14

14

ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

யாழில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு

sri-lanka-petroleum.jpgஅமைச்சரவை தீர்மானத்தின்படி இன்றிலிருந்து யாழில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி பெற்றோல் ரூபா 2.40 த்தாலும் . டீசல் மற்றும் மண்னெண்ணை ரூபா 1.90 த்தாலும் விலை குறைக்கப்படவுள்ளது.

வைகோ, நெடுமாறன் கைது

yko_03.jpgசென்னை யில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்

Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.

நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.

நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வெளியில் முதன்முறையாக கிளிநொச்சியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

p.jpgஅரசாங் கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

கொழும்புக்கு வெளியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறும். மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை இரணைமடுவில் ஜனாதிபதி தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
இதனை குறிக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களும் அங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.