20

20

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக இராதாகிருஷ்ணன்?

rada.gifஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர்  வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார். எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் நாளை பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் அமெரிக்காவில்

tissainayagam.bmpஇருபது வருடங்கள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சனாதிபதி ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் நேற்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் வந்து சேர்ந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

வோஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திசநாயகத்தை அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்களும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் வரவேற்றனர். ஊடகவியலாளர் திசநாயகம் மிகுந்த இன்முகத்துடன் காணப்பட்டதாகவும் தன் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.

திசநாயகம் அமெரிக்கா வந்தது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என்றும் 30 வருடங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஊடகத்துறையினர் மீதான அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அரசு இதன் மூலம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சைமன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழக உளவுப்பிரிவுத் தலைவர் சிரஞ்சீவி என்ற ராஜூ சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (ராஜூ) இவர், தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்தார்.

ஹெல உறுமய தலைவர் பதவியில் மாற்றம்

hala.jpgஜாதிக ஹெல உறுமய கட்சியின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கட்சியின் தலைவராக வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்தன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியை எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதைபொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார் என்றும் அதனால் இத்தலைவர் பதவியை இராஜினாமா செய்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“தமிழ் கட்சிகள் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்’ -முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

Varatharaja Perumalதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவி ஆகிய இரு முக்கிய பணிகளையும் முன்னெடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டிற்க வரவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். June 18 2010 இலங்கை தனியார் வானொலி ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை கைவிட்டு பொது உடன்பாட்டிற்கு வர வேண்டியது இக்காலகட்டத்தில் முக்கியமானதெனவும் அவர் வலியுறுத்தினார். இதற்காக தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்காகவே தான் இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவரெனவும், அவர் தமிழ் மக்களுக்கு தீரவு ஒன்றை வழங்கக் கூடிய பலத்துடன் இருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும், ஒரே எடுப்பில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்வது கடினம் எனவும் திரு. வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யசூசி அகாசி கிளிநொச்சிக்கு விஜயம்!

acasi.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசிஅகாசி June 18 2010 கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். அவரோடு அமைச்சர் பசில் ராஜபக்சவும் சென்றுள்ளார். இன்று இவர்களின் வருகையை முன்னிட்டு கிளிநொச்சிப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆறு நாள் விஜயமாக திரு. யசூசி அகாசி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் – ஜெயலலிதா பரிந்துரை

1jaya.jpgஇலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக அநாதைகளாக அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் இலங்கையில் போர் முடிந்தவுடன் கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு வந்தனர்.

இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச்சென்றார்.இலங்கை ஜனாதிபதி வருகிறார் என்றவுடனேயே இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80,000 இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென பிரதமருக்கு வழக்கம் போல கடிதம் எழுதினார் கருணாநிதி.உடனே இந்தியப் பிரதமரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தமிழ்ப் பெயரில் இருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக்கூற முயற்சி நடப்பதாகவும் போரின்போது சிதைந்துபோன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டித்தர நடவடிக்கையெடுக்காமல் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபா மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபா நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்தளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

2009 ஆம் ஆண்டு தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படுமென்று உறுதியளித்தார் இலங்கை ஜனாதிபதி.

தற்போது, இந்தியப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி செயற்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் தெரிவித்துள்ள திட்டங்கள்:

1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Dinamani

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

kp.jpgஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தில் பயிர்ச் செய்கை உரமானியங்கள் வழங்க தீர்மானம்; காணிகள் வழங்கவும் ஏற்பாடு – பசில்

tr.jpgவட மாகாணத்திலுள்ள சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு, காணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஸி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று முன்தினம் கையளித்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:-

வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மாத்திரம் வழங்கியதுடன் அரசாங்கம் விட்டுவிடவில்லை. தற்போது அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், விவசாய, வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படை வீரர்கள் வடக்கை விடுவித்ததன் மூலம் வடக்கும், தெற்கும் இணைக்கப் பட்டுள்ளன. உள்ளங்கள் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும் அரசாங்கம் மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. இலங்கைக்கு மிக நீண்ட காலமாக எல்லா நிலைமைகளிலும் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு உதவ முன்வரும் பல நாடுகள் உதவிகளை வழங்குவதுடன், எம்மை கண்காணிக்கவும், எம்மீது அழுத்தம் கொடுக்கவும் முற்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் நின்றும் மாறுபட்ட கொள்கையைக் கொண்டது ஜப்பான். அது எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதற்காக இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தற்பொழுது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி உரையாற்றுகையில்:-

வட மாகாண மக்களின் வாழ் வாதாரத்தையும் விவசாயத்துறையையும் மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம், தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கும். நாங்கள் விவசாய உபகரணங்கள், இயந்திரங்களை இந்த மக்களுக்காக வழங்கி வருகின்றோம். விவ சாயத்துறையை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றார்.

விவசாயத்துறை மேம்பாட்டின் மூலமே அந்த நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. விவசாயம் என்பது அபிவிருத்தித்துறைக்கான ஒரு மைல் கல்லாகும்.இலங்கைக்கு நான் பல தடவைகள் விஜயம் செய்துள்ளேன். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அவை பயனளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தங்களது பாரிய அர்ப்பணிப்புக்களின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பான் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கும் என்றும் அகாஷி தெரிவித்தார்.