July

July

இறுதிக்கட்டப் போரின் போது, பெண்ணின் முள்ளந்தண்டுள் புகுந்த துப்பாக்கிச் சன்னம் ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பெண்ணொருவரின் முள்ளந்தண்டில் ஊடுருவிய துப்பாக்கிச் சன்னம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற போரில் ஒரு துப்பாக்கிச் சன்னம் பெண்ணொருவரின் இடுப்பு முள்ளந்தண்டில் புகுந்து மிகுந்த வேதனையை எற்படுத்தி வந்தது.

கடந்த சனிக்கிழமை (July 03 2010) சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலம் இத்துப்பாக்கிச் சன்னம் அகற்றப்பட்டுள்ளது. நாவற்குழி மறவன்புலவு என்ற இடத்தைச்சேர்ந்த எஸ்.கமலேஸ்வரி (வயத 26) என்ற பெண்ணின் உடலில் இருந்தே இத்துப்பாக்கிச் சன்னம் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது காயப்பட்டு உனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்கள், எறிகணைகளில் துண்டங்கள் என்பன இன்னமும் அகற்றப்படாமலுள்ளமை குறிப்பித்தக்கது.

அச்சுவேலிப் பகுதியில் 25 ஏக்கரில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் முகமாக அச்சுவேலிப் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஐந்து ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை முதலீட்டுச் சபையின் வடபிராந்திய அலுவலகம் மெற்கொண்டுள்ளது. கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் அனுமதியுடன் அச்சவேலியில் 25 எக்கரில் இம்முதலீட்டு ஊக்கவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

திருகோணமலை மொறவேவ பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம்  எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியான இச்சிறுமி சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

அச்சந்தேக நபர் தடுப்பிலிருந்து தப்பிச்சென்று விட்டார் இந்நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றமைக்கு பொலிஸ் அதிகாரிகள் யாருடையதும் உடந்தை இருந்ததா என்பது குறித்து விசேட பொலிஸ் அணி ஒன்று விசாரணை நடத்தி வருகின்றது.

ஸ்பெயின்- இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

spain.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று ஸ்பெயின், ஜெர்மன் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின்  அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நெதர்லாந்து ஸ்பெயின் என்பவற்றுக்கிடையான இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி நடைபெறவுள்ளது.

ஐ. நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; – உள்ளூர், சர்வதேச பொறுப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசு கையாள்கை – தகவல் திணைக்களம் அறிக்கை

unproout.jpgகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு வெளியே நேற்று முன் தினம் (06) இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் அதன் உள்ளூர் மற்றும் சர்வதேச பொறுப்புகள் நிறைவேறும் வகையில் கையாண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரட்ன அத்துகலவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் உள்ளூர் மட்டத்தில் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது. எனவே, சமாதான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, அலுவலகத்துக்கு வெளியே சமாதான முறையில் கூடுவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அதேவேளை, அரசாங்கம் தனது சர்வதேச பொறுப்பை நன்குணர்ந்த நிலையில் ஐ. நா. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்பவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போதுமான பொலிஸாரை அங்கு குவித்திருந்தது. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விழிப்புடனும் எதனையும் சமாளிக்கும் நிலையிலும் இருந்தனர்.

அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் மாலையில் வேலை முடிந்ததும் சுதந்திரமாக வெளியேறுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். பெருமளவு ஊழியர்கள் இவ்வாறு வெளியேறிய பின்னர், ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் மட்டுமே உள்ளே இருந்தபோது, வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரியொருவருடன் பேச வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். இலங்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உதவுவதற்காக ஐ. நா. செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளமை தொடர்பாக தமது கவலையைத் தெரிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இந் நிலையில், வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு ஐ. நா. அலுவலகத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு சிலர் மட்டும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் ஐ. நா. அலுவலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை சந்தித்து தமது கருத்தை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த செயற்பாடு நிறைவேற்றப்பட்டதையடுத்து ஐ. நா. உத்தியோகத்தர்கள் அலுவலகத்தை விட்டகன்றனர்.

இந் நிலையில் கொழும்பில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் எதிர்காலத்தில் வழமை போல் இயங்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இலங்கை தொடர்பான ஆலோசனைக்குழு விடயம் மீள் பரிசீலனை செய்யப்படும் வரை எதிர்ப்பியக்கம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதாக அரசாங்கத்துக்கு தெரிந்துள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்குள் அதிகாரம் பெறப்பட்ட நபர்கள் சென்று வருவதற்கான சுதந்திரம் வழமை போன்றே தொடர்ந்தும் இருந்து வரும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது

எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்

Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் அங்கு பொதுக் கிணறுகள் எதுவும் இல்லை. அதனால் எழுவை தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் எழுவைதீவு கீராமசேவகர் ஆகியொருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

தீவை மீள்மேம்படுத்தும் சமூகம் -Islands Restoration Society (IRS)  எழுவைதீவில் ஊசிக்கிணறு அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு லிற்றில் எய்ட் இடம் விண்ணப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊசிக் கிணறு அமைக்கும் திட்டத்துடன் எழுவை தீவு சென்று கிராமத் தலைவர்களுடன் உரையாடியதில் அவர்கள் பாரம்பரயமான கிணறும் கிணற்றடியும் தான் தம் ஊருக்கு பொருத்தமானது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊசிக்கிணற்றுத் திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரிய கிணறு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

Elluvaitheevu_Fishermen_Co-Operative_Societyயூன் 24 2010ல் எழுவைதீவு கடந்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் எழுவைதீவு கிராமசேவகர் வி வடிவழகன் எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகச் செயலாளர் அருள்நாதன் அமலநாதன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இக்கிணறு வெட்டும் வேலைத்திட்டத்திற்கு 130 000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிபுணத்துவம் மிக்கவர்களை மேற்பார்வைக்கு நியமிக்குமிடத்து கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம்  தங்கள் உழைப்பை வழங்கும் என தெரிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை கிராமசேவகரும் முன் வந்துள்ளார்.

எழுவைதீவு சுகாதார மையத்திற்கு மருத்துவ உதவி:

Elluvaitheevu_Medical_Centreமேலும் லிற்றில் எய்ட் மேற்கொண்ட இப்பயணத்தின் போது எழுவைதீவு சுகாதார மையத்திற்கு 1200 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. தீவின் மருத்துவ அலுவலர் ஈ ஞானச்செல்வி லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைனிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இம்மருந்துப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு டென்மார்க்கினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே.

ஊர்காவற்துறை பொது மருத்துவமனையில் லிற்றில் எய்ட்:

இந்த விஜயத்தின் போது ஊர்காவற்துறை பொது மருத்துவ மனைக்கு 20 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. பொது மக்கள் சார்பில் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அருணா புண்ணியமூர்த்தி லிற்றில் எயட் இடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.

ஊர்காவற்துறையில் 18 000 பேர் வாழ்கின்றனர். ஊர்காவற்துறை பொது மருத்துவமனை 58 000 பேருக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றது. அப்பகுதியில் உள்ள தீவுவாழ் மக்களுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை இதுவே.

Kayts_General_Hospitalலிற்றில் எய்ட் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து மருந்துவகைகளை விநியோகம் செய்திருந்தது. அந்த வகையில் ஊர்காவற்துறை மருத்துவமனை மிகவும் சுகாதாரத்துடன் பேணப்படுவதாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை மாதம் 15 அவசர பிரசவங்களைக் கையாள்கின்றது. ஆனால் அங்கு அல்ராசவுண்ட் ஸ்கான் போன்ற வசதிகள் இல்லை. மருத்துவ மேலதிகாரி டொக்டர் புண்ணியமூர்த்தி இது பற்றி லிற்றில் எய்ட் இடம் விணணப்பித்துள்ளார். இதுதொடர்பாக லிற்றில் எய்ட் ரஸ்டிகள் சந்தித்து ஆராய உள்ளனர்.

தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட லிற்றில் எய்ட் உதவித் திட்டங்களுக்கு தீவுப்பகுதிகளை மீளமேம்படுத்தும் சமூகம் – Islands Restoration Society (IRS) குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த சிறீபதி சிவனடியார் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்.

இவ்வுதவித் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவலக்கு: http://littleaid.org.uk/report-on-island-projects-elluvaithivau-kayts

”தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைய வேண்டும்.” எம்.கே.சிவாஜிலிங்கம்

Sivajilingam M K Presidential Candidate“தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தற்போது ஒன்பது கட்சிகள் இணைந்துள்ளன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணத்துக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடும்போதே இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டதன் நோக்கம் தேர்தல்களில் போட்டியிடுவதற்கல்ல. அரசுடன் இணந்திருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து தேர்தலில் நாம் போட்டியிட முடியாது. அமைக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் கே.பி என்ற குமரன் பத்மநாதன், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரையும் இணைப்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். இதற்கு ஏனைய கட்சிகள் இடமளிக்கவில்லை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைய வேண்டும் அப்போது தான் அது சாத்தியமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு ஆரம்பத்தில் தானும், புளொட் சித்தார்த்தனும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால், அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவின் அழைப்பின் பேரில் கடந்த 24ஆம் திகதி சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தற்போது தமிழ்கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்றைய (June 6 2010) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றி அப்பிரதேச மக்களை மீள் குடியேற்றம் செய்யவேண்டும் எனக் கோரியும், காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சனைகளை அறிய தெல்லிப்பழையில் நடமாடும் சேவை.

Gunasegara D E W_Ministerவவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய நடமாடும் சேவை ஒன்று யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் இச்சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர, பிரதி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் இச்சேவையில் கலந்து கொள்ளவுள்ளனர். புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர். உறவினர்கள் தங்கள் பிரச்சினைகளை இதன் பொது முன்வைத்து, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.அரசஅதிபர் கே.கணேஸ் அறிவித்துள்ளார்.

‘தமிழியல் விருது – 2010’ படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் படைப்பாளிகள் 2009 ஜனவரி தொடக்கம், டிசெம்பர் 31வரை வெளிவந்த தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லறவு இலக்கியம். தொழில்நுட்பம், என பல்துறை சார்ந்த நூல்களையும், சுமார் 30 நிமிடம் வரை ஒளிபரப்பக்கூடிய குறுந்திரைப்படங்களின் இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் 13 நூல்களுக்கும், மூன்று குறுந்திரப்படங்களுக்கும், இலக்கிய மேம்பாட்டிற்கு உரமிட்ட மூத்த படைப்பாளி ஒருவருக்கும் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். படைப்பாளிகள் தங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட்ட விபரங்களை குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விபரப்பட்டியலுடன், ஆக்கங்கள் நூல்களாயின் அவற்றின் நான்கு பிரதிகளையும், இறுவட்டாயின்  இரண்டு பிரதிகளையும், இணைத்து 10.08.2010 இற்கு முன்னர் அனுப்ப வேண்டும். ஒரு படைப்பாளி எத்தனை படைப்பாக்கங்களையும் அனுப்பலாம். விருது வழங்கும் விழா இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும்.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு இலங்கை. தொலைபேசி- 0776041503.

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய சிமெந்து பக்கற்றுக்கள்!

Construction Workவடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு எட்டு பக்கற் என்கிற அளவில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 45ஆயிரத்து 415 குடும்பங்களுக்கு 3 இலட்சத்து 63 ஆயிரத்து 385 சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தபட்ட குடும்பங்களுக்கே இவை வழங்கப்பட்டுள்ளன. இச்சிமெந்து மக்கற்றுக்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை என்பதும், அப்பக்கற்றுக்களில் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பு என பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீள்குடீயெற்றத்திற்கான இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இந்திய அமைச்சர் ப சிதம்பரம் 50 000 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கான உதவிவை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப் போவதாகவும் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த உதவித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த சிமெந்துப் பக்கற் வழங்குவது இடம்பெறுவதாக அறியமுடிகிறது. வீடுகட்டுவதங்கான ஏனைய பொருட்களும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் அறிய முடிகிறது. மீள்குடியேற்ற வீடமைப்பிற்கான இந்திய உதவி பொருட்களாகவே வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.