750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் அங்கு பொதுக் கிணறுகள் எதுவும் இல்லை. அதனால் எழுவை தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் எழுவைதீவு கீராமசேவகர் ஆகியொருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
தீவை மீள்மேம்படுத்தும் சமூகம் -Islands Restoration Society (IRS) எழுவைதீவில் ஊசிக்கிணறு அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு லிற்றில் எய்ட் இடம் விண்ணப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊசிக் கிணறு அமைக்கும் திட்டத்துடன் எழுவை தீவு சென்று கிராமத் தலைவர்களுடன் உரையாடியதில் அவர்கள் பாரம்பரயமான கிணறும் கிணற்றடியும் தான் தம் ஊருக்கு பொருத்தமானது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊசிக்கிணற்றுத் திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரிய கிணறு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.
யூன் 24 2010ல் எழுவைதீவு கடந்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் எழுவைதீவு கிராமசேவகர் வி வடிவழகன் எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகச் செயலாளர் அருள்நாதன் அமலநாதன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.
இக்கிணறு வெட்டும் வேலைத்திட்டத்திற்கு 130 000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிபுணத்துவம் மிக்கவர்களை மேற்பார்வைக்கு நியமிக்குமிடத்து கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் தங்கள் உழைப்பை வழங்கும் என தெரிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை கிராமசேவகரும் முன் வந்துள்ளார்.
எழுவைதீவு சுகாதார மையத்திற்கு மருத்துவ உதவி:
மேலும் லிற்றில் எய்ட் மேற்கொண்ட இப்பயணத்தின் போது எழுவைதீவு சுகாதார மையத்திற்கு 1200 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. தீவின் மருத்துவ அலுவலர் ஈ ஞானச்செல்வி லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைனிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இம்மருந்துப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு டென்மார்க்கினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே.
ஊர்காவற்துறை பொது மருத்துவமனையில் லிற்றில் எய்ட்:
இந்த விஜயத்தின் போது ஊர்காவற்துறை பொது மருத்துவ மனைக்கு 20 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. பொது மக்கள் சார்பில் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அருணா புண்ணியமூர்த்தி லிற்றில் எயட் இடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.
ஊர்காவற்துறையில் 18 000 பேர் வாழ்கின்றனர். ஊர்காவற்துறை பொது மருத்துவமனை 58 000 பேருக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றது. அப்பகுதியில் உள்ள தீவுவாழ் மக்களுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை இதுவே.
லிற்றில் எய்ட் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து மருந்துவகைகளை விநியோகம் செய்திருந்தது. அந்த வகையில் ஊர்காவற்துறை மருத்துவமனை மிகவும் சுகாதாரத்துடன் பேணப்படுவதாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை மாதம் 15 அவசர பிரசவங்களைக் கையாள்கின்றது. ஆனால் அங்கு அல்ராசவுண்ட் ஸ்கான் போன்ற வசதிகள் இல்லை. மருத்துவ மேலதிகாரி டொக்டர் புண்ணியமூர்த்தி இது பற்றி லிற்றில் எய்ட் இடம் விணணப்பித்துள்ளார். இதுதொடர்பாக லிற்றில் எய்ட் ரஸ்டிகள் சந்தித்து ஆராய உள்ளனர்.
தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட லிற்றில் எய்ட் உதவித் திட்டங்களுக்கு தீவுப்பகுதிகளை மீளமேம்படுத்தும் சமூகம் – Islands Restoration Society (IRS) குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த சிறீபதி சிவனடியார் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்.
இவ்வுதவித் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவலக்கு: http://littleaid.org.uk/report-on-island-projects-elluvaithivau-kayts