ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பான எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் கிடையாது. இந்தக் குழுவின் செயற் பாட்டுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவோ விசாரணைக்காக இலங்கை வரவோ இடமளிக்கமாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது என பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;
மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி விசாரணை செய்ய முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். உள்நாட்டில் இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கையில் சர்வதேச குழுவொன்று தேவையில்லை. இவ்வாறு குழுவொன்று அமைக்கத் தேவையில்லையென சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் கூறியுள்ளன.
ஜனாதிபதி நியமித்துள்ள குழுவிற்கு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை வெளியாக முன் சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கத் தேவையில்லை. எமது விசாரணையில் குறைபாடுகள் இருந்தால் ஐ.நா. குழுவை நியமித்திருக்கலாம். உலகின் பல நாடுகள் யுத்தத்திற்கு
முடிவு காணமுடியாத நிலையில் இலங்கை வெற்றிகரமாக யுத்தத்திற்கு முடிவு கட்டியது. இதனை தாங்க முடியாத சில நாடுகள் இலங்கை தொடர்பில் இரட்டை வேடமிட்டு வருகின்றன. புலிகளுக்கு ஆதரவான சில சக்திகளின் அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் குழுவொன்றை நியமித்தார். ஒரு வருடத்திற்கு முன் இலங்கை தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஐ.நா. முயன்றது. அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை தோற்கடித்தோம். சரத் பொன்சேகாவின் ‘வெள்ளைக் கொடி’ கதையினால் மீண்டும் இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. எனவே விசாரணை நடத்தத் தேவையில்லை என அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படவில்லை. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடலுக்காகவே ஐ.நாவுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். ஐ. நா. நடவடிக்கைகள் வழமைபோல சுமுகமாக இடம்பெறுகின்றன. ஜனநாயக வட்டத்திற்குள் எவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. தமது கட்சி நிலைப்பாட்டின் படியே விமல் வீரவங்ச உண்ணாவிரதம் இருக்கிறார் என்றார்.