08

08

ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் – சீமான் அறிக்கை

seeman.jpgஇலங் கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்தை ஆராயும் ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தமிழர் இயக்கத் தலைவரும் டைரக்டருமான சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழர் இயக்கத்தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, சிறிலங்காவின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களும், வரவேற்றுள்ள போதிலும் பெயரளவில் கம்யூனிசும் பேசும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தியா இது குறித்து கருத்து எதும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கின்றது.

இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு தினந்தோறும் பல்வேறு வகை சான்றுகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதிநவீன ரேடார்கள், உளவு பார்க்கும் கருவிகள், ரோந்துக்கப்பல்கள் உள்பட எண்ணற்ற ஆயுதங்களை தமிழர் களைக் கொன்றொழிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான போரில் தடை செய்யப்பட்ட 500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள கொத்தக்குண்டு மற்றும் ரசாயன ஆயுதங்களை ரஷ்யா இலங்கைக்கு போர் காலத்தில் விற்பனை செய்துள்ளது.

சீனாவோ இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் உலக வங்கியை விட அதிகளவில் சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கி உள்ளது.இப்பொழுது போர் முடிந்த பின்னும் சீனா இலங்கைக்கு 3021 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இது தவிர தனது நாட்டில் கொடும் குற்றம் புரிந்த 25,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகலிடமாக ஈழத்தை சீனா மாற்றிக்கொண்டு வருகின்றது.

இவ்வாறு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு அனுசரணையாக இருக்கும் தைரியத்தில் சர்வ தேசத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் இப்பொழுது விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கின்றது. மேலும் மேலும் இந்த நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு இன்று வரை உதவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு பெற்று வருகின்றது.

இதன் மூலம் இத்தகைய நாடுகள் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு பகிரங்கமாகத் துணைபோகின்றன. இத்தகைய நிலையில் கண் முன்னே நடக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துவதும் அதற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுப்பதும் நம் அனைவரின் கடமை.

ஆகவே முதற் கட்டமாக வரும் ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தெரிவிக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

மாலைமலர்

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு

Maithiripala_Sirisenaலிற்றில் எய்ட் க்கு அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகளை வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டது. யூன் 21 2010ல் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவில் இவ்வுடன்பாடு எட்டப்பட்டது. இந்நிகழ்வில் டொக்டர் நிமால் காரயவாசம் லிற்றில் எய்ட் யை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார். சுகாதார அமைச்சிரன் சார்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். சுகாதார அமைச்சின்  பொதுச்செயலாளர் டொக்டர் ருபேரு பொதுச் சுகாதார அமைச்சின் இயக்குநர் அஜித் மென்டிஸ் ஆகியோரும் சமூகமளித்து இருந்தனர்.

இப்பரிந்தணர்வுன்படி லிற்றில் எய்ட் ஆல் அன்பளிப்புச் செய்யப்படும் மருந்துவகைகளை விநியோகிக்கும் செலவீனத்தை சுகாதார அமைச்சே பொறுப்பேற்பது என்றும் மருந்துவகைகளின் விநியோகத்தின் போது அவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விநியோகிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த லிற்றில் எய்ட் பிரதிநிதிகள் உடன் இருப்பார்கள் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

கடந்தகாலங்களில் மருந்துவகைகளை விநியொகிப்பதற்கான பாரிய செலவை லிற்றில் எய்ட் பொறுப்பேற்க வேண்டி இருந்தது. இப்புரந்தணர்வு உடன்பாடானது அச்செலவுகளை முழுமையாக நீக்க உதவியுள்ளது.

இதுவரை தனிப்பட்ட பொது அமைப்புகளால் அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகள் தனியாக வைக்கப்படுவதே வழமை. இம்மருந்துவகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வழிமுறைகள் இருக்கவில்லை. (இது பற்றிய விரிவான கட்டுரையொன்று தேசம்நெற் இல் வெளிவர உள்ளது.) ஆனால் லிற்றில் எய்ட் ஆல் வழங்கப்படும் மருந்துவகைகள் மக்களை (நோயாளிகளை) சென்றடைவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த உறுதியளித்து உள்ளது.

லிற்றில் எய்ட் க்கு 2009 டிசம்பர் 31 வரை 1.52 மில்லியன் US $ பெறுமதியான மருந்துவகைககள் Medicine Without Borders அமைப்பினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இதன் முழுப் பட்டியலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Medicin_log_Sri_Lanka_09.pdf

MWB_in_Vavuniya_Hospitalஅதன் பின் மேலதிக மருந்துப் பொருட்களையும் Medicine Without Borders, லிற்றில் எய்ட் க்கு வழங்கி இருந்தது. இதுவரை இவ்வமைப்பு லிற்றில் எய்ட் க்கு வழங்கிய மருந்துவகைகளின் சந்தைப் பெறுமானம் 3 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்கள். Medicine Without Bordersயைச் சேர்ந்த Mr. Hans Frederik Dydensborg, Mr. Thomas Buck and Miss Sugi Thiruchelvam ஆகியோர் இம்மருந்து வகைகளை லிற்றில் எய்ட் க்கு பெற்றுத் தருவதில் முக்கிய பங்கெடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/meeting-with-the-health-minsiter

லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

Panangoda_Internet_Centreலிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான இணைய மையம் ஒன்றை லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்து வழங்கி உள்ளது. பனாங்கொட இராணுவ முகாமில் காயமடைந்துள்ள படைவீரர்களுக்கே இந்த இணைய மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

இதேநாள் காயப்பட்ட படைவீரர்களுக்கான பரா விளையாட்டப் போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு லிற்றில் எய்ட் பிரதிநிதிகளான ரி கொன்ஸ்ரன்ரைன் நிமால் காரயவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

Panangoda Internet Centre - formal Hand Overலிற்றில் எய்ட் ஆல் வழங்கப்பட்ட உதவிகளுக்கு லெப் கேணல் போகொல்லாகமா தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்ட படை வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களுக்கு இது தொடர்பான மேலதிக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் குழந்தைப் போராளிகள்லிற்றில் எய்ட் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இசைக் கருவிகளை வழங்கியும் வெவ்வேறு உதவிகளை மேற்கொண்டு இருந்தனர். அம்பேபுச தடுப்பு முகாமில் இருந்து அம்முன்னாள் போராளிகள் பின்னர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுரிக்கு மாற்றப்பட்டு இருந்தமை அறிந்ததே. http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இந்திய அமைச்சர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினர்.

Selvam Adaikalanathan TNA_TELOஇந்தியா விஜயம் செய்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் நேற்று (July 7 2010)  இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தினர். இதன்போது, தமிழ்மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய தீர்வினைப் பெற இந்தியா உதவ வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது படைக்கட்டுமானங்களுக்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதைத் தடுக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. வடபகுதியில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களை வடபகுதியில் குடியேற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என கூட்டமைப்பு இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிப்பற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது, தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வது என்கிற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும்  தாம் கவனத்தில் எடுப்பதாக கூட்டமைப்பிடம் இந்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந்துள்ளதாகவம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம், ஊடான கடல்வழிப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கான  புகையிரதப் பாதை,  காங்கேசன்துறை அபிவிருத்தி முதலான இந்தியாவின் கரிசனைகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒத்துழைக்கும் எனவும் கூட்டமைப்பு இந்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டமைப்பின் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கூட்டமைப்பின் குழுவினர் கடந்த ஞாயிறு (july 04 2010) இந்தியா புறப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

யாழ். உயர்பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

High-Security-Zoneயாழ். குடா நாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ள சில பகுதிகளில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தெல்லிப்பழை, கோப்பாய், மற்றும் யாழ்.உயர் பாதுகாப்புவலயத்தின் மேற்குப் பகுதிகளில் மக்களை மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

High-Security-Zoneஉயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்து பாதகாப்புப் படைஅதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துமாறும், அதன் ஆரம்ப வேலைகளை கவனிக்குமாறும் யாழ். அரசாங்க அதிபருக்கு மீள்குடியேற்ற அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அனுமதியைப் பெற யாழ். அரச அதிபருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related News:

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தாராகுளம் மக்களுக்கு 18 வருடங்களின் பின் குடியமர அனுமதி!

இறுதிக்கட்டப் போரின் போது, பெண்ணின் முள்ளந்தண்டுள் புகுந்த துப்பாக்கிச் சன்னம் ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பெண்ணொருவரின் முள்ளந்தண்டில் ஊடுருவிய துப்பாக்கிச் சன்னம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற போரில் ஒரு துப்பாக்கிச் சன்னம் பெண்ணொருவரின் இடுப்பு முள்ளந்தண்டில் புகுந்து மிகுந்த வேதனையை எற்படுத்தி வந்தது.

கடந்த சனிக்கிழமை (July 03 2010) சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலம் இத்துப்பாக்கிச் சன்னம் அகற்றப்பட்டுள்ளது. நாவற்குழி மறவன்புலவு என்ற இடத்தைச்சேர்ந்த எஸ்.கமலேஸ்வரி (வயத 26) என்ற பெண்ணின் உடலில் இருந்தே இத்துப்பாக்கிச் சன்னம் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது காயப்பட்டு உனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்கள், எறிகணைகளில் துண்டங்கள் என்பன இன்னமும் அகற்றப்படாமலுள்ளமை குறிப்பித்தக்கது.

அச்சுவேலிப் பகுதியில் 25 ஏக்கரில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் முகமாக அச்சுவேலிப் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஐந்து ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை முதலீட்டுச் சபையின் வடபிராந்திய அலுவலகம் மெற்கொண்டுள்ளது. கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் அனுமதியுடன் அச்சவேலியில் 25 எக்கரில் இம்முதலீட்டு ஊக்கவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

திருகோணமலை மொறவேவ பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம்  எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியான இச்சிறுமி சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

அச்சந்தேக நபர் தடுப்பிலிருந்து தப்பிச்சென்று விட்டார் இந்நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றமைக்கு பொலிஸ் அதிகாரிகள் யாருடையதும் உடந்தை இருந்ததா என்பது குறித்து விசேட பொலிஸ் அணி ஒன்று விசாரணை நடத்தி வருகின்றது.

ஸ்பெயின்- இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

spain.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று ஸ்பெயின், ஜெர்மன் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின்  அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நெதர்லாந்து ஸ்பெயின் என்பவற்றுக்கிடையான இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி நடைபெறவுள்ளது.

ஐ. நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; – உள்ளூர், சர்வதேச பொறுப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசு கையாள்கை – தகவல் திணைக்களம் அறிக்கை

unproout.jpgகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு வெளியே நேற்று முன் தினம் (06) இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் அதன் உள்ளூர் மற்றும் சர்வதேச பொறுப்புகள் நிறைவேறும் வகையில் கையாண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரட்ன அத்துகலவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் உள்ளூர் மட்டத்தில் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது. எனவே, சமாதான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, அலுவலகத்துக்கு வெளியே சமாதான முறையில் கூடுவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அதேவேளை, அரசாங்கம் தனது சர்வதேச பொறுப்பை நன்குணர்ந்த நிலையில் ஐ. நா. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்பவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போதுமான பொலிஸாரை அங்கு குவித்திருந்தது. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விழிப்புடனும் எதனையும் சமாளிக்கும் நிலையிலும் இருந்தனர்.

அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் மாலையில் வேலை முடிந்ததும் சுதந்திரமாக வெளியேறுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். பெருமளவு ஊழியர்கள் இவ்வாறு வெளியேறிய பின்னர், ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் மட்டுமே உள்ளே இருந்தபோது, வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரியொருவருடன் பேச வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். இலங்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உதவுவதற்காக ஐ. நா. செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளமை தொடர்பாக தமது கவலையைத் தெரிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இந் நிலையில், வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு ஐ. நா. அலுவலகத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு சிலர் மட்டும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் ஐ. நா. அலுவலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை சந்தித்து தமது கருத்தை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த செயற்பாடு நிறைவேற்றப்பட்டதையடுத்து ஐ. நா. உத்தியோகத்தர்கள் அலுவலகத்தை விட்டகன்றனர்.

இந் நிலையில் கொழும்பில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் எதிர்காலத்தில் வழமை போல் இயங்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இலங்கை தொடர்பான ஆலோசனைக்குழு விடயம் மீள் பரிசீலனை செய்யப்படும் வரை எதிர்ப்பியக்கம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதாக அரசாங்கத்துக்கு தெரிந்துள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்குள் அதிகாரம் பெறப்பட்ட நபர்கள் சென்று வருவதற்கான சுதந்திரம் வழமை போன்றே தொடர்ந்தும் இருந்து வரும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது