09

09

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்கிறார் முரளி

muralitharan.jpgகிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் தன்னிடமில்லை என சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வியாழனன்று {08 ஜூலை} மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரசியலும் ஊடகங்களும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் தனது மனதைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்களே எனவும் முரளிதரன் கூறியுள்ளார். நலநிதிய அமைப்பொன்றுடன் பணியாற்றும் முரளி, சில திட்டங்களுக்காக வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து காணியொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் சமூக சேவை செய்வதற்கு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.

கே.பி.யின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? – நாடாளுமன்றத்தில் ரணில் கேள்வி

Kumaran_Pathmanathanகே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்  கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

கே.பியின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவருக்குச் சொந்தமான 500 பெற்றோல் நிலையங்களுக்கும் என்ன நடந்தது? என நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். மேற்படி சொத்துக்களை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்த  முடியும் எனவும் அவர் கூறினார்.

ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து பேரணி

wwww.jpgஇலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் ரஷியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளை தாங்கிக் கொண்டும், ஆதரவுக் கோஷங்களை முழங்கிக் கொண்டும் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் ஊடாக சென்றார்கள்.

அவர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு பேரணியாக சென்று நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

wwww.jpg

வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

parliament.gifஇன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும் அளிக்கப்பட்டது  எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி, நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் ஜூன் 29ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சுப் பதவியை இராஜினாமா

ww.jpgவீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ww-i.jpg

கேபி உடன் virtual interview : ஈழமாறன்

Kumaran_Pathmanathanஅண்மைக்காலமாக கேபி யும் அவரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும் இலங்கைப் பயணம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதன் அரசியல் ஆழ அகலங்களை அறிய ஈழமாறன் கேபி உடன் ஒரு வேட்ச்சுவல் இன்ரவியூ – virtual interview ஒன்றை எடுக்கின்றார். தேசம்நெற் வாசகர்களுக்காக கேபி உடன்  அந்த virtual interview…..

ஈழமாறன்: வணக்கம் திரு கேபி…..

கேபி: வணக்கம் மாறன்.

ஈழமாறன்: நல்ல வசதியான வீடுதான் தந்திருக்கிறாங்கள் போல….

கேபி: ஓமோம்.. நாங்கள் கொழும்புக்கு வாறதுக்கு முதல் சில நிபந்தனைகளை விதித்திருந்தோம். அதிலே முக்கியமானது இதுதான். மாறன் நான் வன்னியிலை இருந்த சனம்மாதிரி அல்லது சாதாரண போராளிகள் மாதிரி கேடு கெட்டுத் திரியேல்லை. தாய்லாந்திலை கப்பல் மாதிரி வீடு. மலேசியாவிலை நான் இருந்த வீட்டை வந்து பாத்தியள் எண்டா.. வாயடைச்சுப் போடுவியள்.. இதெல்லாம் ஒரு ஜூஜூபி.

பெரிய வீடு தனிய நான் தங்கிறதுக்கு இல்லை. வெளிநாடுகளிலை இருந்து குழுக்கள் எண்டு சொல்லி நிறையப் பேர் வருவினம் எல்லோ. அவையள் எல்லாம் வசதியா இருந்து பானம் அருந்திட்டு போறதுக்கு, கொஞ்சம் பெரிய வீடு வசதியா இருக்கும் எண்டு, கோத்தபாய நாங்கள் மலேசியாவிலை இருக்கும் போதே எல்லா வசதிகளும் நீங்கள் எதிர்பாக்கிற மாதிரி இருக்கும் என்று வாக்குறுதி வேறை தந்தவர்.

ஈழமாறன்: உங்கட பதிலில் இருந்து மூண்டு கேள்விகள் கேட்கவேணும். ஒன்று நாங்கள் எண்டா யார் யார்? இரண்டு இலங்கைக்கு வருவதற்கு முன் என்று சொன்னீர்கள். அப்பிடியெண்டா.. இலங்கை அரசாங்கம் உங்களைக் கெட்டித்தனமா புடிச்சுக் கொண்டு வந்திட்டம் எண்டு சொன்னது?மூண்டாவது வேலை வெட்டியில்லாமல் பொண்டாட்டி புள்ளையளோட சுத்தித் திரிஞ்ச உங்களுக்கு நாட்டுக் கொரு வீடு வாங்க காசு எங்காலை?

கேபி: முதலாவது கேள்விக்கு என்னால சிரிக்கிறதைத் தவிர வேறை பதில் சொல்ல முடியேல்லை.

இரண்டாவது கேள்விக்கு பதில் 30 வருசம் புடிக்க முடியாமப் போன ஸ்ரீலங்கா அரசு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு புடிச்சிட்டம் எண்டு கதை விடேக்குள்ள விளங்கேல்லையோ… கதை எங்கை, எப்பிடிப் போகுதெண்டு.…கட்டுநாயக்கா எயாப் போட்டில வந்திறங்கினபோது வந்து பாத்திருக்க வேணும் எங்களுக்கு கிடைச்ச வரவேற்பை. மகிந்தவுக்கு கூட அப்பிடிக் கிடைச்சதில்லை. 

மூண்டாவது கேள்வவிக்கு பதில் புலன்பெயர் மக்கள்தான். ரெலோவைச் சுட்டு தள்ளேக்கை நல்லூர் கோயிலுக்கு முன்னுக்கு போட்டு உயிரோடை எரிக்கேக்கை…பூரிச்சுப் போய் தாலிக்கொடி தொட்டு டொலராய், பவுண்டாய், பிராங்காய் குடுத்த நன்கொடையிலைதான் தாய்லாந்திலை வீடு வாங்கினனான்.

பிறகு, என்ன இயக்கம் அது? அவன் கரிகாலன் எல்லா இயக்கத்தையும் போட்டு தள்ளினதாலை அந்த இயக்கத்தின்ரை பேர் வருகுதில்லை.

ஈழமாறன்: ஈபிஆர்எல்எவ்……?

கேபி: ஆ….. ஈபி. அந்த இயக்கத்திலை இருந்தும் கொஞ்சப் பேரை பிடிச்சு வைச்சிருந்தவங்கள் தானை.. அவன்…. ஆரது..அதுதான் மாறன்…கள்ளக் காதலியோடை சல்லாபம் ஆடப் போன இடத்திலை குண்டு எறிஞ்சு கால் முறிச்சாங்களே. எறிஞ்சு முறிச்சதும் தாங்கள்தான் எண்டு…கனடாவிலையும் ஒருவர் பதினெட்டோ பத்தொம்பதோ எண்டு இயக்கம் தொடங்கினவர், மற்றாக்களுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை நாங்கள் தான் போட்டனாங்கள், எண்டு சொல்லித் திரியிறாரே. அவனைத்தான் சொல்லிறன்.

ஈழமாறன்: கிட்டு…..

கேபி: அவன்தான்.. அதுக்காக அந்த ஈபி பெடியள் எல்லாரையும் போட்டுத் தள்ளினபோது… புலம்பெயர்ந்தவை புள்ளையும் பெத்து கனக்க காசும் அள்ளிக் குடுத்தவை. யாழ்ப்பாணத்தார் கொக்கோ கோலா குடுத்தவைதான்.. அதை விடுங்கோ. அந்தப் பணத்திலை வாங்கின வீடுதான் மலேசியா மாளிகை.

ஈழமாறன்: அப்பிடியெண்டா காசு சேத்தது? ஆயுதம் வாங்கி அடிபட எண்டெல்லோ புலன்பெயர் மாக்கள் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தினம்?

கேபி: அப்பிடி அடி முட்டாள்கள் மாதிரி அவை இருக்காட்டி 30 வருசம் வண்டி ஓட்டியிருக்க முடியுமோ?

ஈழமாறன்: அப்ப தமிழீழம் எடுத்திருக்கவே முடியாதா?

கேபி: மாறன்! நீர் என்ன தேசியத் தலைவரை விட மொக்கனா இருக்கிறீர். எங்கையும் உமி விதைச்சு வெள்ளாமை வெட்டினதா கேள்விப் பட்டிருக்கிறியளே?

ஈழமாறன்: அப்படியென்றால் அண்மையில் சாள்ஸ் என்பவர் தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் நீங்கள் ஒரு பென்னாம் பெரிய ஜனநாயக வாதியெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனா நீங்களோ ரெலோவைச் சுட்டுத்தள்ளும் போதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். பின்னர் ஈபிஆர் எல் எவ் புளட் என்று வரிசையில் சுட்டுத் தள்ளியபோதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். இப்ப சாள்ஸ் சொல்லிறமாதிரி ஒரு மனிதாபிமாதிரி எனக்குத் தெரியவில்லையே?.

கேபி: இது மட்டுமல்ல. இன்னும் நிறைய என்னைப் பற்றி வரும். என்னைச் சித்திரவதை செய்ததாய் வரும். எனக்கு சொகுசு மாளிகை தந்ததாக வரும். கேபிக்கு கொம்பிருக்கு எண்டு வரும். கேபிக்கு துவக்குக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியாது எண்டு வரும். கேபி ஒண்டுக்குப் போனா பெற்றோல் வருது எண்டு வரும். இப்பிடி எத்தினையோ வரும். ஆனா யதார்த்தம் என்ன சொல்லுங்கோ. நான் ஒரு படு பிற்போக்கான பாசிச அமைப்பில் அங்கத்தவராய் இருந்தவன். அதன் தலைவனுக்கு விசுவாசமாய் இருந்தவன். நான் வாங்கி அனுப்பின ஆயுதத்தால் செத்து மடிந்து போனவர்கள் எதிரிகள் மட்டுமல்ல மாறன் எங்கள் நண்பர்கள், அரசில்வாதிகள், மாணவர்கள், புத்திஜீவிகள் என்று ஒரு பெரிய பட்டிலே போடலாம். சாள்ஸ் சொல்லுவது போல எனக்கு மனிதாபிமானம் வந்திருக்கிறது என்பது சிறுபிள்ளைத் தனம்.

ஈழமாறன்: அந்தக் குழுவில் வந்த அருட்குமார் பற்றி?

கேபி: யார் மக்டொனால்ட் பேகர் குடுத்துக் குடுத்து வைத்தியம் பார்த்த டொக்டரையோ கேக்கிறியள்? அந்த மனுசன்  கொழும்பிலை நல்லா இருந்து கதைச்சவர். பிறகு லண்டன் போன பிறகு போறம்  ஜனநாயக முறையிலை வெருட்டியிருக்கினம் போல. இதென்ன பரமேசு பெடியன்ரை உண்ணாவிரத விளையாட்டே சொல்லுங்கோ?

ஈழமாறன்: இந்தியாவிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். கொழும்பிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். உதாரணத்திற்கு புளட்டிலை இருக்கும்போது போராளிகளை போட்டுத்தள்ளிய சிவராமுக்கும் பட்டம் குடுத்தவர். இப்பிடி பாம்பு கடிச்சு செத்தவன், விசர் நாய் கடிச்சு செத்தவனுக்கெல்லாம் மாமனிதர், மாமாமனிதர் எண்டெல்லாம் பட்டம் குடுத்த தலைவர், பட்டெண்டு போனபோது சரி அஞ்சலி வேண்டாம். ஒரு பட்டமாவது குடுத்திருக்கலாமே?

கேபி: புலம்பெயர் மக்கள் அவர் இன்னும் சாகேல்லை எண்டு சொல்லுகினம். எப்பிடி பட்டம் குடுக்கிறது. நான் சிலோனுக்கு கிளம்ப முதல் ஒரு பட்டத்தைக் குடுத்து, குத்துவிளக்கை ஏத்தி, கூட இருந்த குற்றத்திற்காக கோடலிக் கொத்தன், கோவணச் சண்டியன், அம்மணச் சோழன் காலிலை விழுந்த கரிகாலன் என்று ஏதாவது பட்டம் குடுக்கிற ஜடியா இருந்தது. உருத்திரகுமாரன் உழைச்சது காணாது எண்டு சொன்னபடியால், அவர் சாகா நாடகத்தை கொஞ்சம் தொடர வேண்டியதாய் போச்சு. இப்பதான் நாடு கழண்ட தழிழீழத்தை அமைச்சிருக்கினம். பொறுமையா இருந்து கேக்கிற போதெல்லாம் காசைக் குடுங்கோ. குறுக்கை குறுக்கை கேள்வி கேக்காமல். நீங்கள் மாற்று அமைப்போ?

ஈழமாறன்: கடைசி வரைக்கும் தொடர்பிலை இருந்த ஒரு ஆள் நீங்கள் தான். உண்மையா சொல்லுங்கோ. அம்மாவாணை அண்ணை இருக்கிறாரோ? ஏன் கேக்கிறன் எண்டா.. புலியிலை ஒரு பிரிவு சொல்லுது அவர் 300 பேரோடை கப்பலிலை சுத்திக் கொண்டிருக்கிறார் எண்டு. சுத்திறதெண்டா விடலை பெடியள் சுத்திற சுத்தில்லை.. இது போறதுக்கு இடம் இல்லாமல் சுத்துற சுத்து.

இன்னொரு பிரிவு சொல்லுது 600 பேரோடை அம்மணியையும் கூட்டிக்கொண்டு தலைவர் எஸ்கேப். அதுவும் ஆபிரிக்காவிலை இருக்கிற ஒரு காட்டிலை இருக்கிறார் எண்டு. அதுக்காக புலியோடை புலியா இல்லை… வலு சொகுசாத்தான்.

வேறை ஒரு பிரிவு சொல்லுது அவர் இருக்கிறார். ஆனா இருக்கிற இடம் சொல்ல மாட்டம். ஒரு நாளைக்கு வருவார் அப்ப தெரியும் எண்டு. எப்ப வருவார் எண்டு கேட்டா, இருக்கிற இடமே சொல்ல மாட்டம் எண்டு சொல்லிறம் வாற நாளை மட்டும் சொல்லிடுவோமோ? எண்டு தினா வெட்டாக் கேக்கிறாங்கள்.

ஒரு பிரிவு கோடாலியாலை கொத்தினதா சொல்லுது. ஒரு பிரிவு கொம்பியூட்டர் கிராபிக்ஸ் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கோவணத்தோட வைச்சு அடிச்சுக் கொண்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கொண்ட பிறகுதான் கோவணத்தைக் கட்டிவிட்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு வெள்ளைக் கொடியோட, வெள்ளக்காரன்கள் நிண்டவங்கள். நிண்டவங்களைக் கண்டவங்கள் சொன்ன பிறகுதான் அண்ணை கெலியிலை ஏறினவர் எண்றாங்கள். ஏறுன பிறகு மிதிச்சவங்கள் எண்டு ஒரு குறூப் சொல்லுது.

போற வயசிலை உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அம்மாவாணை ஆள் இருக்கோ இல்லையோ? அண்ணை தேசத் துரோகி எண்டு மாற்றுக் கருத்தாரை வன்னிக் காட்டுக்குள்ளை பிடிச்சுக் கொண்டுபோய் சுட்டபிறகு, சொந்த பந்தம் ஆளிருக்கோ? ஆளிருக்கோ? எண்டு  விட்ட கண்ணீர்… இண்டைக்கு நான் கேக்கிற நிலைக்கு கொண்டுவந்து விட்டிட்டு.…

கேபி: சில விசயம் உங்களுக்கு நான் சொல்லோது. ரெக்கோடரை நிறுத்தினா… ஓவ் த ரெக்கோடா சில விசயம் சொல்லலாம்.

தம்பி தமிழேந்தி ரேப்பை நிப்பாட்டிப் போட்டு கொஞ்சம் வெளியிலை இரு. உவன் கோத்தபாய ஆரையும் விட்டு ஒட்டுக் கேப்பான். ஆரும் வராமல் பார், பாப்பா நீ எயாப் போட்டுக்குப் போய் எங்கட பெடியள் ஆரும் தப்பிப் போனா காட்டிக் குடு. பொட்டு நீ சிவத்தம்பி ஏதோ செம்மறி மொழி மாநாட்டுக்கு போறானாம் அவனை ஏத்திக் கொண்டுபோய் பத்திரமா கலைஞர் வீட்டிலை விட்டிட்டு வா. டேய் பொட்டன்… செம்மறி மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்து அறிஞர்கள் மட்டும் தான் போறாங்களாம். அது உண்மையாத்தான் இருக்கும் எதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப் பார்.

ஈழமாறன்: இப்ப சொல்லுங்கோ!

கேபி: மாறன்… ஆள் உயிரோடை இல்லை. ஆளை போடுறதுக்கு பிளான் போட்டுக் குடுத்ததே நாங்கள் தான். அவங்கள் சொன்னவங்கள். உள்ளுக்க வர விட்டு அடிக்கிற பிளானும் எங்கடைதான். என்னிலை நம்பிக்கை இல்லை எண்டா பொட்டனைக் கேளுங்கோ.

ஈழமாறன்: அவங்கள் எண்டா..

கேபி: நோர்வே இந்தியா சீனா அமெரிக்கா. அப்பிடிக் கனபேர். முள்ளிவாய்க்கால் வரைக்கும் கதை குடுத்து, கதை குடுத்து கூட்டிக் கொண்டு வா. அதுக்குப் பிறகு வெள்ளைக் கொடியும் காட்டி வெள்ளக் காரனையும் காட்டி …மிச்சம் உங்களுக்கு தெரியும்தானே.

ஈழமாறன்: நாடு  களண்ட மன்னிக்கவும் கடந்த தமிழீழம் தொடர்பாய் உங்கட கருத்து என்ன? நீங்கள் தானை ஆரம்பிச்சனிங்கள்…..

கேபி: ருத்ரகுமாரன்….. ஆரெண்டு தெரிஞ்சா நீங்கள் இந்தக் கேள்வி கேக்க மாட்டிங்கள். போகப் போகத் தெரியும். அதிலை ஒரு நேர்மையான ஆள் காட்டுங்கோ.  யாராவது ஒருத்தனுக்கு வன்னி தெரியும் எண்டு சொல்லுங்கோ?. ஒருத்தன் பத்து நிமிசம் துவக்கு தூக்கியிருபானா? துப்பாக்கி வேண்டாம், காயப்பட்ட போராளிகளுக்கு மருந்து….. இவங்களைப் போய் பொருட்டாய் மதிச்சு கேள்வி கேக்கிறியள்.

ஜநநாயக அமைப்பு எண்டு எல்லோ சொல்லுறாங்கள். அப்பியெண்டா எதுக்கு பிரித்தானியாவிலை கிட்டடியிலை நடந்த கூட்டத்திலை ஒரு வேட்பாளர் கேள்வி கேட்க மொத்து மொத்து எண்டு மொத்தினவை. புலி புலால் தான் உண்ணும். புல்லு தின்னும் எண்டு புலம்பெயர் புத்திசாலி மக்கள் நினைச்சா சிரிக்கலாம். வேறை என்னதான் சொல்ல. கழண்ட தமிழீழத்திலை இருக்கிறவை எல்லாரும்  நல்லா சம்பாதிச்சிட்டாங்கள். சொத்து வேறை சேத்திட்டாங்கள். மெயின்ரெயின் பண்ண வேண்டாமோ? மரத்திலை இருந்து வேருக்கும் வேரிலை இருந்து மசிருக்கும் எண்டு கவிதை எழுதினவர்  எல்லாம் நாடு கழண்ட தமிழீழத்திலை இருக்கிறார், எண்டா வடிவா விளங்கிக் கொள்ளுங்கோ. 30 வருசம் கழிச்சு வந்து கேட்க நானும் இருக்கமாட்டன். அரைவாசிச் சனமும் இருக்காது.

ஈழமாறன்: அப்ப நாடுகடந்த தமிழீழம் மூத்தி ஜயா அனுப்பின வணங்கா மண் கப்பல் மாதிரியோ.

கேபி: எங்களுடன் நெருங்கின தொடர்பிலை இருக்கிற ஆக்களைப் பற்றி நான் விரிவா கதைக்க முடியாது. ஆறுமாசமா கப்பல் விடத் தெரியாதவங்கள் அமெரிக்காவிலை இருந்து ஈழம் எடுத்துத் தாறம் எண்ணிறது எருமையிலை ஏறிப்போய் செவ்வாய் கிரகத்திலை தண்ணியிருக்கோ எண்டு ஆராச்சி செய்த மாதிரித்தான்.

உருத்திர குமாரன் கோழி படிச்சவன் குற்றவாழியா இல்லையா எண்டு வாதிடலாம். சிலவேளை ஜெயிக்கலாம்.

தமிழீழம் எண்டா எல்லாருக்கும் விளையாட்டாப் போச்சு. வடக்கையும் கிழக்கையும் இணைக்கவே வக்கில்லை. தமிழீழமோ? மாறன் உருத்திகமாரும் அவரோடை போட்டி போட்டு வெண்ட வெளிநாட்டு விசுக்கோத்துக்களும் வேணும் எண்டா சண் ரிவியிலை நடக்கும் எல்லோ அசத்தப் போவது யார் நிகழ்ச்சி. அதிலை போய் ஜோக் அடிக்கச் சொல்லுங்கோ. 

ஈழமாறன்: ஒரு குறைஞ்சபட்சத் தீர்வு பற்றிக்கூடக் கதைக்காமல் அபிவிருத்தி என்றும் பொருளாதார மேம்பாடு என்றும் பேசும் நீங்கள் புலம்பெயர் மக்கள் இதைச் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? ஆமிக்கார கொமாண்டர் சொல்லிற மாதிரி பிரபாகரனிட்டைக் கேட்கேல்லை. அதுக்கு காரணம் இருக்கு. அரசாங்கம் இப்பிடிப் பதில் சொல்லலாமோ?

கேபி: புலம்பெயர் மாக்களைக் குழப்பாட்டி புத்தர் கோயில் கட்டிற மகிந்த சிந்தனைக்கு ஒருநாளைக்கு ஆபத்து வரும் என்று பிரபாகரனை முடிச்சவங்களுக்குத் தெரியாதோ? இதிலை புலம் பெயர் மக்களின்ரை பங்களிப்பு மிக முக்கியம். நான் என்னாலானதை செய்யத் தொடங்கிட்டன். சாள்ஸ் சொன்னமாதிரி தமிழ் மக்களை வைத்தே தமிழரை இல்லாமல் பண்ணிற வித்தையை மகிந்த அரசு நன்றாக விளங்கி வைத்திருக்கு. அதைச் செவ்வனே செய்யக் குழு குழுவாய் வருவினம். போவினம். இனிமேத்தான் வேடிக்கை விநோத நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கு.

ஈழ: வடக்கு கிழக்கு மக்களுக்கு என்ன சொல்ல விரும்பிறியள்?

கேபி: எல்லாரும் குனிஞ்சு நில்லுங்கோ…… மகிந்த சிந்தனையின் கீழ் நல்ல சுகம் கிடைக்கும்.

ஈழ: நன்றி. சிரமத்தையும் பாராமல்…. புலியிலை இருந்த அத்தனை கொமாண்டர்களோடையும் சொகுசா இருந்து பேட்டி தந்ததுக்கு…

மீண்டும் ஒரு புதிய புரட்டாசி பதினொன்றா? :நோர்வே நக்கீரா

pst1.jpg
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உஸ்பேக்கர்கள் என்று கருதப்படுகிறது. மற்றவர் சீனாவைச் சேர்ந்த உருகு இனத்தவராக இருக்கலாம்.

இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கும் ஷய்ரோயின் பரவொக்சைட் எனும் திராவகத்தை மருந்துக்கடையில் வாங்க முயற்சித்தனர். இவர்களைத் தொடர்ந்து திரிந்த உளவுப்பொலிசார் இந்தத்திராவகத்துக்குப் பதிலாக அதேபோன்ற பாதிப்பற்ற வேறு திராவகத்தை மாறிக் கொடுக்கச் செய்தார்கள். இதன் காரணமாக நடக்கவிருந்த பெரிய பயங்கரப்பேரழிவு கொண்ட நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் யேர்மனியில் உள்ள புயிஸ்பர்க்கிலும் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாகக் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் ஒஸ்லோ யேர்மனுக்கிடையில் பல தொடர்புளை ஏற்படுத்தியிருந்தனர். சென்ற வின்ரறில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான சகலபொருட்களும் வாங்கப்பட்டு விட்டன. இதுபற்றிய மேலதிகவிபரங்கள் துப்புத்துலக்கப்படுகிறது. பொலிசின் தியறி என்னவெனில் இந்தக்குண்டுகள் நோர்வேயில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அயல்நாடுகள் வேறுநாடுகளிலும் வைப்பதற்குச் சாத்தியம் இருந்திருக்கும்.

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது

ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னேயை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வர வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்‘. பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’ – ஜீ. எல். பீரிஸ்

gl.jpgபயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report  வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ள ’Sri Lanka Recharting U.S Strategy after The War” என்ற அறிக்கையை மேற்கோள்காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள். தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது. இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல் சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

“2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.

சாத்வீகப் போராட்டத்துக்கு இடையூறு இல்லை; பேராசிரியர் பீரிஸ்

g.jpgகொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

 அதேசமயம், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசு இடையூறு ஏற்படுத்தாதென அவர் மேலும் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று பிற்பகல் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்த பீரிஸ், எந்தவொரு குழுவினரும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என்று கூறினார்.

இதற்கிணங்க ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த அரசாங்கம் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.