15

15

வடக்கு மீனவர் மேம்பாட்டுக்கு ரூ.550 இலட்சம் இலகு கடன். 70 பேருக்கு முதற்கட்டமாக நேற்று வழங்கி வைப்பு

cha.jpgவட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 550 இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் இலகு கடனாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மீனவர்களில் 70 பேருக்கு நேற்று முதற்கட்டமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களின் மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு இலங்கை வங்கியின் ஊடாக இலகு கடன் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன யாழ்.குருநகரில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மீனவர்களுக்கான இலகுக் கடனை வழங்கி வைத்தார். தலா 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 4 இலட்சம் ரூபா வரையான தொகை அந்தந்த மீனவர்களின் தேவைக்கமைய வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த மீனவர்களில் 160 மீனவர்கள் இந்த இலகுக் கடன் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இவர்களில் 70 மீனவர்களுக்கே நேற்று முதற்கட்டமாக வழங்கப்பட்டது என்றார்.

வலை, மீன்பிடி உபரகணங்கள் போன்றவற்றிற்கு அவர்கள் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளனர். இந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு முதல் வருடம் கொடுக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து எந்த அறவீடும் அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட மாவட்ட மீனவ அபிவிருத்தி திணைக்கள கட்டடத்தை அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று திறந்து வைத்தனர்.

சகல நவீன வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உட்பட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் : இன்று ஆரம்பம்

srilanka-cricket.jpgஇந்தியா,  பாகிஸ்தான்,  பங்களாதேஸ்,  இலங்கை அணிகள் மோதும் ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று இலங்கையில் ஆரம்பமாகின்றது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியில் சனத் ஜெயசூரியாவும்,  அஜந்தா மெண்டிசும் நீக்கப்பட்டள்ளனர்.  நீண்ட காலங்களுக்குப் பின்பு பர்வேஸ் மஹ்ரூப் இணைக்கப்பட்டள்ளார்.

இன்றைய ஆட்டம் இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

அணி விவரம்
Sri Lanka
KC Sangakkara*†, M Muralitharan, TM Dilshan, HMRKB Herath, DPMD Jayawardene, S Randiv, SHT Kandamby, CK Kapugedera, KMDN Kulasekara, MF Maharoof, SL Malinga, AD Mathews, TT Samaraweera, WU Tharanga, UWMBCA Welegedara 
 
Pakistan
Shahid Afridi*, Salman Butt, Abdul Razzaq, Abdur Rehman, Asad Shafiq, Imran Farhat, Kamran Akmal†, Mohammad Aamer, Mohammad Asif, Saeed Ajmal, Shahzaib Hasan, Shoaib Akhtar, Shoaib Malik, Umar Akmal, Umar Amin 

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நேர அட்டவணை

ஜுன் 15 பாகிஸ்தான்,  இலங்கை அணிகள்
ஜுன் 16 இந்தியா,  பங்களாதேஸ் அணிகள்
ஜுன் 18 இலங்கை,  பங்களாதேஸ்  அணிகள்
ஜுன் 19 இந்தியா,  பாகிஸ்தான் அணிகள்
ஜுன் 21 பாகிஸ்தான்,  பங்களாதேஸ்  அணிகள்
ஜுன் 22 இலங்கை,  இந்தியா  அணிகள்
ஜுன் 24 இறுதிப் போட்டி

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டு. விதவைகளுக்கு சுயதொழில் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவிகளை வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இந்திய உயர்ஸ்தானிகருட னான பேச்சுவார்த்தையின் போதே இந்திய அரசு இந்த நிதியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள 800 விதவைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு நிதி உதவி மற் றும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு விசேட பயிற்சி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளன. எதிர்வரும் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

20ஆவது தடவையாக அகாசி இன்று வருகிறார்

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கான ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதிநிதி யசூசி அகாசி 20 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை வருகை தருகிறார்.எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாசி அரச அதிகாரிகள், ஆளும் கட்சி, எதிரணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பார்.

அதேசமயம் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறும் தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அகாசி அழைப்பு விடுப்பார் என்று ஜப்பானிய தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் குடியேற்றக் கிராமங்களுக்கு செல்லவுள்ள அகாசி இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நாளை “இலங்கை நிலைவரம்”

இலங்கை நிலவரம் தொடர்பாக நாளை புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது. பிரிட்டிஷ் தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பாராளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக கலந்துரையாடுமாறு மக்டொனாக் எம்.பி. கோரிக்கை விடுக்கவுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொழில்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவுள்ளது.கன்சர் வேட்டிவ் லிபரல் அரசாங்கமே தற்போது அதிகாரத்திலிருக்கிறது.

காமரூன் அணி ஜப்பானிடம் தோல்வி

ftfa.jpgஆப்பிரிக்க சிங்கம் என்று வருணிக்கப்படும் காமரூன் அணி ஜப்பானிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. உலக கிண்ண கால்பந்து போட்டியில் புளுயம்பான்டைன் நகரில் நடந்த இ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆசியாவை சேர்ந்த ஜப்பான் அணியை ஆப்பிரிக்க சிங்கம் காமரூன் சந்தித்தது.

இரு அணியிலுமே நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் காமரூனின் இன்டர்மிலான் ‘ஸ்டிரைக்கர்’ சாமுவேல் ஈடோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்

காமரூனின் முன்களம் ஈடோவை நம்பியே சுழலும்.கிளப் ஆட்டங்களில் ஜொலிக்கும் சாமுவேல் ஈடோ தாய்நாட்டுக்காக ஆடும் போது சோடை போய்விடுகிறார் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லா உலக கிண்ணத்துக்கு முன் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஈடோவுக்கு இருந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் மந்தநிலை அடைந்தது. கடமைக்கு இரு அணி வீரர்களும் ஆடினார்கள்.ஜப்பான் வீரர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவ்வப்போது காமரூன் கோல் கம்பத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். முதல் பாதியில் 39ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. மாட்சூயி கொடுத்த பாசை பெற்ற ஹோண்டா எளிதாக அதனை கோலாக மாற்றினார்.முதல் பாதி ஜப்பான் முன்னிலையுடன் முடிவுற்றது.

பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் காமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜப்பான் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 86ஆவது நிமிடத்தில் காமரூன் வீரர் மபியா அடித்த பந்து இடது கோல்கம்பத்தில் மோதி வெளியேறியது. கொஞ்சம் கீழே சென்றிருந்தாலும் கோலுக்குள் புகுந்திருக்கும் காமரூனுக்கு அதிருஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இறுதி 5 நிமிடங்களில் பதில் கோல் திருப்ப காமரூன் கடும் போராட்டம் நடத்தியது.ஆனால் ஜப்பான் கோல்கீப்பர் கவாஸாகி அத்தனை வாய்ப்புகளையும் அற்புதமாக தடுத்து விட்டார். ஆட்ட நேர இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை போட்டியில் வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.ஏற்கனவே ஆசிய அணியான தென்கொரியா கிரீஸ் அணியை தோற்கடித்துள்ளது. இப்போது ஜப்பானும் வெற்றி பெற்றிருப்பது ஆசியாவின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

கல்முனையில் சிவில் பாதுகாப்புக் குழு அடையாள அட்டைகள் யாவும் ரத்து

பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்குரிய அடையாள அட்டையைப் போன்ற போலியான அட்டையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்முனை பிரதேசத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் செல்லுபடியற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் இன்று 15ம் திகதியுடன் செல்லுபடியற்றதாகி விடுவதாக கல்முனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களிலிருந்து அவர்களை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்க ளுக்கு அதிகார பூர்வமான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 12 அகதிகள் பலி

இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 12 அகதிகள் பாதகமான காலநிலை காரணமாக கடலில் மூழ்கி காணாமல் போய் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

அவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களெனவும், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் நோக்கில் பெரிய கப்பலில் இருந்து மீன்பிடி படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்களிடமிருந்து பணம் வசூல்; 5 உத்தியோகத்தர்கள் வேலை நீக்கம்

வர்த்தகர்களிடம் சட்ட விரோதமாக பணம் வசூலித்த குற்றத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஐந்து உத்தியோகத்தர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரையும் உடனடியாக வேலை நீக்கம் செய்யுமாறு கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்கைப் பணித்துள்ளார். மேற்படி ஐவரும் அநுராதபுர மாவட்டத்தின் பதவிய சிறிபுர, பராக்கிரமபுர மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் வர்த்தகர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோக த்தர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின் அதிகார சபை அவர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் வவுனியாவிலுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக் கிளையில் பணிபுரிந்தவர்களாவர்.

மைதானத்தில் கடும் இரைச்சல் : உவுசலா தடை செய்ய பீபா ஆலோசனை

ftfa.jpgமைதா னத்தில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் தென்ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பீபா’ ஆலோசித்து வருகிறது.

 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எடுத்து வருகின்றனர். மைதானத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊதித்தள்ளும் போது கடும் இரைச்சல் ஏற்படுகிறது என்று டி.வி.ஒளிபரப்பாளர்களும் வீரர்களும் புகார் செய்தனர்.இதனால் உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பிபா’ ஆலோசித்து வருகிறது.

இது குறித்து உலக கோப்பை போட்டிக் குழு தலைவர் டேனி ஜோர்டான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் ”உவுசலா பற்றி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்தை குறைக்கும் முடிவுகள் எடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.