01

01

கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றிவளைக்க வீரவன்ச வலியுறுத்தல்.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக நியமித்துள்ள விசேட நிபுணர்குழுவை கலைத்து விடுவதற்கான தீர்மானத்தை எடுக்கும் வரை இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றி வளைத்து அலுவலர்களை உட்புறத்தில் அகப்படுத்தி வைத்திருக்குமாறு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.நிபுணர்குழு நியமனமானது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைத்தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையென நேற்று புதன்கிழமை நிருபர்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை சாதாரண நடவடிக்கையாக கருத முடியாது. ஏனெனில் ஐ.நா.வின் அடுத்த கட்ட நடவடிக்கை விசாரணைக்குழு வொன்றை அமைப்பதாக இருக்கும். மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களுக்கான சாத்தியப்பாட்டை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதாக அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.  இது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்கும் நிலைமைக்கு இட்டுச்செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஐ.நா.நிபுணர் குழுவுடன் பேசுவதற்கு தயாரென ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருக்கும் விடயம் பற்றியும் அமைச்சர் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார். இது நாட்டின் இறைமைக்கு துரோகமிழைக்கும் விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.