07

07

இலங்கை அதிகாரிகளுக்கு ஜப்பான் புலமைப் பரிசில்

இலங்கை அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த 60 இளம் அதிகாரிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் ஐந்து ஆண்டு புலமைப்பரிசில் திட்டமொன்றை அமுல் செய்யவுள்ளது.  இதற்காக இரண்டாயிரத்து 290 இலட்சம் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக ஜப்பான் ஒதக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு அமைச்சுக்களில் இருந்து முதல் தொகுதியாக 15 இளம் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஜப்பானில் முதுமாணிப் பட்டப்படிப்பினை ஜப்பான் சர்வதேச பல்கலைக்கழகம், கிறிஸ்ரியன் பல்கலைக்கழகம், ஹிரோசிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்வர். பொதுக்கொள்கை, பொது நிதி, பொது நிர்வாகம், பிராந்திய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த முதுமாணிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

வவனியா நகரில் உள்ள விடுதி ஒன்று ‘சீல்’ வைக்கப்பட்டது!

வவுனியா நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்ததையடுத்தே மூடப்பட்டது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நீதித்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதன்படி அவ்விடுதி உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரிந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு. விடுதி ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.

இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியமுறையை முன்மொழிந்தது சம்பந்தரா? சங்கரியரா? : ஆர் சம்பந்தனுக்கு வி ஆனந்தசங்கரி பதில்

Anandasangaree VSambanthan_R_TNAஅரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்:

இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டன. பொதுவாக இத்தேர்தல் சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வருவது வழக்கம். அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்க மாட்டார்களென்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன?

இலங்கைத் தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்படி கூற்று கேலிக்குரியதே. கடந்த தேர்தலில் அவரது கட்சி யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65.119 வாக்குகள் மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9% மட்டுமே. திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90% வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத்தேர்தலில் முற்று முழுதாக தமது “நாணயத்தை” இழந்து விட்டார். ஐரோப்பிய  ஒன்றியம் பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கையை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்த அளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்றல் மற்றும் C.M.E.V ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஸ்தானங்களில் 22 ஸ்தானங்களை கைப்பற்றினர்.

மேலும் மிகப்பிரபல்யமான தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை து~;ப்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசிமாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றில் கலைக்கப்பட்டிருக்க வேண்டும், அன்றேல் செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஆரம்பித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 2 ஸ்தானங்களையும் ரெலோவிற்கு 2 ஸ்தானங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் E.P.R.L.F இற்கும் தலா ஓரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஸ்தானங்களைக் கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தில் வீற்றிருந்தனர்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப் புலி இயக்கத்தினரையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியிரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தப்பாக வழிநடத்தாது இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ்மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது.

தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்தி ஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பே 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இத்தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவர். ஆனால் இப்போது “உண்மை” வெளிப்பட்டு விட்டது. கடந்த ஆறு ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமக்குரிய கடமைகளைச் செய்யாதபடியினால் கடும் ஏமாற்றத்துடன் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டவென காத்திருந்த மக்கள பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியது மட்டுமன்றி அவர்களது பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும் பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் பாதுகாக்க தவறிவிட்டனர் என்பதையும் உணருகின்றனர். செல்வாக்குமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழிகாட்டியவர்களே இப்பேரழிவுகளுக்கும், சொத்துக்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்ட ஈட்டை பெற்றுத்தருவதில் இவ் 22 பிரதிநிதிகளும் ஏன் மௌனம் சாதித்தனர்.

அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும் படி சர்வதேசமே வேண்டி நின்ற போதும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சி தலைவராகவோ அன்றேல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவோ இருந்தும், வடகிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்து விட்டார். கடைசி நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தப்பாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு.சம்பந்தன் அவர்கள் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெல்ல வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் 65119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

திரு. சம்பந்தன் அவர்கள் கூறியது போல தாம் சரத் பொன் சேகாவிற்கு பெற்றுக் கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயமென்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்து கொண்ட முறையே. புத்தி ஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் சுதந்திர ஊடகவியாலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். சுருங்கக் கூறின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உல்லாசப் பயணத்திலும் சிலர் தமது பராளுமன்ற பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை இனப்பிரச்சினைகளை தெரியப்படுத்துவதாக எனக் கூறிக்கொண்டு சிலர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ச்சியுற வைப்பதில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் இன்னும் சிலர் சர்வதேச சமூகத்தை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இயங்க வைக்க போதியளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை காலத்தையும் செலவிட்டனர்.

காயமுற்ற விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும், சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டதையும் மக்களுக்கு முற்றுமுழுதாக மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள கொண்டு வரப்பட்டபோதும் யுத்த காலத்தில் இப்பேர்பட்ட இழப்புக்கள் தவிர்க்க முடியாதென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகின்றது.

இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து என்னை ஓரங்கட்ட மாபெரும் முயற்சி செய்தனர் என்பதை யாரும் மறுத்திட முடியாது. பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்பை கொண்டு திட்டமிட்டு என்னை ஏன் ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன தீங்கு செய்தேன்? நான் எவருக்கும் எப்போதும் எந்த தீங்கும் செய்யாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையாற்றி வந்தேன்.

நான் சொல்லக் கூடாத விடயமாக இருந்தாலும் தேர்தலில் எனக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு தேசிய இழப்பு மட்டுமன்றி, இதற்கு பொறுப்பானவர்களும் விரைவில் முழுநாடும் மக்களும்  உணர்வதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் கைவிடப்பட்ட அநாதைகள் என்பதையும் உணர்வார்கள். எனது அறிவுரைகளுக்கு தமிழ் மக்கள் செவிசாய்த்திருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும். சில சுயநலமிக்க தலைவர்கள் என் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவோ, அதற்கேற்ப செயற்படவோ விரும்பவில்லை. மாறாக ஒரு மனிதனின் பொறுமையின் எல்லைக்கப்பால் சென்று விமர்சனங்களையும், வீண்பழிகளையும் என் மீது வாரி இறைத்தனர். எம் நாட்டில் அரசியல் விரோதிகளை அவமதிக்கும் ‘துரோகி’ என்ற சிறப்புப்பட்டத்தையும் தந்து மகிழ்ந்தனர்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும் முன்வைத்ததும் நானே. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிகமுக்கியமான இரு வேட்பாளர்களிடம் தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச்சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்த பின்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதான இந்திய அரசியல் முறையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக இருந்தபோதும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இது பற்றி பேசியுள்ளேன்.

அதுமட்டுமன்றி பலமட்டங்களிலும் உள்ள பலருடனும் இது பற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமயப் பெரியவர்கள், வணக்கத்திற்குரிய ஆண்டகைகள், மகா நாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறையை நான் முன்வைத்தமைக்கு முதற்காரணம் ‘சமஸ்டி’ ‘ஒற்றை ஆட்சி’ ஆகிய சொற் பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும். இரண்டாவதாக பாக்கு நீரினைக்கு அப்பால் உள்ள 80,000,000 தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.

பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடு இருந்த போதும் மிக மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் அந்நாட்டின் ஐனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியமக்கள் 2வீதமாக இருந்தும் சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியராவார். தவிரவும் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும் இந்து மதமும் எமது கலாச்சாரம் பண்பாடு அத்தனையும் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னும் ஒரு முக்கிய விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ் நாட்டில் அக் கோஸம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத்தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.

இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு  எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இது சம்பந்தமாக ஐனாதிபதி அவர்கள் எதுவித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஐனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும் கூட ஐனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். ஐனாதிபதித் தேர்தலின் பின்பே ஐனாதிபதி இதை கூறினார் என்பது திரு சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு. திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறு எவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஓர் தீர்வைக் காண்பதே பிரதானமானது. புத்தி ஐPவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படி இருப்பின் அதற்குரிய காரணம் என்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்ட வேண்டும் என சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டும் என்றும் எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வும், துரோகி என எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழி எனக் கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ் பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வை அடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை எற்படுத்தும். எவருக்கேனும் என் மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டு கால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்க விடக் கூடாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  இந் நாட்டில் இன்றுள்ள மிகச்சிறிய அளவிலுள்ள ஐனநாயக தமிழ் அரசியல் வாதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். எனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு  விடுதலைப் புலிகளால், மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி  அவர்கள் மக்களைக் கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ வெறுப்படையவோ தூண்டுவதில்லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுத பாணிகள் ஆக்குவதில்லை. தம் மக்கள் மீது வரி வசூலிப்பதும் இல்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஐனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்துதிரியவே. யாராவது பல்கலைக்கழக மாணவர்களை அல்லது புத்திஐPவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன்.

இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ் மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்?; கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும் அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டிபோட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராம சபையின் தலைவராக 1965ம் ஆண்டும் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டும் 1977ம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு. சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.

“ஐனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்” என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஐனநாயக வாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு  இனப்பிரச்pசனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஐனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்”;.

இலங்கை சுதந்திரம் அடைந்து 2002ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திரதினத்தைக் கொண்டாடிய விழாவில் ஐனாதிபதியாக தெரிவானதன் பின் முதல் அவர் தடவையாக அவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் தன் உரையில் கூறியதாவது “தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் மொராகாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே, அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்தவெறி பிடித்த புலிகளின் கோரிக்கைக்கு இணங்க நாம் தயாராக இல்லை. ஆனால், நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்த பட்சம் திரு. ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்”;. ரூபவாகினியிலும் வேறு தொலைக்காட்சிகளிலும் இவ் உரை ஒளிபரப்பப்பட்டது.

மேலும், ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கம் அளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வேளையில் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஐh, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் பல்லாயிரக்கனக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான மக்கள் சொத்தும் பொதுச் சொத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஐPவிகளும், அரசியல் ஆய்வாளர்களும் சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப் பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரே வழி என, எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர்.

கனடாவில் இருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரே வழ,p என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்தமை பச்சைத் துரோகமான செயலாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? ஓர் தனி மனிதனை வேட்டையாட எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி யார்? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்தசில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதேல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்த பட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து தமிழருக்கு ஒரு விரோதியை அடையாளம் கண்டுள்ளனர். அது நானே. எல்லா நேரமும் மக்களை ஏமாற்றமுடியாது. விரைவில் ஒரு நாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரும்.

குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச் சென்ற ஒரு பல்கலைக்கழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்போது ஆட்சேபித்தவன் நானே. பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஐPவன் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதையும் எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசிற்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயகத் தலைவருக்கு தென்னலங்கையிலுள்ள ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும் எனது கடமையை எனது நாட்டிற்கும் இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறு  வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகிறேன் என அப்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.

பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தைப் போக்கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான இந்திய அரசியல் அமைப்பை ஏற்கவைக்குமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி 

கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா விஜயம்

ep-cm.jpgஇந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின்போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ஏற்பாடு

Mahinda Rajapaksaஇந்தியா விற்கு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராஜாங்க விஜயத்தை மேற்கொள்ளும் தருணத்தில் இரு நாடுகளுக்குமிடையில் குறைந்தது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 11 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 6 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அவை இந்த வருட இறுதியில்கைச்சாத்திடப்படக்கூடும்.

செவ்வாய் மாலை புதுடில்லியை ஜனாதிபதி சென்றடைவார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். புதன்கிழமை இந்திய ஜனாதிபதி மாளிகையின் முன்றிலில் அரச மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வைபவத்தில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவார்.

ஜனாதிபதியும் அவரின் தூதுக் குழுவினரும் தங்கியிருக்கும் ஐ.ரி.சி. மயூரியா ஹோட்டலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதியை சந்திப்பார். ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித்வால் குணவர்தன மற்றும் சிலர் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை, வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஞாயிறு இரவு டில்லிக்கு பயணமாகவிருந்தனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை இடம் மாற்றுவதற்கான உடன்படிக்கை, குற்றவிடயங்களில் பரஸ்பர சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை, கலாசார ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை, இலங்கையில் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றிலேயே ஜனாதிபதி விஜயத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்தது.

இதேவேளை, தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும் மற்றும் கொச்சிக்குமிடையிலான கப்பல் போக்குவரத்துத் தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படுவதில் மேலும் காலமெடுக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே காலநிலை தொடரும்; மழை அதிகரிக்கும்

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிப்பதுடன், மழையும் அதிகரிக் கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிகூடிய மழைவீழ்ச்சி 90.7 மி. மீ. கினிகத்தேனவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலநிலை காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும்.

ஈ. பி. டி. பி. பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி இன்று சந்திப்பு

douglas-devananda.jpgதமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி இன்று

இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு மாணவர்களை அனுமதிக்கும் சகல பாடத்துறைகளுக்குமான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக உயர்கல்வி அமைச்சர்எஸ்.பி. திசாநாயக்க பிரதி உயர்கல்வி அமைச்சர் என்.எம். ஏக்கநாயக்க ஆகியோர் வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ. சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத் தொழில்துறையை மையமாகக்கொண்டதாகவே நிகழ்காலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடத்துறைகள் அமையுமெனவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த வகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக கணினிக்கற்கைநெறி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மலேஷிய,பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இந்தியா வரத்தடை?

prof_ramasami.jpgமலேஷிய, பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனி.ராமசாமி இந்தியா வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக அரசு விடுத்துள்ளது. பேராசிரியர் ராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசிவருபவர் என இந்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி ட்கோவையில் இடம்பெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் ராமசாமி வருகை தருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.