19

19

நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழுவை அழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்மை பயக்கும்.” – வீ.ஆனந்தசங்கரி

a_sangary.jpgவன்னி மீள் குடியேற்றம் ,அபிவிருத்தி ஆகிய இரண்டையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அவர் அக்கடிதத்தை இடம்பெயர்ந்த-மீள்குடியேற்றப்பட்ட மக்களின் இன்றைய அவல நிலை என்கிற தலையங்கத்தில் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு;

“மீள் குடியேற்றப்பட்ட ,உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலைமை பற்றி தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர என்னை அனுமதிக்கவும். பொறுமையுடனும் அவர்களின் மீது மிக்க அனுதாபத்துடனும் இதைப் படிப்பீர்களேயானால் நிச்சயமாக உங்களுக்கு என் மீது அதிருப்தி ஏற்படமட்டாது. 1970ம் ஆண்டு நீங்களும் நானும் முறையே பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். நீங்கள் நம் அனைவரிலும் இளையவராகவும், நான் உங்களிலும் 14 வயது மூத்தவராகவும் இருந்தோம். அரசியலிலும் நான் உங்களுக்கு மூத்தவனே.

நீங்களும், உங்கள் குழுவினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து உரையாடியபோது தெரிவித்த கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அக்கருத்துகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தடுப்புக்காவலில் உள்ள பிள்ளைகள் தாமதமின்றி விடுவிக்கப்படுவார்கள் என்றும், தேவைக்கேற்ப வீடுகள் புதிதாக கட்டியும் திருத்தியும் தரப்படும் என்றும் இம்மக்கள் நம்பியிருந்தனர். பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளே இடம் பெயர்ந்த மக்களின் பெறுமதி மிக்க பெரும் சொத்துக்கள். அதிகாரிகள் அப்பிள்ளைளை சிறிய அளவில் விசாரித்து விட்டு விடுதலை செய்வார்கள் என அதிகாரிகள் வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.

ஆனால் அவ்வுறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டர்கள்.இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இயக்கத்தில் ஒரு நாள் பயிற்ச்சி பெற்றவர்கள் கூட உயர் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம்நலன்புரி நிலையங்களில் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தலும் கூட வந்தது. புதுமாத்தளனில் இருந்த போது தப்பிப் போக சந்தர்ப்பங்கள் இருந்தும் போர் முனையில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுடன்தான் போகவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தனர் என்று அம்மக்களில் பலர் கூறுகின்றார்கள். அவர்களுக்கு மற்ற துன்பத்தை கொடுக்கும் விடயம் யாது எனில் யார் அவர்களது பிள்ளைகளை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்த்தார்களோ அதே ஆட்கள் இராணுவத்தின் புலனாய்வு துறையினர்களுக்கு பிள்ளைகளை அடையாளம் காட்டுகின்றனர் என்பதே.

பல தீவிர போராளிகள் பெரும் தொகைப் பணத்துடன் முகாம்களில் இருந்து தப்பி வந்து நம் நாட்டிலோ அன்றி அயல் நாடுகளிலோ பாதுகாப்பாக வாழ்கின்றனர். மேலும் சிலர் சுகந்திரமாக மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிவந்த அதே பேர்வழிகள் இன்று அரச படைகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். பல பெற்றோர்கள் இவர்களை அடையாளம் காட்டவும் தயாராக உள்ளனர். எனது ஆலோசனைகளை கேட்பீர்களேயானால் எதுவித பிரச்சனையோ எதிர்ப்போ இன்றி அவர்களை விடுதலை செய்ய முடியும். ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி, அத்தியட்சகர் தரத்தில் சேவையில் உள்ள அல்லது இளைப்பாறிய ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு கௌரவமான பிரiஜை ஆகிய மூன்று பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களையும் விசாரித்து அவர்களின் பிண்ணனி ,பெற்றோரின் அபிப்பிராயம் முதலியனவற்றை அறிந்து, ஆர்வத்துடன் இயக்கத்தில் செயற்படாதவர் எனக் கருதினால் சம்மந்தப்பட்டவரை விடுவிக்கலாம்.

இக்குழுக்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானிக்க வேண்டியது நீங்களே. இது உடனடியாக செய்யக்கூடியதாகும்.  இதே அடிப்படையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளையும் இக் குழுக்களின் சிபாரிசில் விடுவிக்கலாம் அல்லது பிணையில் செல்ல சிபார்சு செய்யலாம். கடும் போக்காக செயற்பட்ட சிலர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தெரிவிப்பீர்களேயானால் பிள்ளைகளை காணவில்லை எனத் தவிக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா ?இல்லையா என அறிந்து கொள்ள முடியும். , வன்னியிலும், வட கிழக்கின் வேறு பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ளவை ஒரு சிறிய சூறாவளியோ அல்லது ஓர் சிறிய பூமி நடுக்கமோ அல்ல என்பதையும் நாட்டின் 25 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் வாழ்ந்த சில இலட்சம் மக்களின் வாழ்வையும் அவர்களின் இருப்பிடங்களையும் நேரடியாக பாதித்துள்ள சம்பவங்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களும் அழிந்து நாசமாகி பல்லாயிரக்கணக்கான வீடுகளும் தரைமட்டமாகியும், இன்னும் பல மோசமாக உடைந்து மீளக்கட்ட வேண்டிய நிலையிலும் உள்ளன. பெரும் தொகையான வீடுகள் யன்னல், கதவுகள், வளைகள், தீராந்திகள் கூட இல்லாத நிலையில் உள்ளன. வன்னியைத் தொடர்ந்து மோசமாக வவுனியா மன்னார் மாவட்டங்களும் அடுத்ததாக யாழ்ப்பாண மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை பற்றி நான் அறியேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் கணக்கிடமுடியாதவை. சுனாமியே படுமோசமாக பெரிய அளவில் பாதிப்பை நம் நாட்டில் ஏற்படுத்திய சம்பவமாகும். சில மணித்தியாலங்களில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தாக்கத்தை ஐந்து ஆண்டுகளின் பின்பு கூட இன்னும் உணரக்கூடியதாக உள்ளது.

ஆனால் வன்னியின் பெரும்பகுதியை நாசமாக்கிய யுத்தம் சில மாதங்கள் நீடித்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னியில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பும் சொத்தழிவுகளும் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக பெரியதாகும். கண்ணால் பார்த்தால்தான் நம்ப முடியுமாதலால் நீங்கள் ஒரு தடவை இவ்வாறு நாசமாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மீளக் குடியேற்றப்பட்ட இவர்களின் பரிதாப நிலையை அண்மையில் சென்று பார்த்த போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கிளிநெச்சியில் வாழ்ந்து, அங்கே ஆசிரியராக கடமை ஆற்றி, நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அங்குள்ளவர்களில் அநேகர் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவு பரீட்சயமானவர்கள்.

யாழ் தேர்த்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய 10 பாராளுமன்ற தொகுதிகளையும் விட இருமடங்கு பெரியதாக உள்ள கிளிநொச்சி தொகுதியின் மூலை முடக்குகளை எல்லாம் நான் அறிவேன். கிளிநெச்சியை தனி மாவட்டமாக்கினேன். கரைச்சி கிராமசபை தலைவராகி 43 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தை அங்கு கொண்டுவந்ததும் நானே. கிளிநொச்சி பட்டணசபைத் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளேன். தயவு செய்து நான் அரசியல் இலாபம் தேடுகிறேன் என்று எண்ணவேண்டாம். அற்பணிப்புடனும் அக்கறையுடனும் நான் சேவை செய்த வன்னி மக்கள் தப்பாக வழி நடத்தப்பட்டுள்ளனர். என்னைப் போல் அவர்களுக்கு அக்கறையுடன் சேவையாற்ற எவரும் செல்லமாட்டார்கள். வன்னி மக்கள் தாங்கமுடியாத அளவு கஸ்ட்டப்பட்டுவிட்டார்கள். இனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வாந்துள்ளேன்.

அவர்கள் கவனிக்கப்படும் முறை எனக்கு திருப்தியில்லை. தயவு செய்து வன்னி மீள் குடியேற்றம் ,அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள். கலங்கிய குட்டையில் யாரையும் மீன் பிடிக்க விடாதீர்கள். சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வன்னியில் சேவை செய்யவிடுங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றேல் அவர்களின் நடவடிக்கைகளை அவதானியுங்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் நடந்தவற்றை மறந்து விடுங்கள். ஏன் எனில் பெரும் நிதி வளங்களை கையாளும் அரச ஸ்தாபனங்கள் கூட புலிகளுக்கு ?கப்பம்? கட்டி வந்துள்ளன. மீள் குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டு.இந்த ஸ்தாபனங்களால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளை ஏன் கெடுக்க வேண்டும்.

தென் இலங்கையை சேர்ந்த சில ஸ்தாபனங்களும் இவர்களுக்கு உதவ விரும்புகின்றன. இங்கு ஏற்பட்டுள்ள பெரும் அழிவுக்கு அரசை முழுமையாக குற்றம் கூறமுடியாவிட்டாலும் வடக்கு கிழக்கில் வீடில்லா மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசு தட்டிக் கழிக்க முடியாது. 50000 வீடுகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தமையை பாராட்டிக்கொண்டு இந்தப் பிரச்சனையில் மற்றைய நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் பேசினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன்படுவார்கள். ஒரே அடியாக அத்தனையையும் இழந்து ஒட்டாண்டியாக நிற்கும் மக்கள் நட்ட ஈடு கேட்கின்றமையை நியாயமற்ற கோரிக்கையாக கொள்ள முடியாது. நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழுவைஅழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்மை பயக்கும்.”

யுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்ச்சி இந்த நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு – ஜனாதிபதி

g1.jpgயுத்த வெற்றியின் மூலம் கூடுதலாக மகிழ்ச்சியடையும் மக்கள் பிரிவினராக வடபகுதி மக்கள் இருக்கும் நிலையை உருவாக்குவதே தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

g1.jpgதமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடையதாக இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழும் எவருடைய பிரச்சினையும் வெளியில் உள்ளவருக்கு சுமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நமது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நமது பொறுப்பாகுமென்றும் சொன்னார். யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு காலி முகத்திடலில் நேற்றுக் காலை (18) நடைபெற்ற தேசிய வெற்றி அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிக் கொடுத்து உதவிபெறுகின்ற நிலைக்குச் செல்லத் தயாரில்லையென்றும் உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை அச்சுறுத்திய யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அனுதாபம் செலுத்தும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வெளிநாடுகளில் இருந்து உதவியளிப்பவர்களின் செயற்பாடுகள் வடக்கு மக்களை மீண்டும் முகாமுக்குள் அனுப்புவதாகவே அமையும், எனக் குறிப்பிட்டார்.

‘நமக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் யுத்தம் செய்ததைப் போன்று, நாட்டைக் கட்டியெழுப்பும் போது ‘நாட்டுக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, முப்படையினரைப் போன்று அரச துறையில் உள்ள ஆறு மடங்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கையை ஆசியாவிலேயே அற்புதநாடாக மாற்றியமைக்க முடியுமெனத் தெரிவித்தார்.

“சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது நான்கு வருடங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பாதுகாக்கும் பெரும் சவாலை இந்த நாட்டு மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை, யுத்தத்தில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி அந்த வெற்றியை மலினப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் மிகப் பெரும் மனிதாபிமான நடவடிக்கைக் காக உயிர்த்தியாகம் செய்த படையினர், வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த மக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டமை அவர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அவமானமாகுமென்றும் கூறினார். “பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றியிலிருந்து சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறு எங்கே விடப்பட்டது என்பதையும் அவை எண்ணிபார்க்க வேண்டும்.

வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எல்லா நிதியும் பிரிவினை வாதிகள் நலன்களுக்காகவும் வடக்கு மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மீண்டும் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க உதவியளித்தால், மக்களை மீண்டும் முகாம்களுக்குள் தள்ளுவதாகவே அமையும்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டு மக்களிடம் சக்தியும் தைரியமும் உள்ளதாகவும் அதற்கான விருப்பமும் மனோதிடமுமே தேவையாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டை விடுவிப்பதற்காகப் படையினர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்காகவும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்காகவும் தேசத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

ஏழரை இலட்சம் ரூபா கப்பம் கோரி மூன்று வயதுச் சிறுவன் கடத்தல்

இந்தச் சம்பவம் புத்தள நகர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  புத்தளையைச் சேர்ந்த முகமட் ரஸ்மி என்ற மூன்று வயதுச் சிறுவனே கடத்தப்பட்டவராவார்.

சிறுவனைக் கடத்திய நபர் குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்து சிறுவனுக்கு இனிப்பு பண்டங்களைக் கொடுத்து சிறுவன் மீது அளவற்ற பாசம் கொண்டவர் போல் நடித்து சிறுவனை அயலிலுள்ள கடையொன்றிற்கு தூக்கிச் சென்றுள்ளார். சிறுவனைக் காணாத தாய், சிறுவனைக் கூட்டிச் சென்றவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை உடன் கூட்டி வருமாறு கேட்டுள்ளார்.

விரைவில் கூட்டிவருவதாகக் கூறிய அந்நபர் சிறிது நேரம் சென்றதும் சிறுவனின் தாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி ஏழரை இலட்சம் ரூபாவின் கப்பமாக தரும் பட்சத்தில் சிறுவனை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தாய் அயலிலுள்ள கடைப்பக்கம் சென்ற போது சிறுவன் மோட்டார் சைக்கிளொன்றில் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்ட சிறுவனையும் தாயுடன் கதைக்குமாறு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாகவும் தாய், புத்தளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.

சிறுவனைக் கடத்திய நபர் வர்த்தகம் தொடர்பான விடயல்களை கதைக்கும் பொருட்டு வீடு வந்து தங்கியிருந்த போதே சிறுவன் கடத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மிஹிந்தலை பொசன் உற்சவம்; 27 பாடசாலைகள் 6 தினங்கள் பூட்டு

teachers.jpgஅநுராதபுரம், மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 27 பாடசாலைகளை 21-26 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எம்.ஜினபால தெரிவித்தார்.பொசன் நிகழ்வுகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக இப்பாடசாலைகள் மூடப்படவிருக்கின்றன.

ஜாகிர் நாயக்குக்கு விசா மறுப்பு

jakkir1.jpgஇந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.  இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்
BBC

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் கையளிப்பு – அகாஷி, பசில் பங்கேற்பு

இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று கிளிநொச்சி விவசாயிகளுக்கு 33 உழவு இயந்திரங்களை வழங்கினர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட 29 சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கையளிக்கப்பட்டன.

அடுத்த பெரும் போகத்தின் போது வடமாகாணத்தில் அனைத்து விளைநிலங்களிலும் செய்கை பண்ணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன. ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட எம்.பி. எம். சந்திர குமார், தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறிதரன், கிளிநொ ச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி கட்டளை த்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜ குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்

இலங்கையில் சீனர்கள்; இந்தியாவுக்கு ஆபத்து: ஜெயலலிதா

1jaya.jpgஇலங்கையில் சீனர்கள் குவிக்கப்படுகின்றனர்.  இதனால் இந்தியாவுக்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று எச்சரித்துள்ளார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக்கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.  ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.  இதிலிருந்து,  இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.  

 இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை.  இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

 1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.  குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.     

இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.  27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.   பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும். 

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்;  கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

48,000 பேர் மட்டுமே மனிக்பாமில் – வவுனியா அரச அதிபர்

Rehabilitation_Wanni500 பேர் மீள்குடியேற்றத்துக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இன்றைய தினத்தில் சுமார் 48,000 பேர் அளவில் மட்டுமே தங்கியுள்ளனர்.

இவர்களில் தினமும் தலா 500 பேர் வரை மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதுடன் ஓமந்தை 561 படையணி முகாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.  மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதை தொடர்ந்து படையினர் பொது மக்களிடம் அவர்களது காணியை ஒப்படைத்துச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேபோன்று நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்து மீளக்குடியேற்றத்துக்காக மக்கள் அனுப்பிவைக்கப் படவுள்ளனர்.

இலங்கைக்கு 840 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்குப் பகுதிக்கென உதவியாக 840 கோடி ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டின் வட,கிழக்குப் பகுதிக்கு இடைக்கால உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2011-2013 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாட்டு தந்திரோபாய உதவியின் இரண்டாவது பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ளோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு குறிப்பாக 2009 இல் முடிவுக்கு வந்த மோதலில் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அதாவது சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி முன்நகர்வை மேற்கொள்வதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.