இலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.
ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.
தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.
நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.
நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.