26

26

”நடிகர்கள் இலங்கைக்கு பயணிக்க முடியும்.” – தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

Sarathkumar_Actorஇந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (இது பற்றி வெளியான செய்தியும் விவாதமும் : அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம் )

இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று சென்னையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதில் நடிகர், நடிகையர் இலங்கைக்கு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டம் கூடியது.

இந்த வருடத்துக்கான பொதுக்குழு கூட்டம், சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் நேற்று காலை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

றுகுணு மாணவன் மரணம் தொடர்பான பொலிஸாரின் கருத்தை ஜே.வி.பி. நிராகரிப்பு

றுகுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த கருத்தை ஜே.வி.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் மாணவரமைப்பின் உறுப்பினரொருவரால் தலையில் தாக்கப்பட்டு கடுமையான காயங்களின் விளைவாக வியாழன் இரவு றுகுணுப் பல்கலைக்கழக மாணவன் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஜே.வி.பி. உறுப்பினரும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.யுமான அநுர குமாரதிஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது றுகுணு பல்கலைக்கழக மாணவன் ஜே.வி.பி. மாணவர் அமைப்பின் உறுப்பினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அநுரகுமார நிராகரித்துள்ளார்.

சுசந்த அருண பண்டார என்ற 25 வயது மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸாரின் அறிக்கைகள் இதுவரை முரண்பட்டவையாகக் காணப்பட்டதாக அநுரகுமார கூறியுள்ளார். அருண பண்டார இயற்கையாக மரணமெய்தியதாக முதலில் பொலிஸார் கூறியதாகவும் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் அநுரகுமார தெரிவித்திருக்கிறார். தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன் பின்னர் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரே தாக்கியதாக ஜே.வி.பி.யிடம் தொடர்புபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், மற்றொரு மாணவனே தனது மகனைத் தாக்கியதாக அந்த இறந்த மாணவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். அந்த மாணவனை அடையாளங்கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் ஜே.வி.பி. பணியாளர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஊவா பரணகமவைச் சேர்ந்த பஸநாயக்க என்பவரே அந்த மாணவரென அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சனிக்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.

மலையகத்தில் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் பரிந்துரை

மலையகத்தில் அரச நிர்வாக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரை அறிக்கை எதிர்வரும் (28) புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ள இந்த ஆலோசனை அறிக்கை 145 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலையக அரச நிர்வாக எல்லை மீள்நிர்ணய ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 195 கிராம சேவையாளர் பிரிவுகளும், 13 பிரதேச செயலாளர் பிரிவுகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்று முன்மொழியப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏழு பிரிவுகளைப் புதிதாக உருவாக்க வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அது தொடர்பில் இறுதியான விரிவான பரிந்துரைகளைத் தயாரிக்கவென கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தேவராஜ் தெரிவித்தார். மேலும், மலையகப் பெருந்தோட்டங்களை உள்வாங்கும் அரச நிர்வாகக் கட்டமைப்புகளுக்குத் தோட்டத் தமிழ் இளைஞர், யுவதிகளை நியமிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தெங்குப் பொருள் ஏற்றுமதி மூலம் ரூ. 24 பில். வருவாய் – பிரதமர்

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் தற்போது 24 பில்லியன் ரூபா வருடாந்த வருமானமாகக் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதனை 75 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறினார்.

தெங்குச் செய்கையாளர்களின் வருடாந்த கூட்டம் நேற்று (25) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது :- நாட்டில் தற்போது அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ளதால் தெங்கு செய்கையாளர்கள் தமது நடவடிக்கைகளை சிரமங்களின்றி மேற்கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் தெங்கு செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாடு முழுவதும் தெங்கு செய்கையை பிரபல்யப்படுத்த முடிந்தால் தெங்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் வருமானத்தை மும்மடங்காக அதிகரிக்க முடியும் என்று பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் எச்சரிக்கை

புகலிடம் வழங்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துன்புறுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்ற அடிப்படையில் புகலிடம் அளிப்பதோ அல்லது அகதி அந்தஸ்து வழங்குவதோ சட்டவிரோத மற்றும் முறையற்ற புலம்பெயர்வை மறைமுகமாக ஊக்குவிக்கும் நடவடிக்கை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சட்டவிரோதமான முறையில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை விரிவுபடுத்தியிருப்பதாகவும் குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்கள் பொருட்களைக் கடத்திச் செல்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கூறியுள்ளார்.

வியட்நாமின் கனோயில் இடம்பெற்ற 17 ஆவது ஆசியான்மாநாட்டின் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத முறையற்ற புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிப்படைத்தன்மை வாய்ந்த கொள்கைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் இடமாற்றுத் தரிப்பிடமாக மற்றும் புலம்பெயர்வுகளை உள்ளீர்க்கும் நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் மக்கள் முறையற்ற நகர்வுகள் என்பவற்றுக்கு ஊக்குவிப்பு அளிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.