July

July

முரளிதரன் பந்து வீச்சில் குறையில்லை வோர்ன் தெரிவிப்பு

muralitharan.jpgஇலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை அவர் முறையாகவே பந்து வீசுகிறார் என்றார் அவுஸ்திரேலியாவின் வோர்ன்.

இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் உலக அரங்கில் டெஸ்ட் (132 போட்டி, 792 விக்.) மற்றும் ஒரு நாள் (337 போட்டி 515 விக்.) போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் வரும் 18ம் திகதி காலியில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.

பந்து வீச்சு சர்ச்சை கடந்த 1995ல் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, முரளிதரன் பந்தை எறிவதாக நடுவர் டெரல் ஹேயர் குற்றம் சாட்டினார்.

களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் 30 இலட்சம் ரூபா கொள்ளை

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடியிலுள்ள இலங்கை வங்கியிலிருந்து தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மணல் வீதி எனுமிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை மறித்துத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முப்பது இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதோடு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மணல் வீதி என்னுமிடத்தில் ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று இருந்து பின்னர் அது அகற்றப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வங்கி உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – துடுப்பாட்டத்தில் டோனி பந்துவீச்சில் விட்டோரி முதலிடம்

dhoni.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கப்டன் டோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அவரை நெருங்கிய நிலையில் உள்ளார். டிவில்லியர்ஸ் 805 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், மைக்ஹசி (அவுஸ்திரேலியா) 792 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.

மற்ற இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 6வது இடத்திலும் கோலி 16வது இடத்திலும், யுவராஜ் சிங் 17வது இடத்திலும் ஷெவாக் 18வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் நியூசிலாந்து கப்டன் வெட்டோரி முதல் இடத்திலும் பங்களாதேஷ் வீரர் சகீப் அல்-ஹசன் 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 11வது இடத்திலும் பிரவின்குமார் 15வது இடத்திலும் உள்ளனர்.

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க வானொலி நடாத்தவில்லை. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தோம்.’’ ரிபிசி பணிப்பாளருடன் நேர்காணல்

Ramraj V TBCRamraj V TBCRamraj V TBC
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு மத்தியில் இயங்கிய இவ்வானொலியின் கடந்த பத்து ஆண்டுகள் என்பது புலம்பெயர் தமிழ் ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு பதிவு. அதற்காக இவ்வானொலியும் இதன் பணிப்பாளரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை. ரிபிசி மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அவர்களின் கடந்தகால அரசியல் மீதும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை. ரிபிசி அதன் பணிப்பாளர் அவர்களின் அரசியல் மீது தேசம்நெற் வைத்த கேள்விகளுக்கு ரிபிசி இன் பணிப்பாளர் ராம்ராஜ் பதிலளிக்கின்றார். இந்நேர்காணல் யூன் நடுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது.
._._._._._.

தேசம்நெற்: ராம்ராஜ் நீங்கள் எப்படி விடுதலைப் போராட்ட இயக்கத்தினுள் உள்வாங்கப்பட்டீர்கள்? உங்களுடைய போராட்ட அனுபவம் என்ன?

ராம்ராஜ்: 1981க் காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேராவையிலிருந்து முக்கியமாக மக்களுக்கு உதவி செய்தல் தமிழர் விடுதலைக்காக பிரச்சாரங்கள் செய்தல் ஆகிய விடயங்களில் ஈடுபடும்போது புலிகளின் முழு தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டது. இதன்போது ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை குண்டுவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பரை சிறைக்கு நாம் 11 பேர் கொண்டு வரப்பட்டோம். இந்த சிறையில் இருந்து பின்னர் நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டோம்.

மட்டக்களப்பு சிறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தமூர்த்தி, தங்கத்தரை போன்றோர்களை மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வருகிறார்கள். அப்போது தான் எமக்கும் கூட்டணிக்கும் இடையில் தொடர்பு ஏற்ப்படுகின்றது. இந்த சிறையில் இருக்கும்போது அப்போது தமிழ் இளைஞர்பேரவை ராஜன் (பரந்தன் ராஜன் – ஈஎன்டிஎல்எப்) எம்மைப் பார்க்க அடிக்கடி வந்து போவார். எமக்கான பல உதவிகளையம் செய்து தருபவர். ராஜன் எமக்கான உதவிகளை கண்டியிலும் மட்டக்களப்பிலும் செய்து தருபவர். இந்தக் காலத்திலேயே புளொட்டும் புலிகளிலிருந்து பிரிந்து இயங்குகிறார்கள். இதில் ராஜன் புளொட்டுடன் இணைந்து வேலை செய்கிறார்.

நாம் சிறையில் இருக்கும் போது என்னையும் மற்றவர்களையும் எனது அப்பாவும் ராஜனும் தான் துணிந்து வந்து பார்ப்பவர்கள். அப்போது ராஜன் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் என்ற ஒரு அடிப்படையிலேயே தான் எம்மை வந்து பார்ப்பார். அதனாலேயே நான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய பின்னர் புளொட்டுடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். இந்தக் காலத்தில் புளொட்டும் மிகவும் பிரபல்யமான அமைப்பாக தமிழ் பிரதேசம் எங்கும் இயங்குகின்றது.

மட்டக்களப்பில் புளொட்டுக்கு அமைப்பு ரீதியாக இயங்குபவர்களில் நானும் ஒருவன். புளொட் மலேசிய வாசுதேவனை அழைத்து ஒரு நிதிசேகரிப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பை என்னிடம் தந்தது. இந்த நிகழ்ச்சி எமக்கு தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எம்மை பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு அமைப்பாக நிறுவனமாக இயங்க முயற்சிப்பதன் அம்சத்தை நிறுவியது. இது பலர் எம்முடன் இணையவும் காரணமாகியது. கே எஸ் ராஜா வந்து செய்த இந்த நிகழ்ச்சிகளை என்னுடன் முன்னின்று செய்தவர்கள் பரந்தன் ராஜனும் ராஜனுடைய அண்ணாவுமாகும்.

இந்தக் காலத்திலிருந்தே ராஜன் அடிக்கடி மட்டக்களப்பு வருவார். எமக்கும் மக்களுடன் தொடர்பு இக்காலத்தில் அதிகமாகி வருகின்றது. கிளிநொச்சி வங்கி கொள்ளையும் புளொட் செய்து முடிக்கிறது. இக்காலத்தில் ராஜன் கிளிநொச்சியில் இருக்கிறார்.

ராஜன் ஒருமுறை மட்டக்களப்பு வந்து திரும்ப கிளிநொச்சிக்கு போகும்போது பொலீஸ் சுற்றிவளைத்து ராஜனை கைது செய்து விட்டார்கள். அப்போது நான் 1983ல் புளொட்டின் முழுநேரமாக வேலை செய்கிறேன். இக் காலங்களில் நாம் மன்னார், உடப்பு போன்ற பிரதேசங்களுக்கு கடலால் படகு மூலம் பிரயாணங்களை ஆரம்பிக்கின்றோம். இதனை தொடர்ந்து நிக்ரவெட்டியாவில் வங்கிக்கொள்ளையை புளொட் நடாத்துகின்றது.

இந்த காலத்துடன் நான் இந்தியாவிற்கு வருகின்றேன். இந்தியாவில் புளொட்டின் அமைப்புக்குள்ளேயே நிறையப் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ராஜன் புளொட்டுக்குள்ளேயே முரண்படுகின்றார். அதில் முதலாவதான பிரச்சினையானது நிரஞ்சனுடைய (காக்காவினுடைய) பிரச்சினை நடக்கிறது, முகுந்தனுடன் (உமாமகேஸ்வரனின் இயக்கப்பெயர்களில் ஒன்று) கடுமையாக முரண்பட்ட ராஜனின் நண்பன் காக்கா கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றார். ராஜன் இந்த காக்கா பிரச்சினையில் கருத்த முரண்படுகின்றார்.

011109dag.jpgஇதே காலத்தில் ஈபிஆர்எல்எப் இல் இருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறுகின்றார். தோழர் டக்ளஸ், ராஜன் இணைந்து வேலை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று இருவரும் உடன்பட்டு இணைந்து வேலை செய்கிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் புளொட்டின் உட்கட்சிப் பிரச்சினைகளை முன்வைத்து கண்டித்து வெளியேறினீர்களா?

ராம்ராஜ்: இல்லை! நான் ராஜனுடன் சேர்ந்தே இருந்தேன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரான அசோக் ஈஎன்டிஎல்எப் உடன் பிரிந்து வந்தார். ராஜன் புளொட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சினைகளை பலமாக எதிர்த்தார். ஆனாலும் புளொட்டில் பல பிரச்சினைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமான புலனாய்வுத்துறையினரால், ராஜனுக்கு எதிராக ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் ராஜனுக்கு புளொட்டுக்குள்ளேயும் வெளியே மற்ற இயக்கத்தவர்களிடையேயும் பலமான உறவு இருந்தது. குறிப்பாக ரெலோ சிறிசபா, தோழர் டக்ளஸ், தோழர் நாபா போன்றவர்களிடம் ராஜனுக்கு பலமான உறவு இருந்தது. இந்த உறவு நாட்டில் சேர்ந்து இயங்கிய காலங்களிலிருந்தே இருந்து வந்தது. இவர்கள் யாரும் தம்மிடையே முரண்பட்டுக்கொண்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புளொட்டுக்குள்ளே உட்பிரச்சினை பெரிதாக வளர்ந்து பல வரலாறு காணாத பிரச்சினைகள் எழுந்த போது ராஜன் லெபனானில் இருக்கிறார். ராஜனை கொண்டு வர பாஸ்போட் தேவைப்பட்டது. லெபனானில் பாஸ்போட்டை வாங்கி வைத்திடுவார்கள். முகுந்தன் திட்டமிட்டு ராஜன் பாஸ்போட் எடுக்க முடியாதபடி செய்தார். பிறகு ராஜனை திரும்ப கொண்டு வருவது இழுபறிப்பட்டு போயிருந்தது.

புளொட்டிலிருந்து ராஜன் பிரிந்து சென்று ஈஎன்டிஎல்எப் யை உருவாக்கியபோது ராஜனுக்கு மாற்று இயக்கத்திடமிருந்து பல உதவிகள் கிடைத்திருந்தது. அதில் ரெலோ ஆயுதங்களையும் பணத்தையும் நேரடியாக ராஜனுக்கு தந்து உதவியது. இதற்கு காரணம் ராஜன் – சிறி நெருக்கமான உறவேயாகும்.

தேசம்நெற்: புளொட்டில் இருந்து நீங்கள் பிரிந்து சென்ற போதும் புளொட் செய்தது போன்றே ஈஎன்டிஎல்எப் உம் ஆட்கடத்தல், கொலை, அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள்?

ராம்ராஜ்: புளொட்டில் நடந்த பிரச்சினைகள் கடத்தல்களுக்கும் எம்மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நான் சென்னையில் புளொட்டில் நிதிப் பொறுப்பாளராக இருந்த போதும் இந்த குற்றச்சாட்டுக்கள் இருந்தது. நிதி பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்மீதும் வைக்கப்பட்டடிருந்தது. இந்தக் காலத்தில் யார்? யார் மீது? யாருக்கு? ஏது? என்ன? என்று இல்லாமல் வகை தொகையாக குற்றச்சாட்டுக்கள், பலர் மீதும் பல தடவைகளும் தாறு மாறாக வைக்கப்பட்டிருந்த காலம் என்பதை மறக்கக்கூடாது.

நானும் என்போல பலரும் இயக்கத்துக்கு சேரும் காலங்களில் இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே வந்தோம். அப்படித்தான் இயக்கங்களும் வளர்க்கப்பட்டிருந்தன. எல்லோருமே தற்கொலை குண்டுதாரியாயும் மண்ணை மீட்க வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர வேறு என்ன சிந்தனையும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கத்திலும் இந்த சிந்தனைமுறை தானே இருந்தது. யாரும் இதை மறுக்க முடியுமா?

தேசம்நெற்: புளொட்டில் மிகமோசமான உட்படுகொலைகள் இடம்பெற்றது. அப்போது அதனை எதிர்த்து பலர் குறிப்பாக தீப்பொறி குழுவினர் வெளியேறி இருந்த போதும் நீங்கள் தொடர்ந்தும் புளொட்டில் இருந்ததாக கூறுகிறீர்கள். இன்று ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிப் பேசும் நீங்கள் அன்று நடந்த உட்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. நீங்கள் புளொட்டினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் எதிலும் சம்பந்தப்பட்டு அல்லது அதற்கு துணையாக இருந்திருக்கின்றீர்களா?

Ramraj_V_TBCராம்ராஜ்: எந்த விதமான கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் எதிலும் சம்பந்தப்படவில்லை. இதில் புளொட்டிலிருந்த மிகப் பெரும்பான்மையினரைப் போல நானும் சாதாரண போராளியாகவே இருந்தேன். புளொட்டுக்குள்ளே இருந்தவர்களில் பலர் இந்த உள்வீட்டுப் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள், பலமாக எதிர்த்தவர்கள், தாமும் கொலை செய்யப்படுவோம் என்று பயந்தவர்கள் பலர். இயக்கம் பாதை தவறிவிட்டது என்று தாமாகவே வெளியேறிப் போனவர்கள் பலருக்கு நான் உதவி செய்துள்ளேன். அப்படி வெளியேறியவர்களில் பலர் இன்றும் ஜரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் என்னோடு நட்பாக பழகுபவர்கள், எனது நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்பவர்களாக உள்ளனர்.

Manikkadasan_and_Guardsபுளொட்டினுள் நடந்த எல்லா கொலைகளும் உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து நேரடி ஆலோசனையுடன் நடந்தது என்பது தவறு. சில தெரிந்திருக்கலாம் ஆனால் புளொட்டின் புலனாய்வுத்துறையினரே தமக்கு நினைத்த மாதிரி பல கொலைகளை செய்தார்கள். உதாரணம் மொக்கு மூர்த்தி. இவரே பல உட்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்.

தேசம்நெற்: உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் தலைவர். அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவரே பொறுப்படையவர். இவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் உமாமகேஸ்வரனுடையதே. உமாமகேஸ்வரன் தனது தலைமைப் பதவியைக் காப்பாற்ற இந்தப் புலனாய்வுத்துறையினரைப் பயன்படுத்தி உள்ளார். புளொட்டில் நடந்த உட்படுகொலைகளுக்கு உமாமகேஸ்வரன் முழுப்பொறுப்புடையவர்.

ராம்ராஜ்: இல்லை. இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்த என்று உமாமகேஸ்வரன் தொடங்கியிருந்தால் உமாமகேஸ்வரன் ஆரம்ப காலத்திலேயே முடிந்திருப்பார். இயக்கத்தினுள்ளே மற்றவர்களுக்கு இருந்த பயம் உமா மகேஸ்வரனுக்கும் இருந்திருக்கும். இப்படித்தான் புளொட் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்தக் காலத்தில் மற்றைய இயக்கங்களுக்கு உள்ளேயும் இப்படியான தன்மைகள் இருந்தது. அதைவிட உமாகேஸ்வரனுக்கு சில பலவீனங்களும் இருந்ததது.

UmaMaheswaran_PLOTEபுளொட்டுக்கு ஆயுதங்கள் வந்து இந்தியாவில் இந்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. ராஜன் இந்த ஆயுதங்களை எடுப்பது சம்பந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் உமாமகேஸ்வரன் தனது மச்சான் துரையை இந்த பிரச்சினையை கையாழுவதற்க்கு பொறுப்பாக வைத்தார். இது ஒரு முரண்பாடாக அந்த நேரம் எழுந்தது. அப்போது ராஜன் இந்த அலுவலை மிகஇலகுவாக செய்திருக்க முடியும். இதை துரை கையாள ஆரம்பித்ததாலேயே மேலும் சிக்கலாகி இந்த ஆயுதங்களைப் பெறமுடியாமல் போனது. மேற்குறித்த ஆயுதங்களை வாங்குவதில் பல ஊழல்கள் நிகழ்ந்திருந்தன. இந்த ஆயுதங்கள் எல்லாமே மிக சாதாரணதர ஆயுதங்களாகவே இருந்ததாகவும் பேசப்பட்டது.

ஒபரேய் தேவனுக்கு பின்பு ரெலா இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனின் மச்சான் வந்தபடியால் ரெலா இயக்கம் புளொட்டுடன் இணைந்தது.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ராம்ராஜ்: நான் வெளியேறி போய்விட்டேன். இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் இலங்கைக்குப் போகும் போது நான் வெளிநாட்டில் இருந்தேன்.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, பலாத்காரமாக இளைஞர்களைப் பிடித்து பயிற்சி அளித்தது. குழந்தைப் போராளிகள். இவை பற்றி இன்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் உள்ள நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

ENDLF_Logoராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் இந்திய ராணுவத்துடன் இருப்பதால் ஈஎன்டிஎல்எப்க்கு அவதூறு உருவாக்க, கெட்ட பெயரை திட்டமிட்டு உருவாக்க இதில் பல வேலைகளை புலிகளே செய்துவிட்டு பழியை எம்மீது போட்டனர். புலிகள் வாகனங்களை மறித்தும் ஆட்களை இறக்கியும், கடத்தியும் பல கொடுமைகளை செய்துவிட்டு புலிகள் தாங்கள் தான் திறீ ஸ்ரார் என்றும் ஈஎன்டிஎல்எப் என்றும் சொல்லியே இந்த அலுவல்களைச் செய்தனர். இதைப் புலிகள் எல்லா இயக்கங்களுக்கும் செய்தது. தாங்கள் கொள்ளையடித்து விட்டு வேறு இயக்கங்களின் பெயரையே பாவித்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் புலிகள் பரவலாக இதனைச் செய்தனர். மற்ற இயக்கத்தவர்களிடம் கேட்டாலே இதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

தேசம்நெற்: ராம் நீங்கள் என்ன சுத்தமான சுவாமிப்பிள்ளை என்கிறீர்களா?

ராம்ராஜ்: நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் என் மீது – ராம்ராஜ் மீது, ராம் இது செய்தார், அது செய்தார், என்று கூறுபவர்கள் நேரடியாக என்னிடம் வந்து பேசுங்கள். நான் என்ன செய்தேன் என்று பதிலளிக்கத் தயார். எனது தொலைபேசி எனது விலாசம் தெரியாதவர்கள் யார்? ஏன் யாரும் என்னிடம் இப்படி பிரச்சினை இருக்கு என்பவர்கள் பேசவருவில்லை!

யாரும் தனது குடும்பமோ தானோ என்னால் பாதிக்கப்பட்டது என்றால் என்னிடம் நேரடியாக வந்து கேட்கட்டுமே. தேவைப்பட்டால் நீங்களும் பக்கத்தில் இருந்து கேட்டு தேசம்நெற்றில் பதிவிடுங்கள் பலரும் தனிப்படப் பேசலாம். தவறு என்றால் நேரடியாகப் பேச வேண்டும். நான் எத்தனையோ எழுதுகிறேன். எத்தனையோ பேசுகிறேன். எனக்கு புலிகளால் தனிப்பட்ட வகையில் பாதிப்பு இல்லை.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் ஈஎன்டிஎல்எப் குழந்தை இராணுவ அணியொன்றை உருவாக்கியது. இளைஞர்களைப் பலவந்தமாக கடத்திச் சென்று பயிற்சி அளித்தது?

ராம்ராஜ்: உண்மை தான். இது தவறுதான். இதனை உணர்ந்துகொண்டோம். இவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டும் உள்ளனர். அந்தத் தவறின் வலியை இப்போதும் உணர்கின்றோம். தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கக் காரணம் இந்தியப்படை வெளியேறப் போகிறது, அந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு இராணுவ கட்டமைப்பு வேண்டும். இதன் மூலம் நாட்டை பிரிக்க ஒருவழி ஏற்ப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் பெறப்பட்ட ஆலோசனைகளின் பெயரிலுமே இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. ஆனால் அது தவறிப்போய்விட்டது.

அதற்குப் பிராயச்சித்தமாகவே பெங்களுரில் இந்திராகாந்தி சர்வதேசப் பாடசாலையை உருவாக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பராமரிக்கின்றோம். ஆரம்பத்தில் இதனை எமது இயக்க குடும்பங்களுக்காகவே ஆரம்பித்தோம். ஆனால் தற்போது புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளில் இருந்த பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் நாட்டு முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்டவர்களது பிள்ளைகளும் அப்பள்ளியில் படிக்கின்றனர். அன்று இந்தியப் படைகளுடன் வந்த கப்பலை கருணாநிதி அரசு தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அக்கப்பல் ஒரிசாவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் காங்கிரஸின் ஆட்சியில் பெங்களுர் இருந்தபடியால் எமக்கு பாடசாலையை பெங்களுரில் அமைக்க முடிந்தது. இதுவரை 4000 மாணவர்கள் வரை கல்விகற்று வெளியேறி உள்ளனர். இவ்வாறான ஒரு சேவையை வேறு எந்த அமைப்பும் செய்திருக்கவில்லை.

அப்போது இந்த பிரச்சனைகள் நடைபெறும்போது பிள்ளைகளை கூட்டிப்போக 500 தாய்மார்கள் வந்தார்கள் என்றால் புலிகள் ஒரு ஆயிரம் பேரை கூட்டிவந்து எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராக சத்தம் போட்டனர். ஆனால் இப்படித்தான் புலிகள் தமது இறுதிக் கட்ட போராட்ட காலங்களிலும் தமது கடைசிக் காலத்திலும் செய்து புலிகள் மக்களால் தோற்கடிக்கப்படடனர்.

புலிகளின் தோல்விக்கும் காரணம் ஆட்கடத்தல்கள், இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்களைக் கடத்தி ஆயுதப் பயிற்ச்சி அளித்ததேயாகும். இதனால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தனர். இதனைத் தவறு என்று புலிகள் அன்று புரிந்து மக்களை எமக்கு எதிராக கூட்டி வந்தவர்கள். பிறகு தாங்களே இந்தத் தவறை மக்களுக்கு அப்படியே செய்தது பெரிய தவறாகிப் போயிருந்தது. இதனாலேயே புலிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்டனர்.

இதை எல்லா இயக்கங்களும் செய்தது. ரிஎன்ஏ (தமிழ் தேசிய இராணுவம்) இராணுவத்தை உருவாக்க இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் சொல்லியது. ‘நாட்டைப் பிரிக்க போகிறோம்! உடனடியாக படையை திரட்டுங்கள்!! இந்திய இராணுவத்தை வெளியேற்ற அரசு முயல்கிறது” அப்போது நாடு பிரியும் நிலை உருவானது. இந்தக் காலத்தில் புலிகள் பிரேமதாஸ அரசுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றினர். ஆனால் புலிகள் தமது இறுதிக் காலத்தில் இந்தியாவிடம் பேச முற்பட்டனர்.

அதைவிட இந்தக் காலத்தில் யார் பெரிய படையைத் திரட்டுவது என்ற நிலை இருந்தது. இதை எந்த மற்ற இயக்கத்தவர்களும் மறுக்க மாட்டார்கள். இந்தியப் படைகள் இருக்கும்போதே சிங்கள காடையர்களின் தொல்லைகள் நிறையவே கிழக்கு மாகாணத்தில் இருந்தது.

தேசம்நெற்: நீங்களும் ஈஎன்டிஎல்எப் உம் எப்போதும் இந்தியா மீது காதல் கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது அல்லவா?

ராம்ராஜ்: இராணுவம், ஆயுதப் போராட்டம் அல்லது எந்த வகையிலோ போராட்ட முடிவில் ஒரு நாட்டின் அங்கீகாரம் தேவை. இதற்கு இந்திய உதவி கட்டாயம் தேவை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் பல நல்ல நன்மைகள் உண்டு. இந்த ஒப்பந்தம் மூலம் மட்டும்தான் இந்திய அதரவை தமிழர் போராட்டத்திற்கு பாவிக்க முடியும். உரிமைகளைப் பெற முடியும். வட கிழக்கு தமிழர் தாயகம் என்ற சர்வதேச ஒப்பந்தம் அது தான். இதில் மேலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்படி செய்ய்பபட்டு இருந்தால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அது இருந்திருக்கும்.

இந்த ஒப்பந்தத்தை மேலும் செழுமைப்படுத்தி போயிருக்கலாம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்தா விட்டால் நாட்டைப் பிரிப்போம் என்று சொன்னதால் தான் நாம் இளைஞர்களை கட்டாய பயிற்ச்சிக்கு எடுத்துப் போனோம். ஓப்பந்த காலத்தில் 5 ஆயிரம் மக்களே இறந்திருந்தனர் ஆனால் அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் மக்கள், போராளிகள் இறந்து போயினர். அந்த ஒப்பந்தத்தை புலிகள் திட்டமிட்டு நிராகரித்தனர். யாரோ சொன்ன ஆலோசனையை கேட்டுத்தான் செய்துள்ளனர்.

தேசம்நெற்: இனப்பிரச்சினைக்கான தீர்வினை இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ராம்ராஜ்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிப்பது என்பது மகிழ்ச்சியான விடயம். ஆனால் அரசாங்கம் அதற்கும் வெகுவாக கீழே போய்த்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றல்லோ சொல்கிறது. 13வது திருத்த சட்ட மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஒன்று அதிலிருந்து கூட அரசு ஆரம்பிக்க மாட்டேன் என்கிறதே.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வு. ஜனாதிபதி கடைசியாக இந்தியாவிற்கு போனபோதும் இவைபற்றிப் பேசவில்லையே!

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் இந்தியாவுடன் இணைந்துதானே நம்பிக்கையுடன் செயற்படுகின்றீர்கள்?

ராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் யைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. அந்த விடயத்தில் ஈஎன்டிஎல்எப் மிகவும் தெளிவாக இருக்கின்றது.

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் தெளிவாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இன்று புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலைமையில், புலிகளை அழிக்கும் பணியில் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது. ஆயினும் ஏன் இந்தியா தமிழர்களின் அரசியல் விடயத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வில்லை?

ராம்ராஜ்: நாங்கள் சர்வதேச நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரும்போது சீனாவின் அழுத்தம் இந்தப் பிரச்சினையில் இல்லை. அனால் இன்று இது மிகமுக்கிய பிரச்சனை. இதை நாம் மிக அவதானமாக கவனத்தில எடுக்க வேண்டும். இலங்கை இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் எழுதினால் அடுத்த நாள் சீனா இலங்கையுடன் ஆறு ஒப்பந்தம் எழுதும். இதிலிருந்து தான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நிலைமைகளை இன்று பார்க்க வேண்டும்.

இதேநேரம் இன்னுமொரு நிலைமையையும் அவதானிக்க வேண்டும். இந்தியா 50,000 வீடுகளை கட்ட வட – கிழக்கு மாகாண அரசக்கு நேரடியாக பணத்தினை கொடுக்கப் போகின்றது. இதற்கு அரசு எப்படி உடன்பட்டது. இப்படியாக நடைபெறும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். இந்தியா இலங்கை அரசை நம்ப முடியாமல்தான் இப்படி செய்கின்றது என்று கூறமுடியாதா?

Indo Lanka Cartoonதேசம்நெற்: ராம் ஆரம்பகால போராட்ட நிலைமைகளுக்கும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் மாறாத உண்மையாக இருப்பது இந்தியா தனது நலனிலிருந்து தான் இந்த தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றது.

ராம்ராஜ்: சிலர் சொல்லக் கூடும் இந்தியா தமிழர்களை அழிக்கவே செயற்படுகிறது என்று. ஒன்று மட்டும் உண்மை, இந்தியா கடைசி வரைக்கும் புலிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சித்தது. எங்களுடைய ஈஎன்டிஎல்எப் அமைப்பினூடாக முயற்சித்தது. நாங்கள் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்பாளராக இருந்தோம். இது கடைசிக் காலங்களிலும் இடம்பெற்றது.

இலங்கையில் இன்னமும் ஒரு ஜனநாயக சூழ்நிலை உருவாகவில்லை. எப்படி புலிகள் மற்றவர்கள் மீது அழுத்தத்தை பிரயோகித்தார்களோ அதே போன்றே அரசும் தமிழர்கள் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த இந்தியா அவசியம்.

Karuna Colதேசம்நெற்: கருணா மீது பிற்காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நீங்கள் கருணாவிற்கு மாவீரர் தின உரையை எழுதிக் கொடுத்ததுடன் ஆரம்பத்தில் கருணாவுடன் இணைந்து செயற்படவும் முன் வந்திருந்தீர்களல்லவா? கருணா புலிகளிலிருந்து வெளியேறி ஈஎன்டிஎல்எப் இடம்தான் இந்தியாவிற்கு வந்தார். இவ்வாறு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்த அரசியல் மாற்றம் சந்தர்ப்பவாதம் என்று கொள்ளலாமா?

ராம்ராஜ்: இல்லை. அப்படியல்ல. கருணா எங்களை அணுகியதால் நாம் கருணாவிற்கான பாதுகாப்பை கொடுத்திருந்தோம். நாங்களும் கருணாவும் ஒரு சரிசமமான ஏற்பாட்டுடன் சேர்ந்து இயங்க உடன்பட்டோம். அந்த அடிப்படையில் ஈஎன்டிஎல்எப் அங்கு ஆட்களை அனுப்பி வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் பின்னர் வேறு பாதையில் கருணாவின் அணுகுமுறைகள் இருந்ததால் நாம் வெளியேற வேண்டி இருந்தது.

கருணாவின் அண்ணர் குகநேசன் போன்றோர் கருணா இப்படி போயிருப்பார் என்று எதிர்பாக்கவில்லை. கருணாவிடம் சரியான அரசில் தெளிவு இருக்கவில்லை.

தேசம்நெற்: நீங்கள் ஒரு முழுநேர அரசியல் நடவடிக்கையாளராக இருந்து எப்படி ஒரு ஊடகவியலாளராக மாறினீர்கள்?

ராம்ராஜ்: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வருகிறேன். அப்போது பிரித்தானியாவில் ஜபிசி வானொலியை தாசீசியஸ் ஆரம்பித்தார். அதனை 1991ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது என்னை தன்னுடன் இணைந்து வேலை செய்ய அழைத்தார். அப்போது வெளியே இருந்துகொண்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.அதிலிருந்து ஒரு வருடத்துக்குள் அதிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரிபிசியில் 22 பங்குதாரர்கள் இருந்தனர். தலா 2500 பவுண்ஸ் போட்டு வானொலியை அரம்பித்து 4 இயக்குனர்களை கொண்டு இயங்கியது. 11 வருடங்களுக்கு முன் ரிபிசி யை ஆரம்பிக்கும் போது நான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆரம்பத்தில் சில பணிப்பாளர்கள் இதையும் ஒரு குற்றச்சாட்டாக வைத்தார்கள். ஆனால் பின்பு எல்லாவற்றையும் அவர்கள் விளங்கிக்கொண்டனர். ஆனால் வேறு சிலரால் இது தொடர்ந்தும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் கட்சியின் அலுவல்களை ரேடியோவிற்குள் கொண்டுவரவில்லை. ஈஎன்டிஎல்எப் க்கு முன்னுரிமை கொடுத்து வானொலியை நடாத்தவில்லை. ஈஎன்டிஎல்எப் செய்தியை நான் எழுதிப் போடவில்லை. ஆனால் ஈஎன்டிஎல்எப் அனுப்பிய செய்திகளை வெளியிட்டுள்ளேன். 10 வருடமாக வானோலியை கேட்பவர்கள் தான் இதற்கு சாட்சியம். பின்னர் ஒரு தனி நிர்வாகத்தில்தான் ரேடியோ இயங்கியது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் திசைமாறிய பெரும் அழிவுகளைச் சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் வன்முறை அரசியலாக இருந்த காலகட்டத்தில் 10 வருடமாக வானொலியை இயக்கியது ஒரு சாதாரண விடயமல்ல. அதில் நீங்கள் குறிப்பாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் என்ன?

Ramraj_V_TBCராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் என்ற பிரச்சினை, புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினை. ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஜனநாயகம் பேசியவர்கள் சிலரும் பிரச்சினையை ஏற்படுத்தினர். நாம் ரேடியோவை தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க ஆரம்பிக்கவில்லை. நாம் ரேடியோவை ஆரம்பிக்கும் போது மக்கள் சுதந்திரமாக பேச வேண்டும், மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் கலாச்சாரம் வளர்க்கப்படல் வேண்டும், அதற்கு நாம் உதவிகள் எமது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்றே ஆரம்பித்தோம். இந்த கொள்கைகளிலிருந்து நாம் மாறவில்லை.

மக்கள் நான்கு சுவருக்குள் இருந்து சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லட்டும் நாங்கள் யார் வருகிறீர்கள் என்ன பெயரில் வருகிறீர்கள் என்றெல்லாம் அக்கறைப்படுவதில்லை. நாம் விரும்புவது அவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஊக்குவிப்பதேதான். அதில் நாங்கள் வெற்றிதான் கண்டுள்ளோம்.

Sivalingam Vஇன்று எல்லோரும் தங்கள் பெயரை சொல்லியே பேசுறாங்கள். இதை நாங்கள் வளர்த்துள்ளோம். இதை வளர்க்க நாம் பட்ட கஸ்டம் பாரியது. எமது அரசியல் ஆய்வார் திரு சிவலிங்கம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்த இங்கு கலந்து கொள்வதும் அடுத்தநாள் வேலைக்கு போவதும் அன்று ஒரு இலகுவான காரியமல்ல. இன்று திரு சிவலிங்கம் சொன்ன ஒவ்வொரு ஆய்வையும் எடுத்துப் பார்த்தால் அவை ஒவ்வொன்றும் அப்படியே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் நாங்கள் புலிகளுக்கு எதிராக விமர்சனம் வைக்கும்போது புலிகளின் ஆதரவாளர்கள எம்மை அரச உளவாளிகள் என்றும் பின்பு அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் போது இலங்கை அரச தரப்பினர் எம்மை புலிகள் என்றும் சாயம் பூசினார்கள். இது உண்மையல்ல அன்று நடக்கும் நிகழ்வுகளை மக்கள் முன்வைப்பது தான் எங்கள் கடமை. மக்களுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்துவதே எமது கடமை அதை நாம் சரிவர செய்துள்ளோம்.

தேசம்நெற்: ஜபிசி யின் ஆரம்பகாலத்தில் நீங்களும் அவ்வானொலியில் பங்கெடுத்து இருந்தீர்கள். ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஐபிசி இலும் பின்னர் இணைந்து கொண்டனர். ஆனால் பிற்காலத்தில் ரிபிசி வானொலியை மதிப்பிழக்கச் செய்யும் பரவலான குற்றச்சாட்டுகள் ஐபியில் வெளிவந்தது.

ராம்ராஜ்: அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாம் எப்பவுமே நேசக்கரம் நீட்டியபடியேதான் இருக்கிறோம். எமக்கு எதிராக சேறடித்தவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்தவர்கள் எம்மை திட்டி ரேடியோ பிரச்சாரம் நடாத்தியவர்கள் எல்லோரும் இன்று எம்முடன் நட்டபாகவே உள்ளனர். அவர்கள் இன்று என்னிடம் வரும்போது நாம் அவர்களை பழிவாங்கவில்லை. வணக்கம் வாங்கோ! என்ன உதவி தேவை! என்று தானே கேட்கிறேன். இது அவர்களுக்கு நாம் அன்றும் இன்றும் ஒரே மாதிரித்தான் உள்ளோம் என்பதை புரியவைத்துள்ளது அவர்களும் புரிந்துள்னர்.

TBC Break-inபுலிகளின் அதிதீவிரவாத ஆதரவாளர்கள் நேயர்கள் அவதூறுப் பேச்சுக்கள் எம்மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. நேரடியாக தனிப்பட்ட எந்த தாக்குதல்களும் புலிகளால் எனக்கு நடாத்தப்படவில்லை. எத்தனையோ இடங்களுக்கு, எத்னையோ நாடுகளுக்கு போயுள்ளேன் எங்கு போனாலும் வானொலியில் சொல்விட்டுத்தான் போகிறோம். யாரும் என்மீது தீண்டியதில்லை.

ரிபிசி வெளியிட்ட வான்முரசு பத்திரிகைக்கு அவதூறு ஏற்பட்டபோது அந்த அவதூறுக்கு எதிராக கண்டித்து தேசம் பத்திரிகை த ஜெயபாலன் மட்டுமே எழுதியுள்ளார். இன்று எத்தனையோ பேர் எமக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் அன்று எமது பத்திரிகைக்கு நடந்த அவதூறை கண்டித்தது ஜெயபாலனின் துணிவான செயலாகும். தேசம் அன்று செய்த உதவி மிகவும் முக்கியமானதாகும் அதற்கு நாம் என்றென்றும் நன்றியுடன் மதிப்புடனும் உள்ளோம்.

தேசம் ஜெயபாலனின் “ஆர்ட்டிகல் 19 கட்டுரையும் அதன் ஆசிரியர் தலையங்கமும்” என்ற கட்டுரையுடன் தான் தேசத்துடனும் ஜெயபாலனுடனும் தொடர்பு உருவானது. நாம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அன்று எமது ரிபிசி ரேடியோவை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரியான காலத்தில் தேசம் எமக்காக குரல் கொடுத்தது அந்தக்காலத்தில் எத்தனையோ பத்திரிகைகள் ரேடியோக்கள் ஜனநாயகம் பேசியவர்கள் இது பற்றி கதைக்கவில்லை இன்று இவர்களும் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு. ஆவேசம். அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள். இவற்றிக்கும் ஊடாக தமிழர்களின் அரசியலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது இந்தக் காலகட்டத்தை எப்படி வெற்றிகரமாக நகர்ந்து வந்தீர்கள்?

ராம்ராஜ்: இதனால் தான் நான் ஈஎன்டிஎல்எப் யை ரிபிசியில் சம்பந்தப்படுத்தவில்லை. காரணம் ஈஎன்டிஎல்எப் எப்பவுமே இந்திய உதவியுடன்தான் தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்க வேணும் என்ற கருத்துடையவர்கள்.

புலிகள் மக்களுக்காக போராட்டத்தை நடாத்துகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் பலமாக உள்ளது. இந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் புலிகளினால்த்தான் அரசுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இது புலிகளின் தவறான போராட்டத்தின் பாதிப்பு. உள்ளதைத் தெரியப்படுத்த ஆரம்பித்தோம். தமிழ் மக்கள் பணத்தில் போராட்டம் நடக்கிறது. இந்தப் பணம் எங்கே போகிறது, எப்படி செலவிடப்படுகிறது போன்ற விடயங்களை கேட்க ஆரம்பித்தோம்.

இராணுவம் 50 பேர் கொல்லப்பட்டனர். சரி இந்த சம்பவத்தால் எப்படி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப் போகிறீர்கள்? இது பற்றிய ஆய்வு, தமிழர் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் இந்தியா பற்றிய நிலைப்பாடு என்ன? புலிகள் தொடர்ந்தும் இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பதா? புலிகளின் ஏகபோக பிரதிநிதித்துவம் பற்றி, புலிகளினால் செய்யப்பட்ட சகோதரப்படுகொலைகள் பற்றி, மற்ற இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தினோம், ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் புலிகள் தமிழர்களை கொல்கிறார்கள், இதை மக்களிடம் கேட்டுள்ளோம். மக்களிடம் கொண்டு போயுள்ளோம். மக்களை சிந்திக்க வைத்த நீலன் கொல்லப்பட்டார். கதிர்காமர் கொல்லப்பட்டார். இப்படி தலைவர்களை தமிழர்கள் கொலை செய்வது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருந்தோம்.

TBC_Logoஜரோப்பாவில் எத்தனையோ ரேடியோக்கள் இருந்தன. ஆனால் ரிபிசி ஒன்று மட்டும்தான் மாற்று கருத்துத் தளத்தை உயர்த்தியது என்பது உண்மை. எல்லோருமே புலிகளுக்கு வக்காளத்து வாங்கினார்களே தவிர மக்களைப் பற்றி மக்களுக்கான அரசியலைப் பேசவில்லையே. நாம் பேசினோம்.

மற்றவர்களால் உயர்த்த முடியாதா தளத்தையே நாம் உயர்த்தினோம். எமக்கு இருந்த குறைந்த அளவு வளங்களுடன் நாம் இதைச் செய்தோம். இதே காலத்தில் வேறு பல ஊடகங்களும் தாமும் மாற்று கருத்தாடல்கள் என்றும் பேசினார்கள்.

ஜந்து வருடத்திற்கு முன்பே பிரபாகரன் பேச்சையும் முதன் முதலாக ஒலிபரப்பினோம். அதே நேரத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையும் நேர்முகம் செய்து வெளியிடுகிறோம். இன்று யாரும் செய்யலாம் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டது. அன்று இதை செய்ய துணிவும் சிந்தனைத்திறனும் இல்லாது போன ஊடகங்களே அதிகம்.

ஆஸ்ரப் கொல்லப்பட்டபோது எமக்குத்தான் புலிகள் இந்த செய்திகளை உறுதிசெய்யக் கேட்டார்கள். புலிகள் எம்முடன் நேரடியாகவே தொடர்பில் இருந்தார்கள். எம்முடன் பேசினார்கள். முதல் முதல் மாவீரர் தினத்தை பிரபாகரன் பேச்சை ஒலிபரப்பியதே ரிபிசி தான். பின்பு தான் ஜபிசி கூட அன்று ஒலிபரப்பி இருந்தது இதுதான் உண்மை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடாக பிரபாகரனின் மாவீரர் தின உரையை மக்களுக்கு எடுத்துப்போனது ரிபிசியே தான் என்பதையும் மறக்க முடியாது.

அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசும் நாம் செய்வது தவறு என்று சொன்னது. புலிகளும் எங்களை தவறு என்றனர். இருவருமே அழுத்தத்தை கொடுத்தனர். புலிகள் நோர்வேயுடன் பேசி பேச்சுவார்த்தைக்கு போகும்போது அரசிடம் கேட்ட கோரிக்கைகளில் ஒன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ரிபிசி செய்யும் ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதாகும். இப்போதும் தமிழ்நெற்றில் இந்த செய்தி உள்ளதைப் பார்க்கலாம்.

ஆகவே நாம் சரியான பாதையிலே இருக்கிறோம் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எங்களை றோவுடன் தொடர்பு என்றும் இலங்கைப் புலனாய்வுடன் தொடர்பு என்றெல்லாம் சொல்லுவார்கள். நான் வெட்கப்படவில்லை. யாருடனும் நான் பேசுவேன். எமது விடயம் மீடியா மக்களுக்கு செய்தியை எடுத்துப்போவது தான். நாங்கள் விலை போகாமல் இலங்கை அரசு இந்திய அரசுடன் செயற்பட வேண்டும் ஆனால் இந்தியாவின் தயவு இல்லாமல் நாங்கள் நினைத்ததை செய்ய முடியுமா?

தேசம்நெற்: நீங்கள் ஊடகம் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியலை முதன்மைப்படுத்துகின்றீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவையும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமைப்பையும் ஆதரித்து இருந்தீர்களே?

ராம்ராஜ்: நான் தேர்தல் காலத்தில் மகிந்தாவுக்கு பலமான எதிர்ப்பு. மகிந்தாவுக்கு எதிராக யார் நின்றாலும் சரி என்ற ரீதியில் மட்டும் தான் ஆதரவு அளித்தோம். அதற்காக மற்றவர்களின் கருத்தை தடுக்கவில்லையே.

ஜனாதிபதி மாவீரர்கள் கல்லறையை உடைப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதை உடைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் அரசு அதை உடைத்தது. அந்த இடத்தில் அரசு இராணுவ வீரர்களின் கல்லறைகளை உருவாக்குவது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விடயமாகவே உள்ளது. இராணுவத்திற்காக தூபிகள் கட்டலாம் ஆனால் அந்த மக்களை வேதனைப்படுத்தி அந்த இடத்திலேயே காட்டுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

முறிகண்டி புனிதப்பிரதேசம் அங்கே போய் 5 ஸ்ரார் கோட்டல்களை கட்டினால் அங்கே மாட்டிறைச்சிக் கடை வரத்தான் போகுது. இங்கே தான் இப்படித்தான் மக்களை புண்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிய பிறகும் அரசு அதையே செய்கிறது. ஆனால் பௌத்த புனித பிரதேசங்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றது. இப்படித்தான் இலங்கை அரசு செயற்ப்படும் என்றால் இன்னும் ஒரு 20 வருடங்களின் பின்னர் போராட்டம் வேறு வடிவில் உருவெடுக்கும்.

புலம்பெயர்ந்து பெரிய அளவிலான இளம்தலைமுறை வளத்துடன் படிப்புடன் உள்ளது. நாட்டில் 83ம்ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம்தலைமுறை தமக்கு அரசியல் உரிமையில்லை என்று கூறுகின்ற சந்ததி உண்டு. அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பதை அரச உணரத் தவறுகிறது.

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழர்க்கான அரசியல் தீர்வை முன்வைக்காது போனால் எதிர்காலத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்களும் உங்கள் அமைப்பும் இந்தியாவுடன் மிக அன்யோன்னியமான உறவைக் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமானால் அதனை இந்தியா ஆதரிக்குமா?

ராம்ராஜ்: திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் போராட்டம் நடைபெறும். அதன் இறுதியில் ஆயுதம் பாவிக்கப்படலாம். இலங்கையில் சீனாவின் நிலைப்பாடு எப்படி எதிர்காலத்தில் இருக்கும் என்பதைப் பொறுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.

தேசம்நெற்: கடந்த ரிபிசியின் வரலாற்றில் 2010 வரைக்கும் உள்ள வரலாற்றுக் காலத்தில் ரிபிசியின் பணிகள் பற்றி உங்கள் கருத்துக்கள்?

ராம்ராஜ்: இன்று வரைக்கும் ஆயுத கலாச்சாரம், ஆயுத வன்முறை பற்றித்தான் பேசினோம். இனிமேல் தான் அரசியல் பேசப்போகின்றோம். ரிபிசி கேட்கிற மக்களுக்கு அரசியலை வளர்ப்பதைத்தான் ரிபிசி இனிமேல் செய்யும். கடந்தகால வன்முறைக் கலாச்சாரத்தை விமர்சிப்பதை புலிகளின் வரலாற்றுத் தவறுகளை விமர்சிப்பதும் இதைவிட எல்லாதரப்பு தலைவர்கள் அரசியல் ஆய்வாரள்கள் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒன்று சேர இருந்து பேச ரிபிசி களத்திற்கு கொண்டுவந்து கலந்துரையாடுவதும், இனிமேல் நாம் எப்படி ஏமாற்றப்படப் போகிறோம் என்பதையும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காகவும், அரசியல்பேச வேண்டும். அதற்கான உந்து சக்தியாக இருக்க அரசியல் பேச வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க நாம் போராட வேண்டியுள்ளது.

மக்கள் அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், மக்கள் இந்தியாவிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், ரிபிசி யை எல்லோரும் கேட்கிறார்கள். இந்த ஊடகக் கடமையை ரிபிசி செய்யும். ரிபிசியை கேட்கும் அரசுகளும் இதில் வரும் கருத்துக்களை அவதானிக்கிறார்கள். இது தமிழ் மக்களின் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. இது இலங்கை அரசுக்கும் போய் சேருகின்றது.

இதைவிட மிக முக்கிய பணி உள்ளது. மக்களின் பணம், பெரும் பணம் இங்கு உள்ளது. அது சேர்த்தவருக்கோ அல்லது புலிகளின் பணமோ அல்ல. அது தமிழ் மக்களின் பணம். அது மக்களிடம் போய்ச்சேர வேண்டும். இந்த விடயத்தில் தேசம் ஆசிரியர்கள் நிறையவே செய்கிறார்கள். தேசம் உட்பட நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசை எமது நியாயத்தன்மையை உணரவைக்க வேண்டும்.

இன்று ஊடகங்களில் புலிகளின் பினாமிகள் பெரும் வியாபாரிகளாகிவிட்டனர். இதுவும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஜனநாயகம் பேசுபவர்கள் ஏன் கோவில் கட்டுகிறார்கள். அங்கே எது போலியானது என்பதும் அவர்கள் உள்நோக்கமும் என்ன என்பது தெளிவானது.

தேசம்நெற்: வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர். ஈஎன்டிஎல்எப் இன் உறுப்பினர். வி ராம்ராஜ் இன் உண்மையான அடையாளம் அல்லது அவரின் விருப்பமான அடையாளம் என்ன?

Ramraj_V_Sivalingam_V_TBCராம்ராஜ்: ராம்ராஜ் என்றால் ரிபிசி. ஈஎன்டிஎல்எப் என்றால் முஸ்தபா. இது இரண்டுமே எனது உண்மையான அடையாளங்கள் தான்.

தேசம்நெற்: இறுதியாக குறிப்பாக எதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

ராம்ராஜ்: பிரிட்டன், இந்தியா, இலங்கை அரசுகளுடன் தொடர்பில் உள்ளேன். எந்தத் தொடர்பையும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பாவிக்கவில்லை. எல்லாமே பொது தேவைக்காகவே பாவித்துள்ளேன். மக்களை, கருத்துச் சொல்ல விரும்புபவர்களை, அரசுக்குச் சொல்ல விரும்புபவர்களை, தலைவர்களுக்கு சொல்ல விரும்புபவர்களை, கருத்துச் சொல்ல இடம் கொடுப்போம். சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல சிந்தனை வளர இடமளிப்போம். இதை ரிபிசி எப்போதும் செய்யும்.

”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்

Chandrakumar_MP_Jaffna_EPDPவன்னிப் பகுதிகளில் தற்போதுள்ளதை விடவும் மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் எரிபொருள் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அமைச்சர் சுசில் பிறெம்ஜெயந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை எந்த நாட்டிற்கும் வழங்கப்பட மாட்டாது” அமைச்சர் பி.தயாரட்ண

KKS_Cement_Factoryகாங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ வழங்கப்பட மாட்டாது என அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ண தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவ்வேளையிலேயெ இவ்வாறு அவர்  தெரிவித்தார். வெகு விரைவில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்கச் செய்யப்படும் எனவும், உடனடியாக இதனை இயங்கச்செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் சந்ததியும் இத்தொழிற்சாலையை பயன்படுத்த வேண்டும். இத்தொழிற்சாலை இந்தியாவிற்கு விற்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்ததோடு, எந்தவொரு நாட்டிற்கும் இத்தொழிற்சாலை வழங்கப்படப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரவித்துள்ளார்.  பல வருடங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு மீளவும் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலையகம் நாவலப்பிட்டியில் போக்குவரத்துப் பயணிகள் திடீர் சோதனைக்குட்பட்டனர்!

கண்டி மாவட்டத்திலுள்ள நாலப்பிட்டியில் நேற்று பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாவலப்பிட்டி நகரூடாகச் சென்ற சகல போக்குவரத்து வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டு, பயணிகள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் தேசிய அடையாள அட்டைகள் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் தென்னிலங்கைப் பகுதிகளிலோ, மலையகப் பகுதிகளிலோ போக்குவரத்து வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படும் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருந்தன. தற்போது சிறிது சிறிதாக இந்நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.  இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை எற்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியர் நதீகாவின் மரணம்; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

mosquito.jpgடெங்கு நோய்க்கு உள்ளாகி உயரிழந்த பதுளை ஆஸ்பத்திரி வைத்தியரின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய வைத்தியர் நதீகா லக்மாலி விஜயநாயக்க டெங்கு நோய்க்கு உள்ளாகி பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவ்வாறான நிலையில் இவரது தந்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பதுளை ஆஸ்பத்திரியில் தமது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வைத்தியர் நதீகாவின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். டெங்கு நோய்க்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரான நதீகா அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுள்ளார்.  இருப்பினும் இவரது ஆரோக்கியத்தில் அங்கு பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உரிய கவனம் செலுத்தினார்களாக என உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேநேரம் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி டெங்கு ஒழிப்பு தொடர்பான துரித வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. “இவ்வேலைத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் மாகாண சபை களுக்கும், உள்ளூராட்சி மன்றங் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புக்களை எவரும் தவிர்ந்து நடக்க முடியாது.  டெங்கு நோயை ஒழிப்பதற்காக எல்லோரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் மேலதிக செய லாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.