பூனகரியுடன் யாழ்.குடாநாட்டை இணைக்கும் சங்குப்பிட்டி – கேரதீவு பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிரத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணி டிசெம்பர் மாத்துடன் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனையிறவுப்பாதை எண்பதுகளின் பிற்பகுதியிலம், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், வன்னிமக்கள் சங்குப்பிட்டி – கேரதீவு பாதையூடாகவே தங்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அப்பாதையூடாகவே யாழ். குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. விடுதலைப்புலிகளின் யாழ். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையாகவும் இப்பாதை அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், தென்மராட்சி கேரதீவு பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும். கிளாலி கடல் நீரேரி ஊடாகவும், கொம்படி, ஊரியான் ஊடாகவும் மக்கள் பெரும் சிரமங்களுடன் தங்கள் பயணங்களை மெற்கொண்டனர். தற்போது சங்குப்பிட்டி- கேரதீவு பால திருத்த வேலைகள் நிறைவடையும் பட்சத்தில் பூனகரிப் பிரதேசத்திலிருந்து தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சுலபமாக மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.