29

29

யாழ். விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதித் தூதுவரை கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.

British_High_Commission”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளனர்;  நேற்று (June 28 2010) யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதித்தூதுவர் மார்டின் புட்டினிஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

”யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றபட்ட ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.  வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள கொடிகாமம் இராமாவில் முகாமிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் மக்கள் முழுவதுமாக மீள்குடியேற்றப்படவில்லை.

வன்னியில் பரந்தளவு நிலப்பரப்புக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.  அப்பகுதிகளில் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது, ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வாறு செலவிடப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.”

இவ்வாறான விடயங்கள் கூட்டமைப்பினரால்  விளக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sampanthan_Rதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளன. கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்  கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை 6 மணிக்கு இச்ந்திப்பு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழ் மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் உடனடிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டியுள்ளமை குறித்து கூட்டமைப்பு தலைவரிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் கேட்கப்பட்டுள்ளது.

இரு பெண்களை பாலியல் வல்லறவுக்குட்படுத்திய இராணுவத்தினருக்கு பிணை வழங்க நீதவான் மறுப்பு!

Court_Symbolகிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை  மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி அரசாங்க அதிபர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் மீள்குடியேற்றம் பற்றிய மாநாடு

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி. ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

மீள்குடியேற்றப்ட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றம், வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்குவது என்பது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.