‘‘முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். எம்மீதுள்ள களங்கத்தை போக்குங்கள்” என – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தி.மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அத்துடன் அண்மையில் சாவகச்சேரியில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், விரிவான விசாரணகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பாகவும் சிலர் தம்மீது குற்றம் சுமத்தி வருவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் எனவும், இவற்றிற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய விசாணைகளை நடத்தி தம்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மகேஸ்வரனின் மனைவியும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராயுளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றைத் தெரிவித்துள்ளார்.