._._._._._.
பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2012ல் ஆரம்பமாகும் புதிய நிர்வாகக்காலத்தில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகலாம் என தேசம்நெற்க்கு அறிய வருகின்றது. பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் 2006ல் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் அவர் பதவியேற்க முடியாமலேயே அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையைவிட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தார். இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி அடையச் செய்யும் திட்டங்களுடன் அதற்குத் தயார் நிலையில் உள்ளார் என்பதையும் தேசம்நெற் அறிகின்றது.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பாரிய அரசியல் மாற்றமானது இதுவரை இருந்த கட்டமைப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்கி நிற்கின்றது. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தின் அறிவியல் மையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான அரசியல் சமூக ஆய்வுகள் அவசியமாகின்றது. அந்த அவசியத்தின் அடிப்படையில் இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கின்றது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
._._._._._.
‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்பதே 19ம் நூற்றாண்டில் ஜேர்மனியின் பல்கலைக்கழகத்தின் கருத்துருவமாக இருந்தது. இதுவே அன்று வலுவான பல்கலைக்கழக கருவாகவும் அமைந்தது. இதனைவிடவும் ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம், தங்களுடைய சொந்த மதிப்பீடுகள் முதன்மைகளை வரையறுக்கும் சுயாதீன ஒழுங்குகள், சர்வதேசியம் என்ற வடிவங்களும் பல்கலைக்கழகங்கள் சிலவற்றினால் ஏற்கப்பட்டு இருந்தது. இவற்றினைவிடவும் ஆய்வுகளுக்கான தேவைகளின் அதிகரிப்பும் அதற்கான கேள்வியையும் பொருளாதாரத்தையும் பொறுத்து பல்கலைக்கழகங்கள் வேறு வேறு வடிவங்களை முயற்சித்து வருகின்றன. இன்றைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அம்சங்களில் ஆளுமை செலுத்துவதனூடு சிந்தனையையும் சமூகக் கட்டமைப்பையும் செப்பனிடுகின்ற, தேவையேற்படின் மாற்றி அமைக்கின்ற சமூகப் பொறியியலை மேற்கொள்கின்றன.
இதன் அடிப்படையில் கடந்த 36 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற மதிப்பீடு மிகவும் அவசியமானது. இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றினூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ்:
யூலை 15 1974 இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக யாழ்ப்பாண கம்பஸ் சை உருவாக்குவது என்ற அறிவித்தல் அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட்டினால் அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது.
இதில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இந்திரபாலாவினது ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
இடதுசாரிச் சிந்தனையாளரான பேராசிரியர் கைலாசபதியின் உழைப்பிற்கு அப்போது இடதுசாரிகளின் துணையுடன் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயல்வடிவம் கொடுத்தது. யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரிகளை இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்ரோபர் 6ல் பரமேஸ்வராக் கல்லூரியில் யாழ்பாணக் கம்பஸ் அப்போதைய பிரதம மந்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1977ம் ஆண்டு இனக்கலவரமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சிங்கள மாணவர்களைத் தாக்க சிலர் முற்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாது பாதுகாத்து பத்திரமாக தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழரசுக் கட்சியின் எதிர்நிலை:
1960களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை திருகோணமலையில் அமைக்க விரும்பி அதற்கான காணியையும் திருகோணமலை நகரை அண்மித்து வாங்கப்பட்டது. இருப்பினும் தமிழரசுக் கட்சியால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சி தனது ஆதரவை வழங்கி வந்த ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. அதேசமயம் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றபோது தமிழ் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகின்றது என்ற எண்ணத்தில் தமிழரசுக்கட்சி அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பெரும்பாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வேண்டாத ஒன்றாகவே அணுகி வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடயத்தில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய இன்னும் சில விடயங்களுக்கு தமிழரசுக்கட்சி தனது கட்சி நலனின் அடிப்படையில் அல்லது தாங்கள் ஆதரிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியை நோகச் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் ஆதரவு தர மறுத்து இருந்தது.
சுதந்திரக் கட்சியின் ஆதரவில் ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உருவாவதையும் அதனை சுதந்திரக் கட்சியின் பின்னணியுடைய பேராசிரியர் கெ கைலாசபதி முன்னெடுத்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விருப்பமான விடயமாக இருக்கவில்லை. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்த சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிற்கு ‘இயற்கை மரணம் இல்லை’ என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிர பிரச்சாரங்களில் இறங்கி இருந்தது. இந்த வன்மம் பேராசிரியர் கைலாசபதி மீதும் இருந்தது.
இவ்வாறான நிலையில் தங்களுடைய கிராமங்களில் பல்கலைக்கழகம் திறக்கப்படுவதால் கிராமத்தின் சமூகக் கட்டுக்கோப்பு குலைந்துவிடும் என்பதனைக் காரணம் காட்டி யாழ்ப்பாணக் கம்பஸ் உருவான பகுதிகளில் எதிர்ப்பும் கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதை விரும்பாத தமிழரசுக் கட்சி, 1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்ததும் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஆதரவுடன் பல்கலைக்கழகத்தின் அதிபராக தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான பேராசிரியர் எஸ் வித்தியானந்தனை நியமித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தையெனக் கூறக்கூடிய பேராசிரியர் கெ கைலாசபதி ஒரே நிர்வாகக் காலத்திலேயே (ஒரு நிர்வாகக் காலம் மூன்று ஆண்டுகள்) அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அதனை உருவாக்கிய பேராசிரியர் கெ கைலாசபதி மிகக்குறுகிய காலமே உபவேந்தராக (அதிபராக) இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த உறவைப் பயன்படுத்தி கெ கைலாசபதியை பதவி இறக்கியது.
முளையிலேயே கருகிய இடதுசாரிச் சிந்தனை:
இலங்கையின் இனஉறவுகள் பலவீனமான நிலையில் தமிழத் தேசிய அலை வீச்சுப்பெற ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணக் கம்பஸ் உருவாகின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டங்கள் வெற்றியளித்து இடதுசாரிச் சிந்தனைமுறை பலம்பெற்றிருந்த காலகட்டம் அது. மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர மாற்றங்களுக்கான கோசங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
பேராசிரியர் கெ கைலாசபதி யாழ்ப்பாணக் கம்பஸின் அதிபராகவும் அதன் பின்னர் கலைப்பிரிவின் தலைவராகவும் இருந்தவரை இடதுசாரிச் சிந்தனைக்கான தளம் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டது. அவர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை 1980க்களின் முற்பகுதிவரை உணரக்கூடியதாக இருந்தது.
ஆனால் பொதுவாகவே இளைஞர் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரச் சிந்தனைகள் மீதான காதல் யாழ்ப்பாண சமூகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக சமூகத்தில் ஏற்படவில்லை. அல்லது ஏற்பட்ட போதும் அது குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமும் அதன் தூண்டுதலால் யாழ்ப்பாண சமூகமும் தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரசையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்ணிக்கு பின்னால் அணி சேர்ந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் அரசியல் இலக்கை நோக்கிச் செல்லவில்லை என்றவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வாரிசுகளான தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குப் பின் சென்றனர்.
யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனை:
ஆனால் 1974ல் உருவான யாழ்ப்பாண கம்பஸ் யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக யாழ்ப்பாண சமூகத்தின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு உயர் கல்வி ஸ்தாபனமாகியது. அதனால் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனைப் போக்கைக்கொண்ட சிந்தனையாளர்களையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் தொடர்ச்சியாக உற்பத்தியாக்கி வந்துள்ளது. அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலும் ஒரே இன-மத-சமூகக் குழுவினரே காணப்பட்டமையும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.
விரிவுரைகளுக்கு உள்ள அதே முக்கியத்துவம் பட்டதாரி மணவர்களது கூட்டுவாழ்வும் அவர்கள் சமூகத்துடன் கொள்ளும் பரிமாற்றமும் விரிவுரைகளுக்கு அப்பால் ஏற்படுத்துகின்ற உணர்வுரீதியான தாக்கம் முக்கியமானது. ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அது பல்கலைக்கழகத்திற்கு வெளியேயான கூட்டுவாழ்வு சமூகப்பரிமாற்றம் என்பவற்றைக் கொடுக்கவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் அதுவரை வாழ்ந்த அதே சூழலிலேயே வாழ்ந்து தங்கள் பட்டப்படிப்பைத் தொடர்ந்தனர். அதனால் அவர்கள் பல்கலைக்கழகச் சமூகத்திற்கே உரிய மாறுபட்ட சூழலிற்கு தங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழலானது யாழ்ப்பாணத்தின் ஒரே இன-மத-சமூகச் சூழலையே பல்கலைக்கழக வளாகத்திலும் ஏற்படுத்தியது. ஒரு குறுகிய காலத்திற்கு சிங்கள (1974 முதல் 1977 வரை) முஸ்லீம் மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றபோதும் வெகு விரைவிலேயே அவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:
இந்த சமூகப் பின்னணியில் உருவான யாழ்ப்பாணக் கம்பஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக இருந்து 1979 ஜனவரி 1 முதல் யாழ்ப்பாணப் பல்லைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ் ஆக இயங்கிய காலப்பகுதியில் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கெ கைலாசபதி (01 ஓகஸ்ட் 1974 – 31 யூலை 1977). அவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் (01 ஓகஸ்ட் 1977 – 31 டிசம்பர் 1978) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறும்வரை யாழ்ப்பாணக் கம்பஸ் இன் அதிபராக இருந்தார்.
யாழ்ப்பாணக் கம்பஸ் ஜனவரி 1979ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் பொறுப்பேற்று யூலை 1988 வரை யாழ்ப்பாணத்தின் அதிஉயர் கல்வி ஸ்தாபனத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார். நீண்ட காலம் அப்பொறுப்பில் இருந்தவரும் இவரே.
பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் 1979 ஜனவரி – 1988 யூலை
பேராசிரியர் ஏ துரைராஜா 1988 செப்ரம்பர் – 1994 ஏப்ரல்
பேராசிரியர் ஏ குணரட்னம் 1994 ஏப்ரல் – 1997 பெப்ரவரி
பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி – 2003 ஏப்ரல்
பேராசிரியர் எஸ் மோகனதாஸ் 2003 ஏப்ரல் – 2006
பேராசிரியர் ஜீவன் கூல் 2006 பதவியை பொறுப்பேற்கவில்லை.
பேராசிரியர் என் சண்முகலிங்கம் 2008 ஜனவரி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் வேறான பாதைகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்ட போதும் அவை அடிக்கடி ஒன்றையொன்று குறுக்கீடு செய்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது ஆளுமையைக் கொண்டிருந்த போதும் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து வீச்சுப் பெற்ற – இந்திய ஆதரவுடன் வீச்சூட்டப்பட்ட – தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளுமை படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பிற்காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் – பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது ஆளுமை செலுத்தினர். ஒரு சமூகத்தினது அதி உயர் அறிவியல் நிறுவனம் அச்சமூகத்தில் காணப்பட்ட ஆயுதக் கலாச்சரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதன் விளைவுகளுக்கு இன்று நாம் சாட்சியமாக வாழ்கின்றோம்.
எண்பதுகளின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணிசமான பங்களிப்பு இருந்தது. ஒரு பக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் தமிழுணர்வைத் தூண்டிக்கொண்டிருந்தனர். மறுபுறம் கருத்தரங்குகள், அரசியல் விழிப்புணர்வுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள், ‘மண் சுமந்த மேனியர்’ போன்ற நாடகங்கள், தெருக்கூத்துக்கள் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக மறுமலர்ச்சிக் கழகம், கலாச்சாரக் குழு முன்னின்று மக்கள் மயப்படுத்தியது. இளைஞர்களையும் யுவதிகளையும் தமிழீழ விடுதலை இயக்கங்களை நோக்கித் தள்ளியதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் கணிசமான பங்களிப்பு இருந்தது. தமிழீழ விடுதலை இயக்கங்களின் போராளிகள் முதல் அரசியல் பொறுப்பாளர்கள் வரை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பொறுப்புக்களை ஏற்றிருந்தனர்.
அந்த முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வாழ்க்கைத்துணை என்ற பொறுப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே ஏற்றுக்கொண்டார். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கடத்திச் சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான விவசாயபீட இரண்டாவது ஆண்டு மாணவியான மதிவதனி ஏரம்புக்கும் வே பிரபாகரனுக்கும் 1984 ஒக்ரோபர் 1ல் தமிழகத்தில் திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது.
கெ பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன், ராஜசிங்கம் நிர்மலா, மு நித்தியானந்தன் ஆகியோர் புலிகளின் ஆரம்ப கால முக்கிய உறுப்பினர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் பின்னைய இருவரும் எண்பதுகளின் நடுப்பகுதியிலேயே புலிகளில் இருந்து வெளியேறினர். சிதம்பரநாதன் (முன்னாள் ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதனின் கணவர்), கஜேந்திரன் செல்வராஜா, மு திருநாவுக்கரசு ஆகியோர் பிற்காலங்களில் முக்கியமாக அறியப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள்.
ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய முக்கிய விடுதலை இயக்கங்கள் அனைத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆதரவுத்தளம் இருந்துள்ளது. ஆனாலும் புலிகளின் உறுப்பினர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவமும் பிரபல்யமும் ஏனைய இயக்கங்களில் இருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கோ மாணவர்களுக்கோ கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் ஆதரவை இழப்பது அல்லது பகைப்பது எந்தவொரு விடுதலை இயக்கத்திற்கும் விருப்பமான விடயமாக இருக்கவில்லை.
ரெலோ அழிப்பு – இயக்கங்களில் இராணுவச் சமநிலையில் மாற்றம்:
முற்றுமுழுதான இராணுவச் சிந்தனையில் இருந்த விடுதலை இயக்கங்களின் இராணுவப் பிரிவுகள் அது பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவமனை வாசலில் வைத்து ரெலோ இயக்கத் தளபதிகளில் ஒருவரான தாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். பொது மக்களும் காயப்பட்டனர். அதற்கு எதிரான போராட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. இப்போராட்டத்திற்கு எதிராக ரெலோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல் யாழ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இவ்வாறான பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால் ரெலோ இயக்கத்தின் செல்வாக்கு கீழ்நிலைக்குச் சென்றிருந்தது. ரெலோவினை அழித்தொழிப்பதற்குக் காத்திருந்த புலிகளுக்கு இது சாதகமான சூழலாகவும், தங்கள் செயற்பாட்டை விளக்குவதற்கான அரசியல் காரணத்தையும் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து 1986 ஏப்ரல் 29 க்கும் மே 6க்கும் இடைப்பட்ட காலத்தில் புலிகள் ரெலோ இயக்கத்தினரையும் அதன் தலைமையையும் வேட்டையாடினர். ரெலோ இயக்கம் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பாக பேராசிரியர் க சிவத்தம்பி சில முயற்சிகைள எடுத்தபோதும் அது எவ்வித பலனையும் அளிக்கவில்லை. ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கங்களிடையே இருந்த இராணுவச் சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. புலிகளுக்கு சரிசம பலத்தில் இருந்த ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதன் மூலம் புலிகள் ஒற்றைத் தலைமையையும் இராணுவ வலிமையையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். ஏனைய இயக்கங்கள் இராணுவ ரீதியாக அவ்வளவு பலம்பொருந்தி இருக்கவில்லை. அதனால் புலிகளின் கரம் ஓங்க ஆரம்பித்தது. அவர்கள் ஒவ்வவொரு விடயத்தையும் இராணுவ ரீதியில் அணுகத் தலைப்பட்டனர்.
பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் மரணமும் அதற்கு எதிரான போராட்டங்களும்:
ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டு ஆறு மாதங்களில் 1986 நவம்பரில் அப்போதைய புலிகளின் யாழ் மாவட்டத்தளபதி கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்)வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மாணவன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழகத்தில் செயற்பட்டு வந்த மறுமலர்ச்சிக் கழகத்தை விமலேஸ்வரன் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அணுகினர். ஆனால் பின்னாளில் புலிகளின் ஐபிசி வானொலிக்கு பொறுப்பாக இருந்த பல்கலைக்கழக மாணவர்களான சர்வேஸ்வரன், சிவரஞ்சித் ஆகியோர் அன்று அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை.
இந்நிலையில் விமலேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களைக் கூட்டி ‘விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக்குழு’ வை உருவாக்கினார். இக்குழுவினுள் விரைவில் சபாநாவலனும் உள்வாங்கப்பட்டார். அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன் சபாநாவலனின் அழுத்தத்தினால் விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக் குழுவினுள் இணைத்துக் கொள்ளப்பட்டார். ஒன்பது பேர் கொண்ட குழுவே விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பல்வேறு போராட்டங்களையும் சகமாணவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்தது. குடாநாட்டுப் பாடசாலைகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இதுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் செயற்பட்ட ஈபிஆர்எல்எப் அமைப்பு ஒரு உந்துசக்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டங்களுடன் தொடர்புபட்ட தற்போதைய தமிழரங்கம் இணையத்தளத்தின் ஆசிரியரும் அப்போது பல்கலைக்கழக மாணவருமாகிய பி இரயாகரன் புலிகளால் கடத்தப்பட்டு தடுத்த வைக்கப்பட்டிருந்த போது தப்பித்தார். மற்றுமொரு பல்கலைக்கழக மாணவனான சபாநாவலன் (இனியொரு இணையத்தள ஆசிரியர்) மற்றும் விமலேஸ்வரனின் உதவியுடனும் உரும்பராய் கிராம உழைப்பாளர் சங்கத்தினரின் ஒத்துழைப்புடனும் அவர்களின் மறைவிடத்தில் சிறிதுகாலம் வாழ்ந்தார். என்எல்எப்ரி அமைப்பில் இருந்த பி இரயாகரனிடம் அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையின் பணம் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்ட விபரம் இவருக்குத் தெரியும் என்பதினாலேயே இவரைத் தாங்கள் கைது செய்ததாக புலிகளின் தளபதி மாத்தையா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கூறிக்கொண்டிருந்த போது பல்கலைக்கழக மாணவர்கள் மாத்தையாவுடன் முரண்பட்டு சத்தமிட்டனர். அப்போது ஏற்கனவே திட்டமிட்டவாறு திடீரென இரயாகரன் அங்கு வந்து மாத்தையாவின் குற்றச்சாட்டை மறுத்து புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு அம்பலப்படுத்தினார். இது புலிகளுக்கு குறிப்பாக மாத்தையாவுக்கு மிகுந்த சங்கடத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மாத்தையா கூட்டத்தின் இடையே எழுந்து செல்ல பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மாத்தையாவை பதில் சொல்லுமாறு சத்தமிட்டனர்.
இதற்கு முன்னதாக ரெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட பின் ஈபிஆர்எல்எவ் முகாமில் வைத்து சபாநாவலன் புலிகளால் கைது செய்யப்பட்டு நல்லூரில் வைமன் றோட்டில் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு மேற்கொண்டு எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கையொப்பம் இட்டு அவரின் பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனின் மரணம்:
விஜிதரன் கொல்லப்பட்டு ஓராண்டான 1988 நவம்பரில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஈவிலின் ரட்ணம் இன்ஸ்ரிரியூற்றில் பின்னாளில் புலிகளின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மு திருநாவுக்கரசு (திரு), சபாநாவலனை அழைத்து அவரையும் விமலேஸ்வரனையும் இரயாகரனையும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர்களுக்கு உயிராபத்து இருப்பதாகவும் எச்சரிக்கின்றார். திருநாவுக்கரசு மிகவும் பயந்த சுபாவமுடையவர். ஆரம்பத்தில் அவர் புலிகளுக்கு ஆதரவானவராக இருக்கவில்லை. அவருடைய பயமே அவரை புலியாக்கியதாகவும் ஒரு அபிப்பிராயம் பல்கலைக்கழக வட்டாரத்தில் உண்டு.
சபாநாவலன் மு திருநாவுக்கரசுவின் தகவலை இரயாகரனுக்குச் சொல்ல அவர் உடனடியாக தலைமறைவாகிறார். விமலேஸ்வரன் திருநாவுக்கரசுவின் பயந்த சுபாவத்தைக் காரணம் காட்டி அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. திருநாவுக்கரசுவால் காலையில் எச்சரிக்கப்பட்டது. மதியம் அளவில் விஜிதரன் கொல்லப்பட்டு சரியாக ஓராண்டு காலத்தில் 1988 நவம்பரில் விஜிதரனுக்காக முன்னின்று குரல்கொடுத்த விமலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். விமலேஸ்வரனிடம் கல்விகற்ற ரியூற்றரி மாணவனின் இரட்டைச்சகோதரன் புலிகளின் உறுப்பினன் விமலேஸ்வரனை சுட்டுக் கொன்றார்.
விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராட விமலேஸ்வரனும் அவரின் சக மாணவர்களும் துணை நின்றனர். ஆனால் விமலேஸ்வரன் கொல்லப்பட்ட போது அதனைத் தட்டிக் கேட்பதற்கான சூழல் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. மரண பயத்தினால் அறிவியல் சமூகம் மிரண்டு போயிருந்தது. விமலேஸ்வரன் கொல்லப்பட்டதை மாலையில் அறிந்துகொண்ட நாவலனும் உடனடியாகத் தலைமறைவாகினார்.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:
இந்த பல்கலைக்கழக மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் பற்றி கிட்டு குறிப்பிட்ட பொழுது ‘அப்ப சனம் கம்பஸ் பொடியல் சொன்னால் தான் கேட்கும். இப்ப சனம் நாங்கள் சொன்னாலும் கேட்கும்” என்று கூறியதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. கிட்டுவினது அக்கூற்று மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது யாழ் அறிவியல் சமூகத்தின் ஆளுமை முற்றாக நீங்கி புலிகள் பல்கலைக்கழகம் மீது தங்கள் ஆளுமையை நிறுவ முற்பட்ட காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் கலாச்சாரக் குழு, மறுமலர்ச்சிக் கழகம் ஆகியவையும் புலிகளின் செல்வாக்கினுள் வந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்ற புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் தமக்கு எதிரான சக்திகளை களையெடுத்த அதேசமயம் பல்கலைக்கழகத்தின் தலைமையையும் தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முற்பட்டனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் சு வித்தியானந்தன் கடத்தப்பட்டார்:
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருதடவை உபவேந்தர் தெரிவு செய்யப்படுவார். அதன்படி 1988 அத்தெரிவுக்கான காலமாக இருந்தது. பேராசிரியர் கைலாசபதியைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வளர்த்தெடுப்பதில் பேராசிரியர் வித்தியானந்தனின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தடவைகள் உப வேந்தராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், மருத்துவத்துறை, விவசாயத்துறை ஆகியவற்றை உருவாக்கியவர் பேராசிரியர் வித்தியானந்தன். இவர் மீண்டும் உபவேந்தராக போட்டியிட்டால் செனட்சபை அவரையே மீண்டும் உபவேந்தராகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பே அப்போது இருந்தது.
பேராசிரியர் வித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழழீழ விடுதலை இயக்கங்களுக்கோ எதிரானவரல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கோ அவர்கள் நினைத்தபடி எடுபட்டுச் செல்லக்கூடியவருமல்ல. அவர் தமிழரசுக் கட்சியின் பின்னணியைக் கொண்டவர். அதனால் அடுத்த உபவேந்தராக பேராசிரியர் வித்தியானந்தனை வரவிடாது தடுத்து தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஏ துரைராஜாவை நியமிப்பதே புலிகளுக்கு அவசியமானதாக இருந்தது.
புலிகளுக்காக இந்தக் காரியத்தைச் செய்ய புலிகளுக்கு தலையையும் இடதுசாரிகளுக்கு வாலையும் காட்டுகின்ற ஈரோஸ் முன்வந்தது. 1988ல் பேராசிரியர் வித்தியானந்தன் ஈரோஸ் இயக்கத்தினால் மொட்டையடிக்கப்பட்டு இம்சிக்கப்பட்டு அவரது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டார். அது தொடர்பாக பாசறை இயக்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பு அவர் ஊழல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பாசறை இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர். அவர்களுக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால் ஈரோஸ் பழியை அவர்கள் மீது போட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புலிகளின் விருப்பத்திற்கேற்ப பேராசிரியர் ஏ துரைராஜா தெரிவு செய்யப்பட்டார். அவரிடம் அதற்கான தகுதியும் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தெரிவு செய்யப்பட்ட முறையும் தெரிவு செய்யப்பட்ட நோக்கமும் ஒரு அறிவியல் சமூகத்தின் உயர்ந்த ஸ்தாபனத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தனது உள்ளுணர்வை இழந்தது. தங்களது உப வேந்தருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் முடியவில்லை. இதற்கு மற்றுமொரு காரணம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் வித்தியானந்தனின் சில நடவடிக்கைகள். மேலும் அவரால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள். பேராசிரியர் வித்தியானந்தனுக்கு அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குரல் எழுப்பாததும் அவருக்கு மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றின் காரணத்தால் அவர் வெகுவிரைவிலேயே காலமானார். அவர் அச்சம்பவத்திற்குப் பின் தான் இறக்கும்வரை அப்பல்கலைக்கழகத்திற்குச் செல்லவில்லை. அவரது உடலைக்கூட பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்ல அவரது பிள்ளைகள் மறுத்தனர். பின்னர் பல்வேறு வற்புறுத்தலால் அஞ்சலிக்காக அவரது உடல் பல்கலைக்கழகத்தில் சிறிதுநேரம் மட்டுமே வைக்கப்பட்டது.
பல்கலைக்கழக மைதானத்தில் இந்தியபடைகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்:
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அதன் சுற்றுவட்டாரமும் புலிகளின் தளமாகி இருந்தது. 1987 யூலை 29ல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான முறுகல்நிலை ஒக்ரோபர் 12ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட மைதானத்திலேயே யுத்தமாக வெடித்தது. இந்தியப் படைகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட புலிகள் இந்தியப் படைகள் தரையிறங்க முற்பட்ட பல்கலைக்கழக மைதானத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் பதுங்கியிருந்து தாக்குதலை நடாத்தினர். இதில் 30 வரையான இந்திய கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து பிரம்படியில் இந்தியப்படைகள் மோசமான பழிவாங்கல் படுகொலைகளில் ஈடுபட்டனர். இதில் 50 பேர்வரை படுகொலை செய்யப்பட்டு ராங்கிகளினால் நெரிக்கப்பட்டு அவர்களது உடல் சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தியப் படைகளுக்கும் புலிகளுக்குமான யுத்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்தியப் படைகளின் கண்காணிப்பிற்குரிய இடமாகியது.
பல்கலைக்கழகத்தில் இலங்கை இந்திய இராணுவத்தின் தலையீடுகள்:
1983ல் யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை ஆரம்பித்த மாணவர்கள் இரண்டு மடங்கிலும் கூடுதலான காலத்தைச் செலவிட்டு 1990 இலேயே தங்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறக் கூடியதாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டங்கள், ஹர்த்தால், பகிஸ்கரிப்புக்கள், பல்கலைக்கழகம் மூடப்பட்டமை என்று பல்வேறு காரணங்களால் பட்டப்படிப்புப் பாடத்திட்டங்களை திட்டமிட்டமுறையில் மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு இலங்கை இந்திய இராணுவங்களின் தமிழ் பகுதிகள் மீதான நடவடிக்கைகள் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் இலங்கை இராணுவமோ, இந்திய இராணுவமோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவோ அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு எதிராகவோ திட்டமிட்ட தாக்குதல் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் நாளாந்த இயக்கத்தைப் பாதித்து இருந்தது.
மேலும் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போது புலி ஆதரவாளர்கள் சிலர் இராணுவத்தை நோக்கி கல்எறிந்து இராணுவத்தைக் காயப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவன் சத்தியேந்திரா மரணமடைந்தார்.
மருத்துவபீட விரிவுரையாளர் ரஜனி திரணகமவின் மரணம்:
இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முழுவீச்சுப் பெற்றிருக்கையிலும் புலிகள் தங்கள் மீதான எவ்விதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவ்வாறான விமர்சனங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கினர். இந்த விமர்சனங்கள் அறிவியல் சமூகத்தில் இருந்து வந்த போதும் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கியதில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்தவபீட விரிவுரையாளரும் மனித உரிமைப் போராளியுமான ரஜனி திரணகம 1989 செப்ரம்பர் 21ல் யாழ்ப்பாண மருத்துவபீடத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தவர். பின்னர் அவர்களுடன் கருத்தியல் ரீதியில் முரண்பட்டிருந்தார். அவருடைய ‘முறிந்த பனை’ என்ற நூலுக்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். முறிந்த பனை இலங்கை, இந்திய இராணுவங்களின் கொடிய மனித உரிமை மீறல்கள், தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் மனித உரிமைமீறல்கள் என்பனவற்றை அம்பலப்படுத்தி இருந்த போதும் விமர்சனங்கள் மீது எள்ளளவும் சகிப்புத்தன்மையில்லாத புலிகள் ரஜனி திரணகமவை படுகொலை செய்தனர். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட மிக முக்கியமான ஒருவர் ரஜனி திரணகம.
ரஜனி திரணகமவின் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் நடாத்த பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான போது ‘எமது விடுதலை இயக்கத்திற்கோ எமது தலைவருக்கோ எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என புலிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாயினை கறுப்புத் துணியால் கட்டி போராட்டத்தை நடாத்தினர்.
ரஜனி திரணகமவின் மரணம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (யுரிஎச்ஆர் – ஜெ) சக விரிவுரையாளர்களான கலாநிதி சிறிதரன் கலாநிதி ராஜன் கூல் ஆகியோரது இருப்பையும் அச்சத்திற்குரியதாக்கியது. இவர்கள் இன்னமும் தலைமறைவாக வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
சிவரமணி – செல்வி ஆகியோரின் மரணங்கள்:
மக்களுக்கான விடுதலையை வென்றெடுப்பதற்கு அறிவியல் சக்தியை சுதந்திரமாக செயற்பட புலிகள் அனுமதிக்கவில்லை. தனது அறிவியல் சக்தியை சுதந்திரமாக உலாவவிட்டு கவிதைகள் வடித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி சிவரமணி சிவானந்தன் புலிகளின் அழுத்தங்கள் காரணமாக தனது கவிதைகளை தீயிட்டு தன்னையும் அழித்துக்கொண்டார்.
சிவரமணி சிவானந்தனின் நண்பர்களான செல்வி தியாகராஜா, மனோகரன் ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 1990ல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய காலத்தவரான சிதம்பரநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வி தியாகராஜா, மனோகரனின் கொலைகள் தொடர்பாக புலிகளுடன் நெருக்கமாக இருந்த சிதம்பரநாதன் அறிந்திருந்ததாக செல்வி தியாகராஜாவுக்கு நெருக்கமானவர்கள் இன்றும் வலுவாக நம்புகின்றனர்.
செல்வி கடத்திச் செல்லப்பட்ட காலத்தில் பென் என்ற சர்வதேச அமைப்பு அவருடைய எழுத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது. செல்வியுடன் அப்போது பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரடிய அங் சன் சூச்சி க்கும் இவ்விருது வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. செல்வியை விடுவிக்கும்படியும் அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்து இருந்தது. செல்வியின் தாயார் நீண்டகாலமாகத் தன்னுடைய மகள் உயிருடன் இருப்பதாகவே எண்ணி இருந்தார்.
அறிவியல் சுதந்திரத்திற்குத் தடை:
1990க்களின் முற்பகுதியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முற்று முழுதாக புலிகளிடம் சரணாகதி அடைந்தது. தங்களுக்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என்று கருதப்பட்டவர்கள் களையெடுக்கப்பட்டனர்.
‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தின் நோக்கமே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம் என்பன மறுக்கப்பட்டு சுதந்திரமான சிந்தனை மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. தமிழ் சமூகத்தின் அறிவியல் மையம் மௌனமானது. ஆயுதத்தின் மேலும் அதிகாரத்தின் மேலும் மட்டும் நம்பிக்கையும் காதலும் கொண்ட வே பிரபாகரனின் புலிகள் சிந்தனையற்ற துப்பாக்கி ஏந்தும் இயந்திர மனிதர்களை உருவாக்கினர். இந்த இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தொழிற்சாலையாக்கினர்.
யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் புலிகளின் கட்டுப்பாட்டில்:
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாணம் மீண்டும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னரும் புலிகள் வன்னியில் இருந்து மாணவர்களுக்கு ஊடாக தங்கள் ஆளுமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீது கொண்டிருந்தனர். கஜேந்திரன் செல்வராஜா போன்று பல இளைஞர்கள் வன்னிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்காக புலிகள் திறமையான மாணவர்களைக் கொண்டு பரீட்சையை எழுதி இவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பினர். இதன் காரணமாகவே கஜேந்திரன் செல்வராஜா குதிரைக் கஜேந்திரன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுக் கொண்டார். இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதிலும் பார்க்க புலிகளின் முழுநேர உறுப்பினர்கள் என்பதே உண்மை. இவர்களே பல்கலைக்கழகத்தை நிர்வகித்தனர். வெறும் கடிதத் தலைப்பு அமைப்புகளையும் சங்கங்களையும் உருவாக்கி அறிக்கை விடுவது போன்ற நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊர்வலங்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் பொங்கு தமிழ் போன்ற நடவடிக்கைகளிலும் இவர்களே ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களில் திறமையான மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய புலமைப்பரிசில்கள் இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களும் சமாதான காலத்தில் நோர்வே அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கு நாடுகளுக்கு வந்தவர்களுமே பெரும்பாலும் மேற்கு நாடுகளில் புலிகளின் நலன்சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். மேற்கு நாடுகளின் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டுவதில் இவர்கள் முன்நின்றனர்.
விரிவுரையாளர் பொங்கு தமிழ் கணேசலிங்கத்தின் மீது பாலியல் குற்ற வழக்கு:
20.09.2005, யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம், ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்நாட்களில் முத்தையா யோகேஸ்வரி தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றவர் காணாமல் போய்விட்டார். அவர் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? அல்லது படுகொலை செய்யப்பட்டாரா? என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். இதனை தேசம்நெற் உறுதிப்படுத்தியும் உள்ளது. ஒரு அறியப்பட்ட பாலியல் குற்றவாளி இலங்கையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இன்னமும் அதே பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் தொடர்கின்றார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைத் தொழிலாளி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே தெரியவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் தங்கள் கல்வித் தகமையையும் பொறுப்பையும் துஸ்பிரயோகம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகச் சூழலில் காணப்படுகின்றது. தொழில் ரீதியான ஒழுக்க கட்டுப்பாடுகளை இவர்கள் மீறுவதாகவும் அக்குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானதாக இருந்த போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண சமூகத்தைப் போன்றே மூடிய சமூகமாக இருப்பதால் இந்த ஒழுங்கீனங்கள் வெளிவருவதில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் பழமைவாதத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொண்டேயுள்ளது. இப்பல்கலைக்கழகம் புதிதாக வெளியில் இருந்தும் யாரையும் உள்வாங்க விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சூட்சுமங்கள் வெளியே வந்துவிடும் என்கின்ற அச்சமே. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களையே பிற்காலங்களில் விரிவுரையாளர்களாக்கியது. இந்தச் சுழற்சியிலேயே பல்கலைக்கழகம் இயங்குகின்றது.
பேராசிரியர் ரட்ணஜீவன் கூலின் நியமனமும் நாட்டைவிட்டு அவர் வெளியேறியதும்:
இந்தப் பின்னணியில் 2006ல் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவால் University Grants Commission உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராதணைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றிய இவரது கல்வித்தகமையும் அதற்கேற்ற நேர்மையையும் பல்கலைக்கழகச் சமூகத்தில் அவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தங்கள் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள், தங்கள் பொறுப்புக்களைச் செய்யத் தவறுபவர்கள் மத்தியில் இவர் கடுமையான ஒருவராகக் கணிக்கப்பட்டார்.
ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தார். அவர் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரானவர் என தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் ரட்ன ஜீவன் கூலுக்கு நெருக்கமானவர்கள் அவரை ஒரு தமிழ் தேசியவாதியாகவே காண்கின்றனர். ஆனால் புலிகளுக்கு ரட்ன ஜீவன் கூலில் இருந்த பிரச்சினை அவர் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவராக இருந்தது. புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக தங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்க புலிகள் முற்பட்டனர். ரட்ன ஜீவன் கூல் அதற்கு ஏற்ற ஒருவரல்ல. மிகுந்த ஆளுமை உடையவர். புலிகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடியவரல்ல. அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ரட்ன ஜீவன் கூல் உபவேந்தராக்கப்படுவது யாழ்ப்பாண அறிவியல் மையத்தில் தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை புலிகள் உணர்ந்தனர். அவரது நியமனத்தை பல வழிகளிலும் எதிர்த்தனர். தனிப்பட்ட எச்சரிக்கைகளை அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர்க்கும் விட்டனர்.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. நடப்பில் உள்ள உபவேந்தருக்கான பதவிக்காலம் முடியும்போது பல்கலைக்கழகக் கவுன்சில் புதிய உபவேந்தருக்கான விண்ணப்பத்தைக் கோரும். அதற்காக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் பல்கலைக்கழகக் கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு விடப்படும். இந்த வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரது பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தனது தெரிவின் அடிப்படையில் உபவேந்தராக நியமிப்பார். ஜனாதிபதியின் தெரிவு கட்டாயமாக கூடுதலான வாக்கைப் பெற்றவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ரட்ன ஜீவன் கூலின் விடயத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் உறுப்பினர்களை ரட்ன ஜீவன் கூலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகளும் அவரது பல்கலைக்கழக ஆதரவு சக்திகளும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இருந்தும் ரட்ன ஜீவன் கூல் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். இது புலிகளுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதுடன் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நெருக்கடிகளையும் வழங்கினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பெயர்களில் இருந்து பேராசிரியர் ரட்ன ஜீவன் கூலை ஜனாதிபதி தெரிவு செய்தது ஆச்சரியமான விடயமல்ல.
புலிகளின் முகவர்களாக இயங்கிய கஜேந்திரன் செல்வராஜா தலைமையிலான பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ரட்ன ஜீவன் கூலின் நியமனத்தை கடுமையாக எதிர்த்தது. பல மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ரட்ன ஜீவன் கூலின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தனிப்பட்ட பயமுறுத்தல்கள் பல வகையிலும் அவருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் விடுக்கப்பட்டது. ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தலையில்லாத முண்டம் பெட்டியில் வரும்’, என்று மார்ச் 11 2006ல் மக்கள் எழுச்சிப் படை தொலைபேசி மிரட்டல்களை ரட்ன ஜீவன் கூலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விடுத்தனர்.
புலி ஆதரவு ஊடகங்களும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக்கி இருந்தனர். வழமையான துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக் கொடுப்பவர் என்ற பிரச்சாரங்கள் அப்போது தீவிரமாகி இருந்தது.
ஏப்ரல் 11ல் இதுபற்றிய அறிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்திருந்தது. அதில் ரட்ன ஜீவன் கூலுக்கு இருந்த உயிராபத்தை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
இவற்றினைவிடவும் ரட்ன ஜீவன் கூலுக்கு எதிராக மதமும் பயன்படுத்தப்பட்டது. ரட்ன ஜீவன் கூல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். அதேநேரம் இந்து சமயத்தின் அடிப்படைவாதத்திற்கு எதிரானவரும் கூட. குறிப்பாக தமிழர்களிடையே உள்ள சாதியப் பாகுபாட்டிற்கு இந்துசமயத்தின் அடிப்படைவாதமே காரணம் என்ற அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு ரட்ன ஜீவன் கூல் இந்து சமயத்திற்கு எதிரான கத்தோலிக்கர் என்ற துருப்புச்சீட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.
இவற்றுடன் ரட்ன ஜீவன் கூல் சிறந்த நிர்வாகியாகவும் அடிப்படை நேர்மை விடயங்களில் கடுமையானவராகவும் இருந்ததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வழமையாகிப் போன நிர்வாக ஒழுங்கீனங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் உள்வீட்டு அரசியல் சகிடதித்தங்கள் தொடரமுடியாது என்ற அபிப்பிராயமும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் இருந்தது. ரட்ன ஜீவன் கூல் உபவேந்தரானால் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் தொடர முடியாது என்பது மிகத்தெளிவாகி இருந்தது. அதனால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை.
புலிகளுடைய கடும்போக்கை கைவிட்டு ரட்ன ஜீவன் கூலை தனது கடமையைத் தொடர வெவ்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டது. புலிகளுடனும் இது தொடர்பாகப் பேசப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் தலையீடு செய்தது. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தித்தது.
யாழ்ப்பாணப் பல்கைலக்கழகத்தை சிறந்தவொரு பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டங்களையும் முழுமையான பொறியியல்துறையை நிறுவும் முயற்சியையும் ரட்ன ஜீவன் கூல் வெளியிட்டு இருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் University Grants Commissionஇன் உறுப்பினராகவும் இருந்ததால் அவருக்கு யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. அவ்வாறு இருந்தும் அவ்வாறான ஒருவரை புலிகளும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் நிராகரித்தன.
இறுதியில் ரட்னஜீவன் கூல் நாட்டைவிட்டு வெளியேறுவதே தனதும் தனது குடும்பத்தினரதும் பாதுகாப்பிற்கு ஏற்றது என்று முடிவுக்குத் தள்ளப்பட்டார். தனது தொழிலில் இருந்து நீண்ட விடுமுறையைப் பெற்றுக்கொண்ட ரட்ன ஜீவன் கூல் ஏப்ரல் 20ல் இலங்கையைவிட்டு வெளியேறினார். கலிபோர்னியாவில் உள்ள Harvey Mudd Collegeல் 12 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து இலங்கைச் சூழலில் தனது பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றவர் மீண்டும் அமெரிக்க பல்கலைக்கழகத்திலேயே தனது கற்பித்தலைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தராக மீண்டும் ரட்ன ஜீவன் கூலை நியமிக்க முயற்சி:
தற்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ரட்ன ஜீவன் கூலை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை தேசம்நெற்க்கு அறிய வந்துள்ளது. ரட்ன ஜீவன் கூல் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டுச் செல்லவில்லை. அவர் நீண்ட விடுமுறையை எடுத்துக்கொண்டே நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார். தற்போது நாட்டில் அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் ரட்ன ஜீவன் கூலின் வரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் அபிவிருத்திக்கு உந்துதலாக அமையும். 2006ன்
உபவேந்தர் பதவிக்காலம் 2009ல் முடிவுற்றது. அடுத்த மூன்றாவது ஆண்டு 2012 முற்பகுதியில் முடிவுறும். பெரும்பாலும் 2012 முற்பகுதியில் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்படலாம். அல்லது அதற்கு முன்னதாக அவரை நியமிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதியிடம் உண்டு.
இறுதியாக …..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 36 ஆண்டுகளில் அதன் முற்பகுதியான காலகட்டமே ஒப்பீட்டு அளவில் ஓரளவு சுயாதீனத்துடன் இயங்கக் கூடியதாக அமைந்தது. அதன் பின் வந்த காலங்கள் பெரும்பாலும் ஆயுத நெருக்கடிக்குள் சுயாதீனத்தை இழந்தே இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது ஆளுமையை முற்றாக இழந்துள்ள நிலையே இன்று உள்ளது. இந்த நிலையில் சடுதியாகவும் வேகமாகவும் ஆனால் விவேகமாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அதனை உருவாக்கிய பேராசிரியர் கைலாசபதியின் இலக்கு நோக்கி – ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக – கொண்டு செல்வதற்கு மிகுந்த ஆளுமையும் பரந்த சிந்தனையும் உடைய ஒருவர் உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியானவர் பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் என்பதற்கு அவரது கடந்தகால கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் ஒரு எடுத்துக்காட்டு.
Related Article:
முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்