தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினம் 19 June 2010 4.30 pm – 9.00 pm, Southfields Community College Hall, 333 Merton Road, London SW18 5JU (Entrance via Burr Road) அனுஸ்டிக்கப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரையானது பத்மநாபாவின் 2008ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஈபிஆர்எல்எவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்டது.
அது 1990 யூன் மாதம் 19ந் திகதி!
மானுடவர்க்கத்தின் மனிதப் பண்புகளுடன், அமைதி, சமாதானம், ஜனநாயகம் நிறைந்த சமதர்த வாழ்வை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போராடி மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும், பன்னிரு தோழர்களும், சென்னையில் பாசிசப் புலிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்!
ஈழத்தமிழர் வரலாற்றின்; சோகமிகு இந்நாளே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால், தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போரட்டத்தில் ஒரு இயக்கத்தினர் மட்டும் மரணிக்கவில்லை. சகல இயக்கங்கள், கட்சிகளைச் சாhந்தோரும் உயிரை அர்ப்பணித்தல் உட்பட சகலவித தியாகங்களையும் செய்திருக்கின்றார்கள்.
தமிழ்பேசும் மக்களுக்காகப் போராடி இலட்சியப் பாதையில் மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆற்றல் மிகு தோழர்களுக்கும், சகஇயக்கப் போராளிகளுக்கும், வினையாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் தினமே தியாகிகள் தினம்!
அந்தக் கரிநாளுக்குப் பின்னர் இற்றைவரையான பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னரும் அதற்கு முன்னருமான காலகட்டத்திலும், தமிழ்ப் பயங்கரவாதிகள் ஒரு பக்கத்தாலும், சிங்களப் பேரினவாதம் மறுபக்கத்தாலும் நாளாந்தரம் நசுக்க, தமிழ்பேசும் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
சமாதானம் அமைதி என்பதெல்லாம் கானல் நீராகிப் போய் விட்ட துர்ப்பாக்கிய நிலையில், கொலை, கொள்ளை, கப்பம், பட்டினிச்சாவு, வறுமை எனும் வாழ்க்கை முறைக்குள் வலுக்கட்டாயமாகத் தமிழ் மக்கள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
குருட்டுத் துப்பாக்கி ஏந்தும், வரட்டுச் சித்தாந்தம் கொண்ட முரட்டு வாதிகளால், இடிபாடுகளுக்கு மத்தியில் இருட்டு வாழ்க்கையில் செக்காடுகள் போல், செம்மறி ஆடுகள் போல் தமிழ் மக்கள் என்று தம் வாழ்வு விடியும் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள்.
நிலங்களற்று, நிலையிழந்து, பலமிழந்து, மலங்க விழித்து, மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.
சிங்களப் பேரனினத்திற்கு எதிராக, தமிழர்களின் விமோசனத்திற்காக போராட தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிப் போராட முன்வந்த எத்தனை எத்தனை நல் மாந்தரை நாம் பறிகொடுத்து விட்டோம்!
வீழ்ந்த போராளிகள் அனைவருமே எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் அரச படையினரால் மட்டும் கொல்லப்படவில்லை. உயிர்ப் பலியெடுக்கப்பட்ட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், கல்விமான்களும், வினையாளர்களும், பொதுமக்களும் எதிரியினால் மட்டும் காவுகொள்ளப்பட வில்லை. உண்மையில் இவர்களில் அதிகமான எண்ணிக்கையினர் சொந்த சோதரர்களாலேயே – குறிப்பாகவும், அதிக எண்ணிக்கையாகவும் புலிகளாலேயே – சுட்டும் வெட்டியும் வீழ்த்தப் பட்டவர்கள் என்பதுதான் வேதனையானதும், வெட்ககரமானதுமானதும், கசப்பானதுமான உண்மை! தமிழர் வாழ்வை வளம்படுத்த வேண்டிய ஆர்வமும் தகுதியும் கொண்ட எத்தனை எத்தனை தளிர்கள் கருக்கப்பட்டு விட்டன!
புலிகளின் ஏதாச்சாதிகார வேட்கையால் ஏற்படுத்தப்பட்ட இப் படுகொலைகளுடன் ஈழப் போராட்டத்தின் தார்மீகம் அழிந்து விட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட சக இயக்கங்களின் தடை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவையுடன் ஈழப் போராட்டம் தடம் புரண்டு விட்டது. பிரேமதாசாவிடம் பணமும், ஆயுதங்களும் பெருவாரியாகப் பெற்று இந்தியாவுடன் புலிகள் யுத்தத்தை தொடர்ந்தவுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அஸ்தமித்துவிட்டது.
இவைதான் பேரினவாத ஸ்ரீலங்கா அரசின் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமம் அடைவதற்கும், வடக்கு கிழக்கின் அவலங்களுக்கும், போரின வாதிகளின் கைகள் ஓங்கியிருப்பதற்கும் மூல காரணிகளாக அமைந்து விட்டன!
பாசிசப்புலிகளின் பேடித்தனமான படுபாதக கொலைகளுக்குப் பலியாகிப் போன மாந்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா!
மாதிரிக்கு மட்டும் சிலரைப் பார்ப்போமானால், –
வடக்கு கிழக்கு மாகாண அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருந்த திருகோணமலையிலிருந்து நிலாவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றவதற்காக ஜீப்பில் சென்றுகொண்டிருந்த வேளையில்; ஸ்ரீலங்கா இராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் படுகொலை செய்யப்பட்ட, ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தக் கொண்ட, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் ஜோர்ஜ், சகதோழர்கள்,
புலி இயக்கத்தின் உட்கட்சிச் சதியால் தன் காலை இழந்த கிட்டுவிற்காக அருணா என்ற புலியால் அநியாயாகமாகப் படுகொலை செய்யப்பட்ட புலிகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த, ஈபிஆர்எல்எவ், புளொட் உறுப்பினர்கள் உட்பட்ட 60 இளைஞர்கள்
ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினமும், உறுப்பினர்களும்,
யாழ் மருத்தவக் கல்லூரி உடல் கூற்றியல் துறைத் தலைவர், ரஜனி திரணகம,
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், பொன் சிவபாலன்,
பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராசா,
யாழ் முன்னாள் அரச அதிபர் பஞ்சலிங்கம்,
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன்,
பெண் கவிஞர் செல்வி,
கிழக்கின் விடிவெள்ளி சாம் தம்பிமுத்து, அவரது மனைவி,
ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் தோழர்கள் பத்மநபா, ரொபேர்ட், இன்னும் பலர்
புளொட் இயக்கத் தலைவர் வாசுதேவா,
புலிகளச் சேர்ந்த மாத்தையாவும், இதர போராளிகளும்,
இணையற்ற புத்திஜீவிகளாகிய நீPலன் திருச்செலவம், கேதீஷ் லோகநாதன் இன்னும் எத்தனையோர் தேசத் துரோகிகள், சமூக விரோதிகள் எனப் போலியாகச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டுவிட்டார்கள். சொல்லி மாளா அவர்தம் பட்டியல்!
இந்தக் கொலைப்பட்டியல் இன்னமும், இன்றும் தொடர்கிறது – நீண்டு கொண்டே போகிறது!
சிங்களவர் தமிழரைக் கொன்றால்; அது இனப் படுகொலை!
இலங்கை இராணுவம் தமிழரைக் கொன்றால் அது ஆக்கிரமிப்புக் படுகொலை!
தமிழர்கள் தமிழரைக் கொன்றால் அதற்குப் பெயர் தமிழ் ஈழ விடுதலையா?
இத்தனை கொடூரங்கள் நடந்த போதும் மக்கள் மௌனமாக இருந்தார்கள். புலிகளால் மற்றைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள். மற்றைய இயக்கப் போராளிகள், தலைவர்கள் குற்றியிரும் குலையுயிருமாக எரியூட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்! எம்முடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டபோது, இரவோடிரவாக விரட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்!
– இறுதியில், நாமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் – ஏனென்று கேட்க யாரும் இல்லை! ஈவிரக்கமற்ற யுத்தத்தினாலும், தமிழர்களின் ஏகபோக தலைமை என்று துப்பாக்கிமூலம் அந்தஸ்து கோரும் சர்வாதிகாரப் போக்கினாலும், ஈழத்தமிழினம் தேய் பிறையாகி வருகிறது!
உள்நாட்டுப் பத்திரிகைகளும், புலம் பெயர்ந்தோர் நடாத்தும் புலிசார்பு ஊடகங்களும். உண்மை நிகழ்வுகளை அறியாதவாறு இருட்டடிப்புச் செய்கின்றன, அல்லது திரித்துக் கூறுகின்றன. உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மைக் காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.
போததற்கு, சிங்களவர்கள் எல்லோருமே கொடியவர்கள் என்றே சித்தரிக்கப்படுகிறார்கள். பேரின வாதிகள் வேறு, சாதாரண சிங்கள மக்கள் வேறு என்று தெரிவிக்கப்படவில்லை. தமிழ்மக்கள் பேலவே, அப்பாவிச் சிங்களப் பொது மக்களும் வகைதொகையின்றி கொல்லப்படுகின்றார்கள். ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகள்போல் ஏழைச் சிங்கள மக்களின் பிள்ளைகளே இந்த யுத்தத்திற்கு பலிக்கடா வாக்கப்படுகின்றார்கள்.
நாம் பயத்திலிருந்து விடுபடவேண்டும். சுதந்திரமாக எவர்க்கும் அஞ்சாமல் கருத்துக் கூறும், செயற்படும் நிலை ஏற்பட வேண்டும்.
ஒரு எஜமானர்களின் அடிமையிலிருந்து எங்களை மீட்பது இன்னொரு எஜமானர்களின் அடிமைக்கு நாம் ஆளாவதாக அமைந்துவிடக் கூடாது.
ஈழவிடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்த தியாகிகள் அனைவரையும் இத் தியாகிகள் தினத்தில் நாம் நினைவு கூருவோhம்!
தலை வணங்குவோம் அத் தியாகிகளுக்கு!