July

July

விடுதலைக்கு பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும்! – தமிழ் அரசியல் கைதிகள்.

Buddha_SriLankaநீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்த, ஸ்யாம், பௌத்த பீடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் அரசியல் கைதிகள் நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இக்கைதிகளின் அவலநிலை குறித்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு பல தடவைகள் தெரியப்படுத்தினோம். ஆக்கபூர்வமாகன பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் அதியுயர் நிலையில் மதிக்கப்படுகின்ற பௌத்த பீடங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், அமைச்சர் டீயூ குணசேகர ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதே வேளை, கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படாமையால் மீனவர்கள் இரவில் சிரமம்.

Light_House_PointPedroயாழ்ப் பாணத்திலுள்ள வெளிச்ச வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாக்கடலில் உள்ள வெளிச்ச வீடுகள் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னரான சூழலில் தற்போது இரவு வேளைகளிலும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிச்ச வீடுகள் சீரமைக்கப்படாமையால் கடலில் இரவுப் பொழுதுகளில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் தாழ்ந்துள்ளது. – மத்திய வங்கி பிரதி ஆளுநர்

SriLankan_Rupeeயாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுநர் கே.டீ. தீரசிங்க தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நேற்று(30-07-2010) இடம்பெற்ற சம்பத்வங்கியின் கிளை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“யுத்தம் முடிவடைந்து  யாழ.குடாநாட்டு மக்கள் படிப்படியாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி வருகின்றார்கள். கடந்த முப்பது வருடங்களாக வடபகுதி மக்கள் அனுபவித்த துன்பங்களை நாம் அறிவோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இதற்காக மத்திய வங்கி பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளது” என அவர் கூறினார்.

யாழ் குடா நாட்டில் வெங்காயக் கள்வர்கள்!

Onion_Harvestயாழ். குடா நாட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கள்வர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன. யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் ஓருபுறமிருக்க, யாழ். குடாநாட்டு விவசாயிகளின் விளைபொருட்களும் தற்போது கள்வர்களால் களவாடப்பட்டு வருகின்றன.

நீர்வேலி, கோப்பாய் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யபட்ட வெங்காயங்களை இரவு வேளைகளில் திருடர்கள் அபகரித்துச் செல்கின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயத்தை தங்கள் தோட்டக் காணிகளில் அடுக்கி வெயிலில் உலர விடுகின்ற போது திருடர்கள் அவற்றை களவாடிச் செல்கின்றனர். இதைப்போன்று  ஏனைய விளைபொருட்களும் களவாடப்பட்டு வருவதாக விவசாயிகள், தோட்டச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Onion_Harvestதிருடர்களிடமிருந்த தங்கள் விளைபொருட்களை பாதுகாப்பதற்காக இரவு வேளைகளில்  தோட்டக்காணிகளில் காவல் கடமைகளில் தங்போது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்து வெங்காயத்திற்கு தென்னிலங்கையில் தற்போது அதிக வரவேற்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தர்சிகாவின் உடலில் உள்ளுறுப்புக்கள் காணப்படவில்லை!!! யாழ்.வைத்தியசாலை பிரேத சுத்திகரிப்பு பணியாளர்கள் இருவர் கைது!!

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நேற்று முன்தினம் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் கொழும்பில் பிரேத பரிசோதனைக்குபடுத்தப்பட்ட போது தர்சிகாவின் உடலின் உள் உறுப்புக்கள் எவையும் இருக்கவில்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.

30-07-2010 அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் தர்சிகாவின் சடலத்தை யாழ்.வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து துப்புரவு செய்த பணியாளர்கள் இருவரை கைது செய்யும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் அவர்களை உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தினார்.

தர்சிகாவின் உடலின் உட்பாகத்திலிருந்த உறுப்புக்களை வேறாக எடுத்து யாழ். கொட்டடியிலுள்ள மயானத்தில் புதைத்ததாக அவாகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற நீதவான் அவ்வுறுப்புக்களைத் தோண்டியெடுத்து கொழும்பிற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டார். தற்போது அவ்வுறுப்புக்கள் யாழ்.வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரேத துப்பரவு பணியாளர்கள் இருவரையும் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதில் வன்னி மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டங்கைளைச் சேர்ந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமலுள்ளனர். பலர் தங்களின் சொந்த ஊர்களில் இன்னமும் குடியேறாமால், வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மீள்குடியமர்ந்தவர்கள் மட்டுமே கிராமசேவகர்களால் வாக்காளர் படிவத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் வேறு மாவட்டங்களில் வசிப்பவர்கள் தங்கள் பதிவுகளை அம்மாவட்டங்களில் நீக்கிவிட்டு வரவேண்டும் என வன்னியில் குறிப்பாக கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள கிராம சேவகர்கள் பொது மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். 30ம் திகதியுடன் வாக்காளர் பதிவுகள் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இயங்கிவரும் தேர்தல் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட போது, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமலுள்ள நிலையில் வாக்காளர்களாக பதிவு செய்யும் நாட்கள் வன்னியில் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகரைப் பகுதி மக்கள் நான்கு வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இடம்பெயர்ந்திருந்த 70 குடும்பங்கள் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் நேற்று (29-07-2010) மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு நடபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது, வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கதிரவெளி, சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான், முதலான பகுதிகளில் பெரும் சிரமங்களுடன் உறவினர் நண்பர்களின் காணிகளில் தங்கியிருந்தனர். இவர்களே தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை இவர்கள் கதிரவெளியிருந்து அழைத்துச்செல்லபட்டு வாகரைப் பிரதேசச்செயலர் பிரிவிலுள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீடமைப்பு உதவிகள் மந்த கதியில்! ஆனால், இராணுவத்திற்கான வீடமைப்பு பொருட்கள் முறிகண்டியில் குவிக்கப்பட்டுள்ளன.

வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான  மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அழிவடைந்த பொதுமக்களின் வீடுகளை மீளமைத்துக்கொடுக்கும் பணிகள், சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக் கொடுக்கும் பணிகள் என்பன மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் சொந்தக் காணிகளிலும் கூடாரங்களிலேயே தொடர்ந்தும் வசித்து வரும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, முறிகண்டிப்பகுதியில் பெருமளவிலான வீடமைப்புப் பொருட்கள் கொண்வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முறிகண்டியில் ஏ-9 பாதையின் இருமருங்கிலும் பெருமளவிலான வீடமைப்புப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதற்கானவை எனவும் பொதுமக்களுக்கானவை அல்ல எனவும் தகவல்கள் தெரவிக்கின்றன.

கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்துள்ள மக்களை அலைக்கழிக்கும் கிராமசேவகர்கள்!

கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை கிராமசேவகர்கள் இழுத்தடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மீள்குடியமர்ந்துள்ள மக்கள்  பல்வேறு பதிவுகளுக்காக கிராமசேவகர்களை நாடவேண்டியுள்ளது. இந்நிலையில் சில கிராமசேவகர்கள் மக்களை அலைக்கழிப்பதும். பொதுமக்களிடம் சினந்து கொள்வதுமாக நடந்துகொள்வதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது. கிராமசேவையாளர்களிடம் பணிபரியும் அவர்களின் உதவியாளர்களும் மக்களிடம் சரியாக நடந்து கொள்வதில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் எல்லாப் பதிவகளுக்கும் கிராசேவர்களையே நாடவேண்டியுள்ளது ஆனால், அவர்வர்களிடம் சென்று அவற்றை செய்து கொள்வதென்பது சிரமமானதாகவுள்ளது சில வேலைகளை வேறு அதிகாரிகளிடம் சாதாரணமாக சென்று மேற்கொள்ளக்கூடியதாவுள்ளது. எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பிரதேசங்களில் உள்ள கிராமசேவகர்கள் சிலர் சிலரிடம் லஞ்சம் பெற்று உதவிகளைச் செய்வதாகவும் சிலர் முழுநேரமும் மது போதையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

Parameswaran_Subramaniyam_judgementபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம் இன்றி செய்தி வெளியிட்டதை ஒப்புக் கொண்டுள்ளன. இப்பத்திரிகைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தொடுத்த வழக்கின் தீர்ப்பு (July 29 2010) பரமேஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் 77500 பவுண்கள் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசைக்கு இன்று தெரிவித்துள்ளார். தனது சட்ட நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் ஆதரவுதர முன்வரவில்லையென்றும் No Win No Fee என்ற அடிப்படையிலேயே தான் வழக்கைத் தொடுத்ததாகவும் பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்