25

25

ருஹுணு பல்கலை மாணவன் மரணம் தொடர்பில் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார்

மரணமான ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அருணபண்டாரவை தாக்கியதாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பண்டார தனது தாயிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ருஹ¥ணு பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்கும் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்க என்ற சந்தேக நபர் தீவிர ஜே. வி. பி. ஆதரவாளர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மாணவரின் மரணம் குறித்து நேற்று பொலிஸ் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை பொலிஸ் மாஅதிபர் நடத்தினர். இச்சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான மேற்படி மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென இரண்டு சி. ஐ. டி. பொலிஸ் குழுக்களும் இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

மரணமான பண்டாரவின் தாயார், சீ. ஐ. டி. பொலிஸாருக்கு நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு பதுளை ஆஸ்பத்திரியில் 32வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது மகனை பகல் உணவுடன் பார்க்கச் சென்றேன். ‘என்னடா மகனே… பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி பொலிஸார் அடிக்கும் வரை என்னடா செய்து கொண்டிருந்தாய்…? என்று கேட்டேன்.

என்னை பொலிஸார் அடிக்கவில்லை அம்மா… என் அறைக்குள் வந்து ‘பஸ்ஸா’ தான் என் தலையில் பொல்லால் அடித்தான். என் முதுகிலும் அடிபட்டது என மகன் கூறினான். யாராடா அந்த ‘பஸ்ஸா’ எனக் கேட்டேன். எனக்கு கீழ் மட்டத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தான் எனக் கூறினான்’ என பண்டாரவின் தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். பண்டார தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் அவரது மரணவாக்கு முலமாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது என்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

சீ.ஐ.டி. பொலிஸாருக்கு தான் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்கவைக் கைது செய்ய விசேட பொலிஸ் தனிப்படைகள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. ஊவா பரணகமவி லுள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது அவர் அங்கு இருக்கவில்லை. சந்தேக நபரான பஸ்நாயக்கா எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார். பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு ள்ளனர். சந்தேக நபரான பஸ்நாயக்கவின் பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை செய்த போது இவர் தீவிர ஜே.வி.பி. ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

மரணமான மாணவன் தொடர்பாக பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட அனை த்து சாட்சியங்களும் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மரணம் தொடர்பான இறுதி தீர்ப்பு நீதிமன்றமே வழங்கும். அந்த மாணவரை பொலிஸார் தாக்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றார்களே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, இரண்டு சீ.ஐ.டி. குழுக்களும், இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சாட்சி யங்களை அவர்களிடையே ஒப்படைக்கலாம். ஆனால், அவை பொய் சாட்சியங்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ருஹுணு பல்கலை: முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மேற்படி மாணவனின் மரணம், பல்கலைக்கழகத்தின் பதற்றநிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதேவேளை இம்மரணம் தொடர்பாக இதுவரை கிடைக்கப் பெற்ற அறிக்கைகள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸ் திணைக்களம் நடத்தும் இவ்வாறான விசாரணைகளின் விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றார்.

மலையக தோட்ட புல் தரைகளில் களைகொல்லி பயன்படுத்த தடை

மலையகப் பெருந்தோட்டங்களில் கால்நடை வளர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். தோட்டங்களில் கால்நடை வளர்ப்புக்குப் பூரண உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தோட்டங்களில் காணப்படும் புல்தரைகளில் தோட்ட நிர்வாகங்கள் களைக்கொல்லி பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்திருக்கிறார்.

நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நேற்று முன்தினம் நுவரெலிய மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது நுவரெலிய மாவட்டத்தினை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற அமைச்சரான நவீன் திசாநாயக்க, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மாகாண பிரதான செயலாளர், மத்திய மாகாணசபை தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்ட மக்களை பெருமளவில் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராகத் தன்னை தெரிவு செய்தமையினையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடு இல்லை. எல்லா மக்களும் சமமானவர்கள் என்பதனை அவரது இந்த செயற்பாடு தெளிவுபடுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு தலைமையேற்று உரையாற்றிய அ¨மைச்சர் தொண்டமான், நுவரெலியா மாவட்டம் பல குறைபாடுகளை கொண்டி ருக்கின்றது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி, நிறுவன அதிகாரிகளும், ஒன்றிணைந்து துரித கதியில் எமது மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்றார்.

கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடை முறைப்படுத்தப்பட்ட 358 வேலைத்திட்டங்களில் 238 திட்டங்கள் பூரணமடைந்திருப்பதாகவும், ஏனையவை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

யாழ். மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!

Jaffna_Hospitalயாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இம்மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முன்றாம் ஆண்டு காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் இது வரை வராத காரணத்தினாலேயே இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கான இரத்தப் பரிசோதனைகள் உட்பட்ட  மருத்துவ பரிசோதனைகள் அங்கு செய்யப்படுவதில்லை எனவும் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலேயே இப்பரிசோதனைகளை மேற்கொள்ள  நோயாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூலை ’83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல் ஸ்தாபன வடிவம் பெற்ற இந்த வன்முறை அரசியல் மே 18 2009 வரை கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வகையில் கருப்பு யூலை என்ற குறியீடு 1983 முதல் அடுத்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களது வாழ்வினை இருட்டில் கருமையிலேயே விட்டிருந்தது. இந்த மிகக் கொடிய கால்நூற்றாண்டு வரலாற்றிற்கு நாம் இன்றும் சாட்சியாக வாழந்து கொண்டுள்ளோம்.

இலங்கையின் இரத்தம் தோய்ந்த கால்நூற்றாண்டு வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் போது, அண்மையில் காலமான தமிழ் – சிங்கள மக்களிடையே உறவுப்பாலமாக இருந்த தோழர் உபாலி குரே அவர்களின் சிந்தனையூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என் நினைக்கின்றோம். அவர் தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தனது பெறாமகன் முறையான உறவுக்கார இளைஞனுக்கு எழுதிய மடலில் இருந்து …..

Upaly Cooray‘‘ அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்க வாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும்.

உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1981இல் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொதுநூல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட முடியாது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள் மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை…..’’
சிங்கள சமூகத்தைச் சேர்ந்த, தனது மரணம் வரை இன உறவுகளைக் கட்டியெழுப்ப முயன்ற ஒரு சிந்தனையாளனின் வாக்குமூலம் இது.

1983 யூலை இனக்கலவரம் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது, இந்த இனக்கலவரங்களின் பின்னால் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்கள் இருந்தமை ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது. தங்களுடைய இனவாத நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கும், அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டு தங்கள் குறுகிய நலன்களை பூர்த்தி கொள்வதற்குமாகும்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான தமிழ் எழுச்சியையும் அரசுக்கெதிரான தமிழ் மக்களின் போக்கையும் கட்டுப்டுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த அரசு கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்யும் அறிக்கைகளையும் இனவாத பேச்சுக்களையும் பேசி, தமிழ் மக்களின் மீதான 1958க்களில் நடைபெற்ற கலவரங்களை போன்றதொரு கலவரத்தை நினைத்து ஏங்கியவர்களுக்கு 1983 யூலை 23 சம்பவம் வாய்ப்பாக அமைந்தது. அன்று யாழ்ப்பாணம் திருநல்வேலிச் சந்தியில் வெடிக்க வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி 13 இராணுவத்தினரைப் பலியெடுத்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழர் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமான ஜே ஆர் ஜெயவர்த்தனாவே 1958, 1977 இனக்கலவரங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

J R Jeyavarthaneதமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனே உடனும் தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டுக்களில் தமிழ் அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தனை இனக்கலவரங்களின் பின்னும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1983 இனக்கலவரம் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை மீது தலையீடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. பனிப்போரின் உச்சமாக இருந்த அக்காலப்பகுதியில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றன. இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலன்களும் இந்தியாவின் தேவைகளும் இலங்கை அரசிற்குகெதிராக இந்த இனக்கலவரத்தை இந்தியா பயன்படுத்த முற்பட்டது. இதன் விளைவு இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ஆயுத வடிவம்பெற்று மக்கள் சக்தியிலும் ஆயுதங்களின் சக்தியே மகத்தானது என தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களைக் கைவிட்டு இந்தியா வழங்கிய ஆயுதங்களை இறுகப் பற்றிக் கொண்டனர். உரிமைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக ஆனது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பல சமூக முன்னணியாளர்களும் சமூகநலவாதிகளும் ‘மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத போராட்டம் – அரசியல் முன்னிலைப்படுத்தப்படாத போராட்டம் – மக்களின் பங்கு பற்றல் இல்லாத போராட்டம் – தோல்வியிலேயே முடியும்’ என்பதை அறைந்து சொன்ன போது ஆயுதங்கள் மீதான போதை அவர்களது மதியை மயக்கச் செய்தது. இறுதியில் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட சந்தர்ப்பவாத சக்திகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டு தோல்வியுற்றது.

அரசியல் மயப்படுத்தப்டாத இப்போராட்டம் இலகுவில் வல்லரசுகளின் கைப்பொம்மையாகி அல்லது வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்குட்பட்டு இலகுவில் தோல்வியை அடையும் என்பதை அன்றே சுட்டிக்காட்டிய அரசியல் சிந்தனையாளர்கள் இன்று அதன் முடிவையும் தாங்கள் வாழ்நாளிற்குள்ளாகவே கண்டும் உள்ளனர். இந்தச் சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் இவை எல்லாவற்றையும் மீறி ஆயுதங்களை மட்டுமே நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்தி இன்று அந்த போராட்டம் ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னோக்கி வெகுதொலைவிற்கு மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

இன்றும் இந்த கடந்த காலம் பற்றிய மதிப்பீடோ அல்லது விமர்சனமோ இல்லாமலேயே அடுத்த நகர்வுக்குத் தயாராகின்றனர். எமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்து தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எவ்வித விவாதமும் இன்றி ஓடுகிற பஸ்ஸில் ஏற முற்படுகின்றனர். அவ்வாறு செய்யாதவர்களுக்கு துரோகிப் பட்டம். கடந்த போராட்டத்தின் தப்பான பண்புகள் இன்னும் தொடர்வதையே இது காட்டுகின்றது. இராணுவ சாகசங்களையே போராட்டம் என்று அடுத்த சந்ததிகளுக்கு படிப்பித்தும் ஆயிற்று. இதிலிருந்து வெளிவருவதும் மக்கள் அறிவூட்டப்படுதலும் மிகவும் சிக்கலான நிலையாகியும் விட்டது, இந்த சிக்கலிலிருந்து வெளியேற எமது கடந்த போராட்டத்தையும் நமது போராட்டவாதிகளின் போக்குகளையும் முழுமையாக மீள்மதிப்பீடு செய்தாக வேண்டிய அவசியமான காலகட்டம் இது.

Black July 1983இந்த 1983 யூலைக் கலவரத்தின் பின்னரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கையின் இனவாத அரசுகள் தங்களது இனவாதப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது இனவாத அரச இயந்திரம் மாற்றங்களை அனுமதிக்கவில்லை. இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னணியில் மிகவும் துரிதமாக இடம்பெற்றது. இந்த இனவாத நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஸ்தாபனமயப்பட்டு கண்டிக்கவோ அதற்கு எதிராக செயற்ப்படவோ முடியாதபடி தமிழ் மக்களை வலிந்து பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்தனர். இன்னோர் வகையில் இந்த இனவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நெய்யூற்றி வளர்த்தும் விட்டனர்.

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவ்வாறு குறுகிய அரசியல் லாபம் பெற்றனரோ அவ்வாறே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகளும் இனவாதத்தைக் கூர்மைப்படுத்தி தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்த இனக்கலவரத்தை தூண்டிய காரணங்களில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை அரசும் அதற்கான முழுமையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் சிங்களக் காடையர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து தாமும் இணைந்தே இந்த 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை நடாத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தனர், இந்த ஈனச்செயலுக்கு பொறுப்பான பலர் இன்றும் பல முக்கிய அரச பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை,

அதேசமயம் இந்த 1983 யூலை கலவரத்திற்கு சற்று முன்னான தமிழ் ஆயுத அமைப்புகளின் நகர்வுகள் இங்கு பதிவு செய்யப்படுவது அவசியம். யூலை 23 1983 திருநெல்வேலிச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னால் இருந்த உள்நோக்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

TELO_Thangaththuraiதமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ வெலிக்கடைச் சிறையில் இருந்த தமது தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை சிறையை உடைத்து வெளிக்கொணர்வதற்காக 24 இளைஞர்களை பயிற்சியளித்து வெலிக்கடைசிறையை தாக்கும் திட்டம் ஒன்றை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளையிது. ‘இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் அதன் தலைவர் வே பிரபாகரனிடமும் உதவிகள் கேட்கலாம்’ என்று சில ரெலோ உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இதற்கிடையே சில ரெலோ உறுப்பினர்கள் வே பிரபாகரனே தமது ரெலோ தலைவர்களை காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் ‘ரெலோ தலைவர்களை உயிருடன் வெளியே எடுப்பது வே பிரபாகரனுக்கு விருப்பமானதாக இருக்காது’ என்றும் கூறினர். ‘வே பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்புவார்‘ என்ற பலமான அபிப்பிராயத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த அபிப்பிராயத்தை அன்று கொண்டிருந்தவரில் ரெலோ சுதனும் முக்கியமானவர். இவர் இப்போது லண்டனில் வாழ்கிறார்.

TELO_Kuddymani‘தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் தலைவர் வே பிரபாகரனோ உதவி செய்யத் தேவையில்லை.உபத்திரவம் இல்லாது இருந்தாலே போதும். இப்போதைக்கு எந்த இராணுவத் தாக்குதலையோ இராணுவத்தினர்க்கு எதிரான சேட்டைகளையோ செய்ய வேண்டாம்’ என புலிகளிடம் கேட்பதாக முடிவாகியது. சிறீசபாரத்தினத்தின் இணக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இதே சுதன் சந்தித்து மேற்கூறிய வேண்டுகோளை விடுத்திருந்தார். ரெலோ சுதன் கலட்டி அம்மன் கோவிலடியில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கண்ணனிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (கண்ணன் இன்றும் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.) ரெலோ தலைவர் தங்கத்துரை பிரபாகரனின் இம்மாதிரியான தாக்குதல்களை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாயும் இத்தகவலை வே பிரபாகரனுக்கு அனுப்பியதாயும் இந்த ரெலோ உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவ சாகசங்களை நிறுத்தவில்லை. இராணுவத்தினர் மீது மேற்கொள்ளளும் வலிந்த தாக்குதல்களை, துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தவில்லை. திருநெல்வேலித் தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றினர். இனக்கலவரம் வெடித்தது. வெலிக்டை சிறையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை கொல்லப்பட்டனர்.

LTTE Leader V Pirabakaranஇன்றும் லண்டனில் வாழும் முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் இந்த 13 இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் ரெலோ தலைவர்களை வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்குடனேயே செய்யப்பட்டதாக திடமாக நம்புகிறார்கள். அதேவேளை இந்தக் காலங்களில் சிறையில் இருந்த தங்கத்துரை தனது நீதிமன்ற உரைமூலம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உள்ள நியாயத்தை முக்கியமாக இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் எடுத்து கூறி இருந்தார். இவ்வுரை தங்கத்துரை போராட்டம் பற்றிய சரியான போக்கைக் கொண்டிருந்தார் என்பதைக் கோடிற்று நின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரையை சிறையிலிருந்து மீட்டிருந்தால் வே பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடாத்தியிருந்திருக்க முடியுமா? பின்னாளில் ஏற்பட்ட அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்பது ஆர்வத்திற்குரிய விவாதமாக அமையும்.

அன்று 1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னியில் குடியேறிய மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர். இன்றும் இந்த வன்னி அகதி முகாம்கிளிலிருந்து வெளியேறி தங்க இடம் இல்லாது இருப்பவர்கள் இவர்களே.

இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே மூல காரணமாக இருந்த போதும் சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரச இயந்திரத்தை இனவாத நச்சுச் சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுதந்திரக் கட்சி காத்திரமான பங்களிப்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு தற்போது அமைந்துள்ள அரசியல் சூழல் மிகவும் வாய்ப்பானதொன்று. அதனை முழுமையாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இனவாதச் சூழற்சிக்கு வெளியே கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசினால் முடியும். ஆயினும் அவர்கள் தாம் அதற்குத் தயாரில்லை என்பதனையே அவ்வரசின் இராணுவப் போக்கு உணர்த்துகின்றது. இன்றும் வன்னி முகாம்களில் உள்ள இந்த மக்கள் 1983ம் ஆண்டின் இனவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வெளியேறிய அப்பாவி மலையக மக்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன? இன்றைய அரசின் நடவடிக்கைகள் தம் குறுகிய அரசியல் நலன்களுக்காக நாட்டை மற்றுமொரு இனவாதச் சுழற்சிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு தள்ளுகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையெ எழுவது தவிர்க்க முடியாதது.

Rehabilitation_Wanni வன்னி அகதி முகாம்களில் உள்ள மீதமான மக்கள் மட்டுமல்ல பெயரளவில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் தமக்கென வாழ விவசாயம் செய்ய நிலமற்றவர்கள், வீடற்றவர்களாகும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும் அந்த இளம்பிள்ளைகளின் கல்வியில் அக்கறையில்லாமலும் அரசுக்கு என்ன வெற்றி விழா, ஆண்டுவிழா தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட இனவாத போக்கே இலங்கையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக போராட முற்பட்டதும் இராணுவத்தினரை தாக்கும் எண்ணம் உருவாகக் காரணம் ஆனது என்பதை இன்னும் உணராமல் இருப்பது இவர்களும் வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த மக்களின் அவல நிலையை இன்றுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுகொள்வதாக இல்லை. தம் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு அப்பால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்திரமாக எதனையும் செய்துவிடவில்லை. அந்த மக்களை வன்னி முகாம்களில் சென்று பார்ப்பதற்குக் கூட அவர்கள் போராடவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசு ஆட்சியில் உள்ளது எனக் கூறிக்கொள்ளும் சுதந்திரக் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் தோழமைக் கட்சிகளும் கூடி தமது சுதந்திரக்கட்சி அரசியல் உறவுகளை முழுமையாக இந்த மக்களுக்காக பயன்னபடுத்த முடியாதவர்களாகவே உள்ளனர்.

இக்கட்டுரையை மீண்டும் உபாலி குரேயின் சிந்தனையின் அடிப்படையிலேயே நிறைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். அவர் மேற்குறிப்பிட்ட கடிதத்தில்…..

‘‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ள வேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்ட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.’’

இந்த மனமாற்றம் பேரினவாதத் தலைமைகள் மத்தியில் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை இந்த மனமாற்றம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த கால்நூற்றாண்டு கால ஆயுதப் போருக்கு செலவழித்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காண கோடிக்கணக்கான பணத்தை சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் பயன்படுத்தி இருந்தால் எமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள, முஸ்லீம் மக்கள் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். உபாலி குரேயின் கடிதத்திற்கு அந்த உறவுக்கார இளைஞன் வருமாறு பதிலளிக்கிறான்…..

”என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமுடன்”

இலங்கை இந்த இனவன்முறை என்கிற நச்சு வட்டத்தில் இருந்து வெளியேற தமிழ் – சிங்கள – முஸ்லீம் சமூகங்களில் இருந்து பல உபாலி குரேக்கள் தோன்ற வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்களிலும் பார்க்க உபாலி குரே போன்றவர்களின் சிந்தனையும் எழுத்தும் இன மத பேதங்களைக் கடந்து அவர்களின் இதயங்களையும் சிந்தையையும் வெற்றிகொள்ளும். உபாலி குரேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அதன் முடிவில் இசைக்கப்பட்ட பொப் மாலியின் பாடல் இன்னும் மெல்லியதாக காதோரம் ஒலித்துக் கொண்டுள்ளது…..

Get up, stand up!
Stand up for your rights!
Get up, stand up!
Don’t give up the fight!

கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வன்னியில், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி. துணுக்காய் பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட்ட குறிப்பிட்ட சில மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முற்றாக வீடுகளை இழந்தோருக்கான கொடுப்பனவான மூன்னறரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இத்திட்டத்தின் அடிப்படையில் சில வீடுகள் அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலவற்றிற்கான வீடமைப்பு கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கபட்டு  வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும்.

ஓகஸ்ட் முதல் வெளிமாவட்டங்களில் வசித்தவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில வவனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் 26ம் 27ம் திகதிகளில் மீள்குடியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களிலிருந்து வெளியேறி வன்னிக்கு வெளியே வேறு மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகிளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4ம் திகதியிலிருந்து அம்மாதம் மழுவதும் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக  இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், கள்ளச்சாராய விற்பனை, கசிப்பு கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிற வகையில் 29 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், வீதி ஒழுங்கு மீறப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களான 62 பேரும் மற்றும் 7பேருமாக மொத்தம் 113 பேர் பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விசேட நடவடிக்கைகளில் ஒன்பது பொலிஸ் நிலையங்களிலிருந்து 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.