10

10

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்து

man-raja.jpgஇந்தியா வுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் நேற்று (09) மாலை ஹைதராபாத்திலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சிறுகைத்தொழில் தொடர்பாக ஏற்கனவே இருந்துவந்த உடன்படிக்கையை புதுப்பிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் கைச்சாத்தானது.

இலங்கை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் நீதித்துறை உதவிகள் தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை யின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தியாவின் உள் துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. ஜீ. கே. பிள்ளையும் கைச்சாத்திட்டனர்.

மகளிர் வர்த்தக நிலையம் மற்றும் சமூக ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்கு மிடையிலான கலாசார பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் இந்தோ – லங்கா மின்சார கட்டமைப்பு தொடர்பான சாத்திய ஆய்வு உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கையின் சார்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவும் கைச்சாத் திட்டனர்.

மன்னாரில் இருந்து மடு வரையிலான ரயில் பாதைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் இந்தியாவின் சார்பில் ரயில்வே பாதை முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமோஹன் திவாரியும் கைச்சாத்திட்டனர்.

லண்டனில் மாறுபட்ட நூல்கண்காட்சி : ஜெயமோகன்

Book_Exhibition_05June10கடந்த ஜுன் 5ம் திகதி (2010) லண்டனில் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” என்ற நூல் வெளியீட்டுவிழா ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதன் முன்னோடியாக அங்கு ஒரு ஈழத்து நூல் கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. “நூல்தேட்டம் வாசகர் வட்டம்” என்ற அமைப்பின்மூலம் அந்தக் கண்காட்சி நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அறியமுடிந்தது.

லண்டனில் நூல் கண்காட்சி என்றதும் முல்லை அமுதனின் “நினைத்தபோது வெளிவரும்” காற்றுவெளி சஞ்சிகையின் வெளியீட்டுடன் இடைக்கிடை நடக்கும் கண்காட்சியும், தமிழ்நாட்டிலிருந்து மணிமேகலை ரவி தமிழ்வாணன் தனது லண்டன் ஏஜென்டுகளின் உதவியுடன் அவ்வப்போது நடத்தும் “புத்தகத் திருவிழா”வும்தான் எமக்கு ஞாபகம் வருவதுண்டு.

Book_Exhibitionநூல்தேட்டம் வாசகர் வட்டத்தின் புத்தகக் கண்காட்சியைக் கண்டதும் ஒரு வித்தியாசமான நூலியல் சூழலுக்குள் நான் உள்வாங்கப்பட்ட உணர்வே மேலெழுந்தது. மண்டபம் முழுக்க கண்டும் கேட்டும் அறிந்திருந்த பழைய புத்தகங்களால் நிரப்பப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற என்னை ஏறத்தாழ 185 தலைப்புக்களில் மூன்றே மூன்று நீண்ட மேசைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களே அமைதியாக வரவேற்றன.

அனைத்தும் தேர்ந்தெடுத்த அறிவியல், ஆய்வு நூல்களாகவே இருந்தன. பழைய ஆக்க இலக்கியகர்த்தாக்களின் பார்த்தும் கேட்டும் சலித்த கதை கவிதை நாவல்களைக் காணவே முடியவில்லை. ஈழத்தின் முதலாவது நாவல் என்ற பெருமையைப் பெற்ற அசன்பேயுடைய சரித்திரம் நாவலினதும், நொறுங்குண்ட இருதயம் நாவலினதும் 2008ம் ஆண்டு மீள்பதிப்பை காணமுடிந்தது. ஏ.இக்பாலின் கவிதைகள் கொண்ட ஒரு நூல் காணக்கிடைத்தது. புரவலர் புத்தகப் பூங்காவின் இரண்டொரு நூல்கள் கிடைத்தன. அவ்வளவுதான் பெரும்பாலும் அங்கிருந்த ஆக்க இலக்கியங்கள்.

எஞ்சிய அனைத்தும், ஈழத்துத் தமிழ் படைப்புலகு பொதுவாக அலட்டிக்கொள்ளாத ஆய்வு நூல்களும், வரலாற்று நூல்களும், அண்மைக்காலத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் நூல்வடிவங்களுமே அங்கு பார்வைக்கிருந்து எம்மைப் பிரமிப்புக்குள்ளாக்கின. இவ்வளவு ஆய்வு நூல்கள் இலங்கையில் வெளிவந்திருக்கின்றனவா என்று எனது பிரமிப்பை வார்த்தையாக்கி அங்கு நின்றிருந்த நூலகவியலாளர் செல்வராஜாவிடம் கேட்டுவைத்தேன். அவர் “ இவை அனைத்தும் கடந்த இரண்டாண்டகளுக்குள் வெளிவந்த நூல்கள் மட்டுமே” என்றார்.
 
உண்மையில் இவை பற்றிய இருப்பினையிட்ட அறிதலே இல்லாமல் புகலிடத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகாலத்தினை யுத்தத்தில் தொலைத்துவிட்டதாகக் கருதிக்கொண்டுள்ள எமக்கு – இல்லை அங்கு மரணத்துள் வாழ்வும் நிகழ்ந்துள்ளது என்ற செய்தியை இந்தக்கண்காட்சியின் மூலம் மௌனமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இக்கண்காட்சியில் பங்கேற்ற இரண்டு பிரதான பதிப்பகங்கள் குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தகசாலை இரண்டுமாகும். சேமமடு பொத்தகசாலை வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியை அங்கு காணமுடிந்தது. அங்கிருந்த நூல்கள் அனைத்தும் விற்பனைக்கும் உரியதாகையால், கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள் அனைவரது கைகளிலும் பல நூல்கள் தாங்கிக்கிடந்தன.

Book_Exhibitionபுத்தகங்களின் விலையும் மிகக்குறைவாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது. அது பற்றி அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்மணியிடம் விசாரித்தபோது (இவர் நூலகவியலாளர் செல்வராஜாவின் துணைவியார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்), இவை இலங்கை விலையுடன் லண்டனுக்கு எடுப்பிக்கும் போக்குவரத்துச் செலவையும் கூட்டி வரும் தொகை மட்டுமே என்று குறிப்பிட்டார். மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன் கணக்குச் சரியாகவிருந்தது. அப்போ இவர்கள் புத்தக வியாபாரம் செய்யவில்லையா என்ற இயல்பான சந்தேகத்துடன் மீண்டும் நூலகவியலாளரை அணுகினேன். அவரின் பதிலை எனது பாணியில் தருகின்றேன்.

நூல்தேட்டம் வாசகர் வட்டத்தின் நோக்கங்கள் மூன்று:
1. இந்தியப் பதிப்பாளர்களின் கடல்கடந்த பொருளாதார ஆக்கிரமிப்பால், ஈழத்தில் நலிந்துவரும் பதிப்புலகச் சூழலை மீளக்கட்டியெழுப்புவதற்கு பதிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது.

2. ஈழத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ் ஆய்வாளர்களின் படைப்புகளை புலம்பெயர்ந்த நாடுகளில் அறிமுகம் செய்வதும் அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதும்.

3 புகலிடத்தில் அருகிவரும் வாசிப்புக் கலாச்சாரத்தினை தடுத்துநிறுத்தி – அதற்கு மூலகாரணமாக இருக்கும் “அதிக விலை” என்ற காரணியை அகற்றி, மலிவு விலையில் லாபநோக்கம் இன்றி அனைவரையும் நூல்களை வாங்கத்தூண்டுதல். அதற்கு வசதியாக புதிய நூல்களை அவர்களின் தெரிவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.

இவை அனைத்தையும் இந்தக் கண்காட்சி நிறைவுசெய்துள்ளதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 45 பவுண்களுக்கு நான்  லண்டனில் வாங்கிய சேமமடுவின் யாழ்ப்பாண அகராதி 33 பவுண்களாக விலை குறிப்பிடப்பட்டு இருந்ததைக் கண்டதும் எனக்கு மனதுக்குள் என்னவோ நறநறுத்தது. புத்தகங்களின் விலைகள் 1 பவுணிலிருந்து 7 பவுண்கள் வரை  விலை குறிப்பிடப்பட்டிருந்தன. சராசரியாக 2 முதல் 2.50 பவுண்களுக்குள் ஒரு புத்தகம் வாங்கக்கூடியதாக இருந்தது. என்னைப் போலத்தான் மற்றப் பார்வையாளர்களும் சிந்தித்திருப்பார்கள். ஏனென்றால் அனைவரது கைகளிலும் விருப்பத்திற்குரிய தெரிவாகத் தேர்ந்தெடுத்த நிறைய நூல்களைக் காணமுடிந்தது.

வுழமையான கண்காட்சி போன்று ஆண்டுக்கொருமுறையோ, இரண்டாண்டுகளுக்கொருமுறையோ அல்லது விரும்பியபோதோ அமையாமல், ஒவ்வொரு நூல்வெளியீட்டு விழாவிலும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம்பெற வேண்டும். லண்டனில் ஒரு புத்தக விற்பனை நிலையம் இல்லாத குறையை அது போக்க உதவும் என்பதுடன், வீடுகள் தோறும் குடும்ப நூலகங்களும் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

வாசிப்பில் ஆர்வம் வந்துவிட்டால் ஈழத்துப் படைப்புலகத்திற்கு வெள்ளிதிசைதான். இதில் லண்டனில் உள்ள சைவ, கிறிஸ்தவ ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் தங்களை இணைத்துக்கொள்வது நல்லது. தாங்கள் வாழ வழிதரும் தமிழ்ச் சமூகத்துக்கு அவர்கள் செய்யும் கைம்மாறாக இருக்கும். புரிந்துகொள்வார்களா?

லண்டன் சிவன் கோயில்: குறைந்த காலக் குத்தகைக் காணியில் ஒரு மில்லியன் பவுண் செலவில் ஆலயத் திருப்பணி : நடராஜா சச்சிதானந்தன்

Satchthnanthan_Nஅன்புடையீர்,
இறைவன் திருவருளினால் நான் எங்கள் சிவன் கோயிலை ஆரம்பிப்பதற்கு வேண்டிய அங்குரார்ப்பணக் கூட்டத்தை எனது (49 Ravensbourne Park Crescent, Carford, London, SE6 4YG,UK) இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்தேன். அப்போது ஆண்டு 1993. நானும் துடிப்புடன் இருந்தேன். இக்கூட்டத்திற்கு என்னால் அழைக்கப்பட்டவர்கள்: திருவாளர்கள் வி.கணேசமூர்த்தி, செ.யோகராசா, வ.கிருஷ்ணானந்தராஜ், தி.அருள்தாஸ், சு.பேரின்பநாதன், ந.சிவசுப்பிரமணியம், நா. ஸ்ரீ கெங்காதரன், ஆ.ரவீந்திரன் ஆகிய அப்பெரியார்கள் என் அழைப்பை ஏற்று வந்தனர்.

சிவன் கோயில் அங்குரார்ப்பணப் பூசை Newstead Community Hall, Lee எனும் மண்டபத்தில் நடைபெற்றது மண்டபத்திற்குரிய வாடகை முதலிய பிரதான செலவினங்களையும் நானே உற்சாகத்துடன் பொறுப்பேற்றிருந்தேன். அத்துடன் நானே அடியார்கள் தரிசித்து வரும் மூலஸ்தானத்திலுள்ள சோமஸ்கந்த மூர்த்தியின் திருமேனியையும் மகிழ்வுடன் உபயம் செய்தேன். ஆலயம் அமைந்துள்ள காணியை வாடகைக்கு எடுப்பதற்கு மூலகாரணமாகவும் பின் அக்காணியில் ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளையும் ஏனைய அறங்காவலர்களுடைய ஒத்துழைப்புடன் 1993 -1994 இல் நான் மேற்கொண்டேன்.

தொடக்கத்தில் ஆரம்பகால அறங்காவலர்களுடைய நிதி உதவிகள் கிடைக்காமையினால் நிதிப் பற்றாக்குறையின் நெருக்கடியைச் சமாளிக்கும் நிலையும் எனக்கு ஏற்பட்டது. எனினும் என் பணி தயங்காமல் நடந்தது. தற்போது சிவன் நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியை வாங்குதவற்கும் நானே மூலகாரணமாக இருந்தேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அக்காணியை வாங்குவதற்கு ஏதுவாகும் வகையில் வைத்திய கலாநிதி சீ.நவரத்தினம், வைத்திய கலாநிதி சி சோமசேகரம், கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா, அமரர் மு. அழகப்பன் ஆகியோரை அறங்காவலர்களாக வருவதற்க்கு அழைத்தேன். அவர்களும் வந்து எனக்கு ஊக்கம் தந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமரர் க.செல்வேந்திரன், திரு.சோ.பாலசுந்தரம், திரு.த. ஸ்ரீதரன், வைத்திய கலாநிதிகள் சி.இராஜசுந்தரம், சு.சிவதாசன், ஆர். கந்தவேள் ஆகியோர் அறங்காவலர்களாக வருதவதற்கும் மூலகாரணமாக இருந்துள்ளேன் என்பதையும் பெருமையுடன் இன்று நினைவு கூருகிறேன். எனது அழைப்பின் பேரில் ஆரம்பகால அறங்காவலர்களில் சிலர் சில விக்கிரகங்களை தாராள மனதுடன் உபயமாக வழங்கினர். சிலர் அலங்கார உற்சவ உபயகாரர்களாக வந்தனர். மற்றும் சிலர் விசேட உபயகாரர்களாக வந்தனர். பொதுமக்களில் சிலரும் விசேட உபயகாரர்களாக வருவதற்கு அடியேனுடைய உற்சாகமும் பங்கும் பிரயத்தனமும் காரணிகள் ஆகின.

அடுத்த கட்டமாக எம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களையும் பொதுமக்களின் உதவியுடன் ஸ்தாபிதம் செய்வதற்கும் அவர்கள் உபயகாரர்களாக வருவதற்கும் நான் எடுத்தபிரயத்தனங்கள் வெற்றியளித்தன. இவ்வாறு எம்கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அர்ச்சகர்கள் தேடும் கட்டத்தில் இங்கு பணி புரிவதற்கு சிவஸ்ரீ சபாமகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீம சுந்தரக் குருக்கள் அவர்களையும் தமிழில் பூசை செய்வதற்கு சிவஸ்ரீ மணிவாசகக் குருக்கள் அவர்களையும் பன்னிரு திருமுறை ஓதுவதற்கு திரு. சாமி தண்டபாணி ஓதுவார் அவர்களையும் அடியேன் மூல காரணமாக இருந்து வரவழைத்தேன். வெற்றிக்கு மேல் வெற்றி வர, நானும் ஊக்கப்பட்டேன்.

இப்பணிகளை எல்லாம் செய்தபின்னர் ஆலயத்தை ஆகம முறைப்படி புனரமைப்தற்கு எண்ணினேன். எனவே கோயில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தவற்கான சிவலிங்கத்தையும் வட இந்தியாவிலிருந்து சுணக்கம் இன்றித் தருவித்திருந்தேன். கோயில் தொடர்ந்து நடந்தது. கோயில் அமைந்துள்ள காணி கோயிலுக்குச் சொந்தமாக இல்லாத படியால் சட்டத்தரணி திருமதி. இந்திரா செபஸ்தியான் அவர்களையும் பொறியியலாளர் (Mr. Payne) திரு.பெயின் அவர்களையும் அறங்காவலர் சபைக் கூட்டத்திற்கு அழைத்து வேண்டிய சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கான ஒழுங்குளையும் என் தர்க்கரீதியான நல்லெண்ணத்துடன் செய்திருந்தேன்.

குறைந்த கால குத்தகைக் காணியில் பெருமளவில் பொதுமக்களின் பணத்தைச் செலவுசெய்து கோயிலை அமைப்பதில் உள்ள சட்டமுறை ஆபத்துக்களால் அது உகந்த வழியல்ல என இவர்கள் இருவரும் தமது ஆலோசனையை அறங்காலர்களின் கவனத்திற்கு முன்வைத்தனர். இந்த ஆலோசனைக்கமைய கோயிலைச்சிறு அளவில் புனரமைப்பதற்கு வேண்டிய விபரங்களை அறங்காலர் சபையில் நான் முன்வைத்தேன். இதற்கான செலவுத்தொகை 200,000 பவுண்களேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனையைப் பெரும்பான்மையான அறங்காவலர்கள் ஏதோ துரதிஷ்ட்டத்தினால் ஏற்றுக் கொள்ளவில்லை.

இக்காலகட்டத்தில் அறங்காலவர்கள் சபை தன் தலைவரை மாற்றிக் கொண்டது. அத்துடன் நான் செய்து வந்த பணிகளும் முடங்கத்தொடங்கின. என் வேகமும் குறைந்தது. எனினும் விடமனமின்றி தொடர்ந்து என்னால் ஆகியவற்றைச் செய்தேன்.

புதிய தலைவர் கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் குறைந்த கால குத்தகைக் காணியில் (Short term Lease) கோயில் கட்டுவதற்கு ஒரு மில்லியன் பவுண்கள் (1,000,000) செலவில் ஒரு ஆடம்பரமான ஆபத்தான திட்டம் வகுத்தார். அத்தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தத்திட்ட விபரங்களை எமது பொதுமக்கள் அறிவதற்கு முன்வைக்க வேண்டுமெனவும் பொதுமக்களின் ஆலோசனைகளையும் இணக்கமும் பெறப்பட வேண்டும் எனவும் எம் அறங்காவலர் சபையை நான் மிகவும் பணிவுடன் வேண்டினேன்.

அதற்கு எம்தலைவர் ஏனோ சம்மதிக்கவில்லை. நானும் எம்தலைவர் கலாநிதி து.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெரிய செலவுத் திட்டத்தை ஏற்க என்மனச்சாட்சி இடங்கொடாத நிலையில் அவர்களின் திட்டத்தை பொதுமக்கள் கவனத்திற்கு நானாகவே முன்கொணர்ந்தேன். அறங்காவலர்களின் இத்தவறான திட்டத்தை அடியேன் பொறுப்புணர்வுடன் பொது மக்களின் முன் வைத்த காரணத்தால் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் வேண்டுகோளின் படி அறங்காவலர் சபையிலிருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்.

நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன். எனவே மேற்கூறிய உண்மை விபரங்கள் எல்லாம் அடங்கிய இலண்டன் சிவன்கோயில் வரலாற்று நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நூலில் இதுவரை பொதுமக்கள் அறியாத எல்லா விடயங்களையும் கூறலே நலம்.

எனவே எம்ஆலயம் சம்பந்தமான பூரண வரலாறும் விபரங்களும் அடங்கிய அடியார்களுடைய கட்டுரைகளையும் இந்நூலில் சேர்க்க விரும்பி இத்தால் நல்லெண்ணத்துடனும் அன்புடனும் தயவாக உங்களையும் அழைக்கிறேன்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
Maazaru Printers,
28/8 Muthukalathi Street,
Triplicane
Chennai-5
Tamilnadu (South India).

தயவுசெய்து கட்டுரைகளை விமானத்தபாலில் அனுப்புங்கள். தட்டச்சுவசதி இல்லாதவர்கள் மட்டும் தெளிவான கையெழுத்தில் அனுப்பினால் நான் அவற்றை உசிதமாக உள்ளடக்கத்தெண்டிப்பேன். மின்ஞ்சல் வசதி உள்ளவர்கள் maazaru@rediffmail.com எனும் மின்னஞ்சல் விலாசத்துக்கு முடியுமான கெதியில் அனுப்பி வைக்கவும். உங்கள் கட்டுரைகள் 31.06.2010 கடைசித் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்குமாறு இத்தால் அன்பாக வேண்டுகிறேன். தமிழிலேயே எழுதுவதை விரும்புகிறோம். ஆங்கிலமும் பரவாயில்லை.

இங்ஙனம்
தங்கள் ஆதரவை நாடும்
நடராஜா சச்சிதானந்தன்
நிறுவனர் – இலண்டன் சிவன் கோயில்

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது,

வவுனியா அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய மக்களுக்கான உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது. முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறு மாத காலமே  உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலுள்ள மக்களுக்கே இந் நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது.

வவனியா மற்றும், யாழ்.குடாநாட்டிலுள்ள அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் இன்னமும் வசித்து வருகின்றனர். இவ்வாறானவர்களில் முல்லைத்தீவுப் பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்றப்படாதவர்களுக்கு கிளிநொச்சிப் பகுதிகளில்  அழிவடைந்த. சேதமுற்ற தங்கள் வீடுகளை மீளமைத்துக்கொள்ள முடியாதவர்களும் அடங்குகின்றனர்.

ஆறுமாத காலத்திற்குள் அம்மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், இதனடிப்படையில் ஆறுமாத காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கான  உணவு நிவாரணம் நிறுத்தப்படும் எனவும் முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், எவ்வித இழப்பீடுகளோ, தொழில்களுக்கான உதவிகளோ அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உணவு நிவாரண உதவியிலேயே அவர்கள் பெரிதும் தங்கியிருந்தனர். தற்போது இந்நிவாரணம் நிறுத்தபட்ட நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ அமைக்கப்படும்! – அமெரிக்கத் தூதுவர்

Patricia_A_Butenisயாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ எனப்படும் அமெரிக்க நிறுவனம் விரைவில் அமைக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (09-06-2010) யாழ். வந்துள்ள இவர் யாழ். அரச அதிபர் கே.கணேஸிடம் இதனைத் தெரிவித்தார். நேற்று அமெரிக்கத் தூதுவர் யாழ். அரச அதிபரை அவரது யாழ். செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

Ganesh_GA_Jaffnaஇது குறித்து அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவிக்கையில்: மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம், யாழ்.நிலவரங்கள், யாழ்.பல்கலைக்கழகச் செயற்பாடுகள், உட்பட பலவேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் கல்வி நடவடிக்கைளை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நிலையம் (அமெரிக்கன் கோனர்) ஒன்றை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் நேற்று மாலை யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் மக்களின் நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். தொடர்ந்து யாழ். மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌத்தரநாயகம் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். இன்று யாழ்.மாவட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் கையைத் துண்டித்து அவரது நகைகள் கொள்ளை. மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நெடுங்கேணியில் சம்பவம்!

நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்த பெண்ணொருவரின் கைகள் வெட்டித் துண்டிக்கப்பட்டு அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு (Jun 09 2010) இந்த பீதியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மையில் மீள் குடியமர்த்தப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கே இந்நிலை ஏற்பட்டது.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்த இப்பெண்ணும் அவரது கணவரும் தங்கள் பாதுகாப்பிற்காக அயலில் தெரிந்த ஒருவரின் விட்டிற்குச் சென்று தங்குவது வழக்கம். சம்பவதினம் அவ்வாறு தமது கொட்டிலில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த வீட்டிற்கு பாய், தலையணையுடன் சென்ற போது பற்றைகள் மிகுந்த ஓரிடத்தில் அவர்களை வழிமறித்த சிலர் பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தையும், அவர் அணிந்திருந்த காப்புகளையும் கழற்ற முற்பட்டனர். பெண்ணும், அவரது கணவரும் கூக்குரலிட்ட போது அப்பெண்ணின் விரல்களை கத்தியால் வெட்டித் துண்டித்து மோதிரத்தை அபகரித்ததுடன், அவரது கைகளை முழங்கைக்கு கிழாக வெட்டி காப்புகளையும் அபகரித்துள்ளனர். அதே சமயம் அப்பெண்ணின் கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவரும் காயமடைந்துள்ளார். அப்பெண் அணிந்திரந்த நகைகளுடன் தலையணைக்குள் மறைவாக வைத்து எடுத்துச்செல்லப்பட்ட நகைகளும் கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த ராசலிங்கம் விக்னேஸ்வரி, வயது 52. அவரது கணவர் ராசலிங்கம் வயது 64 ஆகியோருக்கே இந்நிலை ஏற்பட்டது. இவ்விருவரும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததான தகவல் பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு விசுவமடுவில் இரு குடும்பப் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை நிரூபிக்கப் படுமானால், சந்தேக நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி. சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” நூல் வெளியீட்டு விழா

Mayooran_Bookகடந்த 05.06.2010. சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூலின் வெளியீட்டு விழா, லண்டன் சுடரொளி வெளியீட்டகத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். சுடரொளி வெளியீட்டகத்தின் செயலாளர் ஐ.தி.சம்பந்தன் தனது துணைவியாரை இழந்ததனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 3மணியளவில் நூல்தேட்டம் வாசகர் வட்டத்தினரின் ஏற்பாட்டில் ஈழத்துப் பதிப்பகங்களின் புதிய நூல்களின் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 135 தலைப்புகளில் இந்நூல்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியுடன் மலிவு விலையில் நூல்விற்பனையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 5மணியளவில் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நூல் வெளியீட்டுவிழாவிற்கு லண்டன் புவுஏ தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் தினேஷ்குமார் அவர்கள் தலைமைதாங்கினார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், அகவணக்க நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் என்பன நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் திபாகரன் அவர்களின் வரவேற்புரையும் தினேஷ் அவர்களின் தலைமையுரையும், சிவஸ்ரீ கனக பாலகுமாரக்குருக்களின் ஆசியுரையும் இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டிய விஷாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியான நாட்டியக் கலாயோகி செல்வி ஷஸ்ரியா யோகராஜா அவர்களின் தனிநடன நிகழ்வு இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை திரு. ஸ்ரீரங்கன், திரு. யோகநாதன், திரு. ஜோய் பூரணச்சந்திரன், திரு. பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன்பின்னர் கவிஞர் நிலா அவர்களின் நூலின் மீதான் பார்வை என்ற கவிதையும், சற்குணராஜா கனகசபையின் பாடல் நிகழ்வும், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவிகளின் குழுநடனமும் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவினை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் சிறப்புரையாற்றி வெளியீட்டுவைக்க, நூலின் முதற்பிரதியை இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பிரபல வரலாற்றாய்வாளர் சிவ தியாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் நூல் விமர்சன நிகழ்வு இடம்பெற்றது. இந்த நூல் விமர்சன நிகழ்வினை மாதவி சிவலீலன், மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, வேலன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு. கருணானந்தராஜா ஆகியோரும் நிகழ்த்தினர். உன்மையில் இந்த நூல் விமர்சனம் ஒரு காத்திடமான நிகழ்வாகவே காணப்பட்டது. ஒரு காரசாரமான, சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்வாக இவை இடம்பெற்றதனைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு தனது உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போனாலும் தனது எழுத்துக்கள் மூலம் விமர்சன உரையினை சமூகவியல் ஆய்வாளர் சி.யோ பற்றிமாகன் அவர்கள் சமர்ப்பித்திருந்தார். அதேபோல்த்தான் சுடரொளி வெளியீட்டகத்தின் நிறுவனர் ஐ.தி. சம்பந்தன் அவர்களும் தனது உரையினை எழுத்துக்கள் மூலம் சமர்ப்பித்திருந்தார். இந்த எழுத்துமூலமான உரையினை ஸ்ரீரங்கன் அவர்கள் வாசித்தார்.

Mayooran_BookLaunchஅதன்பின்னர் திருமதி சுகதினி பாணுகோபன் அவர்களின் கவிதை நிகழ்வென்றும் திருமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியி;ன் நடனநிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியாக இந்நூலின் ஆசிரியர் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்களின் ஏற்புரையினை நிகழ்த்தினார். இவ்ஏற்புரை விமர்சனஉரைகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பனவாக அமைந்திருந்தன. கிட்டத்தட்ட மாலை 9.15 மணியளவில் இந்நூல் வெளியீட்டுவிழா இனிதே நிறைவுபெற்றது.

17வது திருத்தச் சட்டத்தை மீண்டும். திருத்தி அமுல்படுத்த வேண்டும்

2001ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 17வது திருத்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டு மென்ற தீர்மானமொன்று நேற்று முன்தினம் (08) மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தை மத்திய மாகாண சபை மத்திய அரசுக்கு பிரேரணையாக முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மத்திய மாகாண சபையின் 5வது சபைக் கூட்டம் நேற்று முன்தினம் பள்ளேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் சபைக் கூட்ட மண்டபத்தில் பிரதித் தலைவர் டப்ளியூ. எம். யசமான தலைமையில் இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணத்தினால் கடந்த 18ம் திகதி சபைக்கு முன் வைக்கப்பட்ட குறித்த பிரேரணை நேற்று முன்தினம் சபை கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இப்பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்கினர்.

அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பு-அரசு பேச்சு தொடர்ந்து இடம்பெறும். செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், இணைந்து செயற்படவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணக்கம் கண்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அடுத்த கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரசாங்கம், இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கு இன்னும் பணிகளை ஆற்ற முடியுமென்றும் அதற்காக உலக நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தயாரென்றும் கூறிய சம்பந்தன் எம்.பி. அதற்காக சர்வதேச நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை விடுக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற குழு அறையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்து, 28 கிராமங்களில் மீள்குடியேறிய மக்களின் நிலவரங்களைக் கூட்டமைப்பினர் நேரில் அவதானித்து ஆராயந்துள்ளனர். இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சம்பந்தன் எம்.பி. செய்தியாளர் மாநாட்டிலும் அதனை வெளியிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடப்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வடக்கில் தமது விஜயத்தின்போது நேரில் தெரிந்து கொண்ட குறைபாடுகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. சந்திப்பைத் தொடர இணக்கம் கண்டிருப்பதாகவும் கூட்டமாக அல்லாமல் சிறிய சிறிய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சம்பந்தன் எம்.பி, “ஜனாதிபதியை நாம் சந்திக்கச் சென்ற போது, புலிப் பயங்கரவாதிகள் கேட்டதை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். நாம் அதனைக் கேட்க வரவில்லை என்று கூறினேன். நாம் அரசாங்கத்தைக் குறைகூறவில்லை. அரசாங்கம் மக்களுக்குப் பணியாற்றி இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. அழைத்த அத்தனைப் பேச்சுவார்த்தைக்கும் சென்றிருக்கிறோம். இனி மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

“உதவி வழங்கும் நாடுகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சம்பந்தன், ‘இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சொந்தத் தொழிலுடன் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுங்கையுடன் நிற்கிறார்கள். அவர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்குப் பெருந்தொகைப் பணம் அவசியமாகிறது. எனவே, உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதியைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் அது உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.