12

12

நடிகை அசின் இலங்கை ஜனாதிபதியின் பாரியாருடன் யாழ் விஜயம்!

Asin_South_Indian_Actressசிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கண் சத்திரசிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு வருகை புரிந்தனர்.

தென்னிந்திய நடிகை அசின் மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோரின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையத்தில் இந்திய கண்சிகிச்சை நிபுணர்களால் விழி வெண்படல சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இக்குழுவினர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தனர். நடிகை அசின் வருகை தந்த செய்தி கசிந்ததும் வைத்தியசாலையை நோக்கி பல இரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர் இருந்தபோதும், இவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியா, யாழ்.வைத்தியசாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு திரைப்பட அமைப்பினரின் பணிப்பை மீறி இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்ற காரணத்தினால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை அசினுக்கு தடைவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாதுவின் மரணம் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன!

நேற்று முன்தினம் (10-07-20100) அன்று வேலணை வைத்தியசாலையில் மர்மமான முறையில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்ட மருத்துவமாதுவான சரவணை தர்சிகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மரணம் தொடர்பாக அவ்வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். விசாரணகள் முடியும் வரை குறிப்பிட்ட வைத்தியர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை. தர்சிகாவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது  தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘மாவீரர் துயிலுமில்லத்திற்கு’ அருகில் குடியிருக்கும் மக்களை வெளியேறுமாறு படையினர் உத்தரவு.

Maaveerar_Thuyilum_Illam_Kopaiகோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள், 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர்.

Maaveerar_Thuyilum_Illam_Kopaiகடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா  அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா, அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும், தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில்  எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர்.

சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் பயணித்தவர்கள் வழியில் விபத்துக்குள்ளாகினர். ஒருவர் உயிரிழந்தார்.

வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஹயஸ்’ வான் ஒன்றில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இவர்களின் வாகனம் நேற்றுக்காலை 5.30 மணியளவில் சிலாபம் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.மரியாம்பிள்ளை (வயது 76) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி அந்தோனியம்மா (வயது 66) உட்பட ஏழு பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்த அனைவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை அண்டிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், தொண்டமான்நகர், கிளிநொச்சி நகர்ப்பகுதி, திருநகர், கணேசபுரம். பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேறிய மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஏ-9 பாதையின் இருபுறமும் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானவற்றிற்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.  அழிவடைந்த, சேதமுற்ற பொதுமக்களின் வீடுகள் மீளமைக்கப்படாத நிலையில் உள்ளபோது,  அம்மக்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குவது என்பது இயலாத விடயம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்; கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்

p.jpgகிளிநொச் சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபிவிருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் 21வது நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் 21வது நினைவுதினம் நாளையாகும். இதனையிட்டு த.வி.கூ. யாழ். மாவட்ட தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.00 மணியளவில் கூட்டம் இடம்பெறும்.

டெங்குவினால் பாதிப்பு; பெண் டாக்டர் மரணம்

mosquito.jpgபதுளை வைத்தியசாலை டாக்டர் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (11) மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், லக்மாலி விஜேநாயக்க (வயது 31) எனவும் திருமணமாகாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பதுளை மாகாண வைத்திய சாலையில் 23 வது சிறுவர் வார்ட்டில் டாக்டராகப் பணிபுரிந்தவர். இவர் நோயாளிகளுடன் மிகவும் காருண்யமாக நடந்து கொண்டு அனைவரினதும் பெரு மதிப்பைப் பெற்று வந்தமையும் குறிப்பி டத்தக்கது.

சில நாட்களுக்கு முன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட இவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். (10) நேற்று முன்தினம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் அதிதீவிர சிக்சசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.