நல்லூர் திருவிழாவில் இம்முறை புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் ஆரம்பமாகி நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பெண்கள் சேலை, நீளப்பாவாடை சட்டை, தாவணி ஆகிய உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். சுடிதார் முதலான வேறு உடைகளை அணிந்து வருபவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் வேட்டி அணிந்து வரவேண்டும். காற்சட்டை உடபட்ட வேறு உடைகளில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நேற்று (16-07-2010) யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைறேறப்பட்ட முடிவுகளின் படியே இவை அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கையிலிருந்து ஏராளமான பெரும்பான்மை இனத்தவர்கள் இத்திருவிழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் உடைகள் குறித்து தென்பகுதி பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கப்பிரதிட்டை செய்யும் பக்தர்களுக்கு, நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வீதிகளில் மணல் பரவப்படும். தினமும் அம்மண் பரிசோதனை செய்யப்படும். ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுகாதாரம், குடிநீர்விநியோகம் முதலான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.