22

22

தேங்காயினுள் குழந்தையின் கை உருவம்; கல்முனையில் பரபரப்பு

coc.jpgகல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றினுள் குழந்தையொன்றின் கை வடிவத்தில் தேங்காய் முளை காணப்பட்டுள்ளது.  இந்த கை வடிவத்திலான விரல்களுடன் கூடியதாகக் காணப்படும் இத் தேங்காய் முளையை பெருந்திரளான மக்கள் அதிசயமாகக் கருது பார்வையிடுகின்றனர்.

கல்முனைக்குடி – 14, எம். சி. அஹ்மது அவெனியூவில் வசித்துவரும் நிஸாம் மெளலவியின் வீட்டில் உணவு சமைப்பதற்காக உடைக்கப்பட்ட தேங்காயிலேயே இவ்வாறு முளை காணப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை – சென்னையில் ரணில்

இலங்கையின் தற்போதைய நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு தொடர்பான விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க லடக் செல்லும் வழியில் செவ்வாய் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தந்திருந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரணில் கூறியிருப்பதாவது; வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசு தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் அரசிடம் விளக்கம் கேட்டோம்.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றதிகார பிரதமருக்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. பொலிஸ், நீதி, நிர்வாகம், தொழில் துறைகளில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்த வேண்டுமென்று ரணில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத 3ஆவது கிழமை டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனம்

mos.jpgஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது கிழமையை “டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வார நாட்களில் துப்புரவுபடுத்தும் நடவடிக்கைகள் டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாநாட்டின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தேசிய டெங்கு தடுப்பு திட்டத்தின் ஓரங்கமாக சுத்தப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மாதத்தின் முதலாவது, இரண்டாவது திங்கள் கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் மாத்திரம் டெங்கு நோயால் 158 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 21 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கைவினைத் திறன் கண்காட்சி

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கைவினைத் திறன் கைத்தொழில் கண்காட்சி இன்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். மேற்படி அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்திச் சபை, தேசிய கைப்பணி சபை, கைத் தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்புச் சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இக்கண்காட்சி இன்றும் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெறும்.

மூன்று அம்சங்களாக இடம்பெறும் இந்நிகழ்வில் கண்காட்சி, விற்பனை, நவீன கைத் தொழில் பயிற்சி ஆகியன உள்ளடங்குவதுடன் 156 கண்காட்சிக் கூடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

முதல் நாள் 22ம் திகதி மாலை 5.30 மணிக்கும் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை இக்கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிட முடியும்

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே: டியூ குணசேகர

due.jpgசரணடைந்துள்ள முன்னாள் போராளிகள் 12,000 பேருள் 7980 பேர் மட்டுமே தற்போது புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் 364 பேர் பரீட்சை முடிவடைந்ததும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார்.

சொந்த இடங்களில் 198 குடும்பங்கள் – முல்லைத்தீவில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற்கெனவே 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படுகின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா வீசா அலுவலகம் இடமாற்றம்

london-uk.jpgகொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த பிரித்தானியா வீசா அலுவலகம், கொழும்பு யூனியன் பிளேஸூக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வீசா அலுவலகம், யூனியன் பிளேஸில் இலக்கம் 278 , எக்சஸ் டவர் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இயங்கவுள்ளது.

அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால், 22 ஆம் 23 ஆம் திகதிகளில் கொள்ளுப்பிட்டி, டுப்லிகேஷன் வீதியில் உள்ள அலுவலகம் மூடப்பட்டிருக்கும் எனவும் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக மாத்திரம் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணி வரையும், 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் அலுவலகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யஷ்வந் சிங்ஹ நிகழ்த்தும் டட்லி ஞாபகார்த்த உரை

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந் சிங்ஹ (பா.உ), டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த உரையை இன்று வியாழாக்கிழமை 6 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டாரநாயக்க நிலைய கேட்போர் கூடத்தில் நிகழ்த்துவார்.

திரு. யஷ்வந் சிங்ஹ இந்த ஞாபகார்த்த உரையாற்றும் முதலாவது இந்தியப் பிரமுகராவார்.