16

16

பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத் தொடர்: சரத் பொன்சேகா பங்குபற்ற சட்டரீதியான அங்கீகாரம் வேண்டும்

sa-pon.jpgகென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பங்குபற்றுவதாயின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளர், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:- பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா எம்.பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவருக்குரிய வரப்பிரசாதமாகும்.

எனினும், பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபராவார். அந்த அடிப்படையில் அவர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்றே செல்ல முடியும் என்றார்.

பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கு அமைய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளை ஒருபோதும் மீற முடியாது. அவ்வாறு செல்ல தேவையாயின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

போர்க்குற்றம் புரிந்தமைக்கான ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்: கோத்தபாய சவால்!

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சர்வதேச உரிமைகள் குழுக்களுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களுடன் கதைப்பதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரத்தை இலங்கை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் இருந்தால் இலங்கையின் நீதி முறைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டுவர முடியும். வழக்கறிஞர்களூடாகச் செல்ல முடியும். அத்துடன்,பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் அவர்களுக்குச் சவால் விடுக்கிறேன். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் ஒளிநாடாக்களையும் கொடுப்பதில் அர்த்தமில்லை. எம்மிடம் சட்ட முறைமை உண்டு. அதனைப் பயன்படுத்துங்கள் என்று கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ, ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி ஆகியோர் வருகைதரும் நிலையில், அதற்கு முன்னராக பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு இரு தூதுவர்களும் இலங்கையை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவை சமநிலை செய்தது நியூஸீலாந்து

ftfa.jpgஐரோப்பி யாவின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவிற்கு நிகராக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, இறுதி நேரத்தில் பதில் கோல் அடித்து தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுவரும் 2010 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில், ருஸ்டன்பர்க்கில் நடைபெற்ற எப் பிரிவு இரண்டாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே நியூ ஸீலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.

தன்னாலும் முடியும் என விளையாடிய நியுசிலாந்து அணியின் வேகத்தை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற சுலோவாகியா அணி, அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடத் துவங்கியது.  போட்டி ஆரம்பமானதை தொடர்ந்து 5ஆவது நிமிடத்தில் சுலோவாகியாவின் செஸ்டெக் டிக்கு வெளியேயிருந்துத் தூக்கி அடித்தப் பந்தை மிக அழகாக தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் விட்டேக்.

போட்டி நேரம் முடிவடைந்து, இறுதிநேரம் ஒடிக்கொண்டிருந்தபோது பெரு முயற்சியில் ஈடுபட்ட நியுநிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்தது. ஸ்மெல்ட்ஸ் அடித்து மேலெழும்பி வந்த பந்தை அதற்கெனவே காத்திருந்த வின்ஸ்டன் ரீட் தலையால் முட்டி கோலிற்குள் தள்ள போட்டி நிறைவு பெற்றது.  இந்நிலையில் தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்தது.

தன்னிச்சையாக அரசியலமைப்பில் மாற்றத்தை திணிக்க அரசு முயற்சி ; ரணில் கண்டனம்

ranil.jpgஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக தன்னிச்சையாக அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசு முனைப்புக்காட்டி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் வெளியேயும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்தவும் நீடித்துக் கொள்வதற்குமாகவே அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அமைச்சர்களுக்கோ, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்காமல் இரகசியமான முறையில் அரசியலமைப்பைத் திருத்தி அதனை மக்கள் மீது திணிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை முற்று முழுதாக நடைமுறைக்குப் புறம்பானதொன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இலங்கையில் ஆரம்பமானது. நேற்றைய முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

கடந்த முத்தொடர் போட்டியின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சான் மற்றும் தரங்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியிலும் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தரங்க 11 ஓட்டங்களுடன் அக்தரின் பந்து வீச்சில் சல்மான்பட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து டில்சானும் 18 ஓட்டங்களுடன் முஹமட் அசிப் பந்து வீச்சில் உமர் ஹமினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெயவர்த்தன மற்றும் சங்ககார ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை வழுப்படுத்தினர். இதில் சங்ககார 42 ஓட்டங்களுடன் அப்ரிடியின் பந்து வீச்சியில் உமர் ஹக்மாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஜெயவர்த்தன 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தன் மூலம் தனது 53 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

சகல துறை ஆட்டகாரரான ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்ந்து தனது சிறப்பான துடுப்பாட்ட மூலம் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்று தனது 5ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சில் நீண்டகாலத்துக்கு பிறகு அணியில் இணைந்த சொயிப் அக்தர் 3 விக்கெட்டுகளை கைப்ப்ற்றிருந்தார்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்பமே மிகவும் மோசமான நிலையை கண்டது. இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டு போனார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹசேன் 11 ஓட்டங்களுடனும்இ சல்மான் பட் ஓட்டம் எதுவும் பெறாது மாலிங்க பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அணியின் மோசமான நிலையை அறிந்து தொடர்து களமிறங்கிய அணி தலைவர் சையிட் அப்ரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 ஆறு ஓட்டம் 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அப்ரிடியின் சதம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க சிறப்பாக பந்து வீசி 05 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார்.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தலைவர் சையிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். போட்டி முடிவினையடுத்து இலங்கை அணி 02 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

லியன் பஸ்கோ இலங்கை விஜயம்

lio.jpgஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் லியன் பஸ்கோ இன்று இலங்கைக்கு வரவுள்ளார். அவர் இரு நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார்.

லியன் பஸ்கோ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசுத் தரப்புப் பிரமுகர்களையும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை நேரில் சந்தித்து அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன சம்பந்தமாகப் பேசுவார் என்று ஐ. நா. அறிவித்துள்ளது.

போலி வங்கி வலையமைப்பை ஏற்படுத்தி பல பில்லியன் ரூபா மோசடி செய்த நபர் கைது

நாடளாவிய ரீதியில் போலி வங்கி வலையமைப்பினை ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து பல பில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற பெயரில் செல்வத்துரை தனராஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 39 போலி வங்கிக் கிளைகளை ஸ்தாபித்திருந்தாரென்ற தகவல் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இந்தப்போலி வங்கிகள் கிராமிய முதலீட்டு அபிவிருத்தி வங்கி நிறுவனம் எனும் பெயரிலேயே இயங்கி வந்துள்ளன. இதேவேளை சந்தேக நபர் தனது மனைவி மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய பணிப்பாளர் சபையொன்றினை நிறுவியதன் மூலமும் பல வாடிக்கையாளர்களை இதில் முதலீடு செய்ய வைத்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரதான சந்தேக நபர் போலி வங்கிகளுக்கான பணிப்பாளராக அதன் தலைமையகத்தில் செயலாற்றி வந்துள்ளார். அதனைத் தவிர இந்த வங்கிகளில் பெரும் எண்ணிக்கையான பட்டதாரி களும் உயர் கல்வி கற்போரும் பணி யாற்றி வந்துள்ளனர். பிரதான சந்தேக நபர் கைதானதையடுத்து அவரது மனைவியும் உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் இவர் பல்வேறு இடங்களில் மக்களை ஏமாற்றி மோசடி செய்தமை காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவரென்ற உண்மையும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இப்போலி வங்கிகள் மற்றும் அதன் உரிமையாளர், அவரது குடும்பம் தொடர்பான தகவல்கள் கிடைக்குமாயின் அதனை கம்பளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பெற்றுத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலி முகவர்களூடாக மலேசியா சென்றோர் நிர்க்கதி

போலி வெளிநாட்டு முகவர் நிலையங்களினூடாக மலேசியா சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

கூடுதல் சம்பளம் கிடைக்கும் உயர் தொழில்களை பெறுவதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு பல இலட்சம் ரூபா பணம் செலுத்திய நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவர்கள் உரிய தொழில் கிடைக்காததால் மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மேலதிக பொது முகாமையாளர் எம்.கே. ருகுணகே கூறினார். இவர்களில் பலர் கடவுச் சீட்டோ, பணமே இல்லாமல் வெறும் கையுடனுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளமுள்ள தொழில் வழங்குவதாக கூறி மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட இவர்கள் சிற்றூழியர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.