02

02

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் ஹாலந்துஅணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

neda.jpg

பயங்கரவாத ஒழிப்பு அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ஜனாதிபதி

ugrain.jpgநாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், எமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பயனாகவே எமது நாட்டுக்கு இந்த பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குரூர பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் எமக்கு கிடைத்த அனுபவத்தை பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாம் தயாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டின்போது உக்ரேன் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்தார்.

500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

salman.jpgவடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண்சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண்சத்திர சிகிச்சை கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெறும். அதேநேரம் கண் நோயாளர்களுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கே.பி.யை நம்பவேண்டாம் அரசை எச்சரிக்கிறார் பொன்சேகா

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. பயங்கரவாதியெனவும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை அவர் தவறான விதத்தில் வழிநடத்திச் செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கே.பி. கைதாகி பல மாதங்கள் கடந்திருக்கும் நிலையில்அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலித்தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கான அரசின் ஆர்வமானது பாதுகாப்பு படைகளின் மனநிலையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன், கே.பி.யை சிறை வைக்கத் தவறியமை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதர் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கிறார். இதனால், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை அல்லது அவரை சிறைவைக்காமல் அரசாங்கம் சில சமயங்களில் இருக்கலாம். இது வெட்கக்கேடான விடயமாகும்.

ஏனென்றால் பிரிகேடியர்கள், ஜெனரல்கள் போன்ற யுத்த கதாநாயகர்கள் பலர் இன்று சிறையில் உள்ளனர். அதேசமயம் பயங்கரவாதிகள் உல்லாசமாக உள்ளனர் என்று பொன்சேகா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்

காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும் கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா ஜேர்மனி ஒரு போட்டியிலும் ஸ்பெயின் பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.

இந்த அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடுமென்ற பொதுவான எதிர்பார்ப்புள்ளது.

இருப்பினும் ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்தத் தொடரில் அசத்தி விட்டது. எனவே, இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்தக் குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்திவிட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.

காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே. ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு- ஆரம்ப கட்டத்திற்கு ரூ. 6,376 மில். செலவு

ranawaka.jpgகிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளது. இரண்டாவது திட்டமான வவுனியா – கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3,100 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது

கடமையைப் பொறுப்பேற்கச் சென்றார் இமெல்டா. பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக கணேஷ் தெரிவிப்பு

imalda.jpgயாழ்ப் பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று வியாழக்கிழமை கடமையைப் பொறுப்பேற்கவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், நேற்றுக்காலை யாழ்.கச்சேரிக்கு திருமதி சுகுமார் சென்றிருந்த போது கே.கணேஷின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் கணேஷின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு யாழ்.கச்சேரியில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஆயினும் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கணேஷ் நேற்று தனது கடமைகளை மேற்கொண்டதாக யாழ்.கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து அரச அதிபரிடம் தொடர்புகொண்ட போது, யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும் 6 மாத காலத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பாகத் திருமதி சுகுமாரிடம் கேட்டபோது, யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நியமனக் கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு எனக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு:- சப். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல் கலைக்கழக மாணவர்கள் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுமே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை, இன்னுமொரு மாண வரை உடல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.