July

July

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – அமைச்சர் கெஹலிய

வட பகுதியில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இதுவரையில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார். குறிப்பாக பொலன்னறுவை அனுராதபுரம் உள்ளிட்ட 1746 சதுர பரப்பளவைக்கொண்ட நிலப்பகுதியிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார்

மகள் மீது பாலியல் வல்லுறவு; தந்தைக்கு 10 வருட கடூழியச் சிறை

தனது 14 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதவான் எஸ்.டி. அப்ரா தாஸிம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கினார்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மேற்படி தந்தை தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஆனமடுவ திறல்வெவ வட்டகெதர வாசியான சோமதாஸ என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தத் தவறின் மேலதிகமாக மூன்று மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாவை நஷ்டஈடாக வழங்கவும், நஷ்ட ஈட்டை செலுத்தத்தவறின் மேலதிகமாக ஆறுமாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

4 குழந்தைகளின் தந்தையான இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள சமயம் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த தனது மூத்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பாங் கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டம் உயர்வு

இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.

பேச்சுவார்த்தையில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். – மனோ கணேசன்

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனநயாக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

Erik_Solheim_Pirabaharan_Vதமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்தவரான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இலங்கை சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கூறினார்.

எல்ரிரிஈ தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை 2009 பெப்ரவரி முற்பகுதியிலேயே தேசம்நெற் இல் வைக்கப்பட்டது. எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை அப்போது வலியுறுத்தி வந்தோம். 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ”நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

”(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்” என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

”யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு” எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ”தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீய ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்” எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மெளனமாகவே உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

அமெரிக்க யுத்தக் கப்பல் திருமலையில்

war.jpgஅமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசுபிக் பிராந்திய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை. திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல் நாளை வெள்ளிக்கழமை (16) வரை தரித்து நிற்கும். இக்கப்பலில் வந்தோர் திருகோணமலையில் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற இவர்களுள் ஒரு பகுதியினர் அச்சிறுவர் இல்லத்திற்கு வேண்டிய வர்ணங்களை பூசியதோடு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு சென்று திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வந்துள்ள படையினரை இலங்கை கடற்படையினர் வரவேற்று இவ் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். திருகோணமலையில் இவர்கள் சமூக அபிவிருத்தி வேலைகள், மருத்துவ முகாம்கள், என்பனவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு

கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள கடலேறிக்கருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் 20 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பில் வைத்திய பொறுப்பதிகாரி கைது!

வேலணை வைத்தியசாலையில சுருக்கிட்ட நிலையில் மரணமான மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நேற்று (14-07-20100) நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார். மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் நடைபெற்றது. மரணமான தர்சிகாவின் சகோதரி, வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள், சம்பவ தினத்தன்று சடலம் மீட்கப்பட்ட விடுதி அறைக்கதவை உடைத்துத் திறந்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதன்படி தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும், டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் தர்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வைத்தியப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவமாது தர்சிகாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக பலர் வாக்குமூலமளிக்க முன்வந்த போதிலும், பொலிஸார் அவற்றைப் பெற மறுத்துவிட்டதாகவும், அதனால் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் நேற்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.