அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அரசும் பிரதான எதிர்க்கட்சியும் மாத்திரம் இறுதிமுடிவை எட்ட முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி, அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனைகளை அரசு முன்வைத்து சகல அரசியல் கட்சிகள், மகாசங்கம் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகளுடனும் பேசவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடெனவும் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்க வேண்டுமென்ற எந்த உடன்பாட்டுக்கும் கட்சி முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு விளக்கமளித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கயந்த கருணாதிலக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
அரசியலமைப்புத்திருத்தம், தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பது, நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்படுவது போன்றவற்றுடன் இணைந்ததாக அரசியலமைப்பு முழுமையாக திருத்தப்பட வேண்டுமென்ற ஆரம்ப நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.
அதேசமயம் அரச தரப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் பேசி இதில் தீர்வை எட்ட முடியாது. அரசிலுள்ள பல கட்சிகள் கூட இது விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றன. ஜே.வி.பி.தரப்பு தெரிவித்திருக்கும் கருத்து மறுக்கப்பட முடியாது. அதனுடன் நாமும் உடன்படவே செய்கின்றோம். அரசுடன் கூடி தனித்துத்தீர்மானமெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படவில்லை. பேச்சுக்கான அடித்தளத்தை இடுவதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவே நாம் முன் வந்துள்ளோம். எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.