்ற வளவிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன நீதிமன்ற உத்தரவுகள் பலவற்றை அசட்டை செய்துள்ளதை அவதானித்திருப்பதாக குறிப்பிட்ட நீதவான், தனுனவின் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இரகசிய பொலிஸார் விடுத்த அறிக்கையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன மாறுவேடத்தில் வசித்து வருவதாகவும் அவரது நடையுடை பாவனையை அவர் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறினர். சந்தேக நபரான தனுன திலகரட்னவை கைதுசெய்ய வேண்டுமென்றும், அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனக பண்டார நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஹைகோர்ட் நிறுவன பணிப்பாளரான வெலிங்டன் டியோட் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சரத் சிரிவர்தன, தனது கட்சிக்காரரை பிணையில் விடுமாறு கேட்டுக்கொண்டார். எனினும் நீதிவான் அவரது பிணை மனுவை நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி வரை வெலிங்டன் டியோட் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டார்.

பலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துருக்கி கப்பல் தலைமையில் ஆறு கப்பல்கள் சைப்பிரஸிலிருந்து காஸாவுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது சைப்பிரஸ¤க்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலியப் படையினர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது கப்பல்களில் 600 பேர் இருந்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்திற்கும் உள்ளாகின. சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலிடம் கோரியுள்ளன.

கஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல்களில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தன்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த முற்றுகை தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அவசரமாக கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தை கேள்வியுற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தெதன்யாஹு கனடா மற்றும் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ விஜயத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய சகாவான அமெரிக்க சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதன் சூழ்நிலை குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் நடுவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வத்திக்கான் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளையிட்டு அதிர்ச்சியும் கவலையும் தெரிவிப்பதாக மத்திய கிழக்கு சமாதானத் தூதுவர் டோனி பிளெயர் கூறியுள்ளார். இடம்பெற்ற முற்றுகை பலவந்தத்தின் முறையற்ற பாவனை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல் ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கை’ என்று அரபு லீக் கூறியுள்ளது. 22 நாடுகளைச் சேர்ந்த அரபு லீக் அவசர கூட்டம் நடத்தி இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று அரபு லீக் தலைவர் அமீர் மூஸா கூறியுள்ளார்.

காஸாவில் ஆட்சி நடத்தும் ஹமாஸ், சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் இறங்குமாறு முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலிய உதவி தூதரக அலுவலகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிக பலாத்கரத்தை பிரயோகித்துள்ளதாக சம்பவம் பற்றி சர்வதேச மன்னிப்பு சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் மெல்கம் ஸ்மார்ஸ் கூறியுள்ளார்.முற்றுகை தொடர்பாக ‘உடனடியான நியாயமான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்றும், காஸா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இந்நிலையில் தனது படையினர் தற்பாதுகாப்புக்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களே முதலில் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் விடுதலை

chandran.jpgதிரைப் படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சந்திரன் ரட்ணம் நேற்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

நுகேகொடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். மீட்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டவை என உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரை கங்கொடவில மஜிஸ்திரேட் நீதவான் அநுரகுமார ஹேரத் விடுதலை செய்தார்.

4 கிலோ 955 கிராம் எடையுள்ள வெடிபொருட்களும் 7 டெடனேட்டர்களும் இவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி களான காலிங்க இந்த திஸ்ஸ, ஹேமந்த கமகே ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜரானார்கள். சந்திரன் ரட்ணம் வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

பூநகரி – யாழ். குருநகர்; படகு சேவை நாளை ஆரம்பம்

பூநகரிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நாளை 2ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு படகுச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற் கட்டமாக நான்கு படகுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங் களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.