28

28

”3038 விடுதலைப் புலிகள் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளனர்” புனர்வாழ்வு ஆணையாளர்

இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 3038 விடுதலைப்புலி உறுப்பினர்கள்,  போராளிச் சிறுவர்கள் ஆகியோர் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சகல விடுதலைப்புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வளிக்க முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் பற்றிய விபரத்தை வெளியிட அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய அமைப்புகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளைச் சந்திப்பதையும் அரசு திட்டமிட்டு தடுத்து வருகின்றது. தடுத்த வைக்கப்பட்டு உள்ளவர்கள் பற்றிய பட்டியலை அரசு வெளியிடாததால் பல பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதனையே அறிய முடியாமல் உள்ளது. இது பல குடும்பங்களில் பாரிய உளவியல் தாக்கத்தையும் அலைச்சலையும் ஏற்படுத்துகின்றது.

குடும்பங்களுடன் இணைக்கப்ட்ட இவர்களுக்கு மறு வாழ்வளிப்பது என்பது சவால்கள் நிறைந்த பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார். போராளிச் சிறுவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா இந்துக்கல்லூரியில் கல்விகற்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும். கொழும்பு பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து வசதிகளும் இப்போராளிச் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தர்சிகாவின் சடலம் மற்றுமொரு பிரேத பரிசோதணைக்காக கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலம் இன்று புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று முற்பகல் கைதடி மயானத்தில் அவரது சடலம் ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன், யாழ், போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி, மனிதஉரிமை இல்லத்தின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் பொலிஸார் ஆகியோரின் முன்னிலையில்  தோண்டியெடுக்கப்பட்டது. தர்சிகாவின் தாயார் உட்பட்ட உறவினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

தோண்டப்பட்ட சடலம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. கொழும்பில் சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மீண்டும் வீதிச்சோதனைகள்!

Army_Patrol_Batticaloaமட்டக் களப்பில் படையினரால் மீண்டும் வீதிச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை, கல்முனை, மற்றும் வெருகல் வழியாகச் செல்லும் வாகனங்கள் யாவும் இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Army_Patrol_Batticaloaமட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தல், கொள்ளை முதலான குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வீதிச்சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளபோதும், திடீரென மீண்டும் மேற்கொள்ளப்படும் இச்சோதனை நடவடிக்கைகளால் அவசரப்பயணிகள், அரசாங்க ஊழியர்கள் தங்கள் பயணத்தில் தாமதங்கள் ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

Tamil_PP_28July10தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்று (July 28 2010) பிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

Tamil_PP_28July10கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில் திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி ( தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு ) கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இம்மாதம் 7ம் திகதி கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது. ( ”தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைய வேண்டும்.” எம்.கே.சிவாஜிலிங்கம் )

இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் ஒன்றுகூடிய அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர்.

Tamil_PP_28July10தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்த வகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

Tamil_PP_28July10இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ( தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ,  பொது இணக்கப்பாட்டிற்கு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஈ.பி.டி.பி அழைப்பு!)

அசினின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

Asin_Actressநடிகை அசினின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டிருக்கின்ற போதிலும் அவரின் திரைப்படங்களைத் தமது உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனம் அசினின் சகல படங்களையும் பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் ஏனெனில் அவர் இலங்கைக்குச் சென்றதால் அவரின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூறியுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனத்தின் தலைவர் பழனி சுந்தரத்தின் அறிக்கையானது தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனமானது அமெரிக்காவிலுள்ள சுமார் 30 தமிழ்ச்சங்கங்களை ஒன்றாக இணைத்த கூட்டமைப்பாகும்.

கொழும்பில் இடம்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிக்கையொன்றை விடுத்திருந்தது. தமது தொழிற்துறையைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் இலங்கைக்குச் செல்லக்கூடாதென அந்த அமைப்புக் கூறியிருந்தது. பலர் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால், அசின் இலங்கைக்குச் சென்று கண்சிகிச்சை முகாமை நடத்தியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கமானது இந்த சர்ச்சைக்குரிய விடயத்திற்கு தீர்வுகாணும் பொறுப்பை கூட்டு கலந்தாலோசனைக் குழுவிடம் ஒப்படைத்திருந்தது.

நல்லெண்ண நோக்கத்துடனேயே தான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றதாக அசின் கூறியிருந்தார். நான் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் சரத்குமாரிடம் பேசியிருந்தேன். கூட்டு கலந்தாலோசனைக் குழுவின் அறிவித்தல்களுக்கமைய செயற்படுவதை நான் விரும்பியிருந்தேன் என்று அசின் கூறியுள்ளார்

பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம்

ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர் தன்னால் ஆங்கிலத்தை பேசவும் விளங்கிக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதன் மூலம் இதனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த எல்லை முகவரமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பரீட்சை நடத்துபவர்களினால் நடத்தப்படும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

அடிப்படை ஆங்கில அறிவை விண்ணப்பதாரிகள் வெளிப்படுத்த வேண்டும். இதே அடைவுமட்டமானது புள்ளியடிப்படை முறைமையின் கீழ் வகை 2 இன் கீழ் அனுமதிக்கப்படும் தொழிற்தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது. பிரிட்டனுக்குள் இருப்பதற்கு விண்ணப்பிப்போருக்கு இந்தப் பரீட்சையானது கட்டாயமானதாகும் என்று ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.இந்த அறிவிப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த மாதம் விடுத்திருந்தது.

தற்காலிக வதிவிட காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்த ஜோடிகள் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கும் ஆங்கில மொழி அறிவு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வாழ்க்கை முறை தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய தேவையுள்ளது. இது புதிய அடிப்படை ஆங்கிலமொழி அறிவுக்கு மேலதிகமாக தேவைப்படும் விடயமாகும். ஆரம்ப விண்ணப்பப்பத்திரத்தில் இதற்கான படிவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை – அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

min-meedia.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27! நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற்போது அந்தக் கட்டுப்பாடு முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளது.  எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித்தார். ஆனால், அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.

அதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளியிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற்கென பல்வேறு திட்டங்களும், பிரேரணைகளும் உண்டு.

எனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.  அதனடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் காணிகளைப் பொறுப்பேற்க வடக்கு நோக்கிப் பயணம்!!!

Abondon_Landவன்னியில் சொந்தக் காணிகளையுடைய வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்கள் காணிகளைப் பொறுப்பேற்பதற்காக வன்னிக்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தங்கள் காணிகளை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கூட  தற்போது வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதால் அங்கு சென்று  தங்களின் காணிகளைப் பொறுப்பேற்பதற்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Abondon_Landவெளிநாடுகளில் வசிப்பவர்களின் காணி, வீடுகளை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் தம்வசப்படுத்தியிருந்தனர். சில காணிகளில் விடுதலைப்பலிகளின் முகாம்கள், அலுவலகங்கள் என்பன அமைக்கபட்டிருந்தன.  அவ்வாறான காணிகளை தற்போது படையினர் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். சில காணிகளில் ‘இரரணுவத் தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்ட பலகைகளையும் காணமுடிகின்றது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கள் காணி, வீடுகளைப் பொறுப்பேற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வீடுகளுக்கு – மேலதிக மின்சாரத்தை சபைக்கு விற்கவும் வசதி

வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் ‘நெட் மீட்டர்’ மின்சாரத் திட்டத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று பத்தரமுல்ல பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.  தமது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை இதனூடாக உற்பத்தி செய்ய முடிவதோடு மேலதிக மனிசாரத்தை மின்சார சபைக்கு விற்கவும் முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

தமது வீட்டுத் தேவைக்கு போதுமான அளவு மின்சாரம் உற்பத்தியாகாத போது அதனை மின்சார சபையினூடாக பெறவும் ‘நெட் மீட்டர்’ பாவனையாளர்களுக்கு வசதி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 4.5 கிலோ வோர்ட் நெட் மீட்டரினூடாக தினமும் 12 முதல் 23 அலகுகள் மின் உற்பத்தி செய்ய முடியும்.

வியாபாரிகள், கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் மின் பாவனையாளர்களுக்கு இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என அமைச்சு கூறியது. முதலாவது ‘நெட் மீட்டர்’ பத்தரமுல்லை ஜயந்திரபுரவில் உள்ள புரூம் கூட்டு வியாபார உரிமையாளர் மஹிபாலவின் வீட்டில் பொருத்தப்பட்டது.

ஐ.தே.க. தலைமையகம் முன்பாக தீ மூட்டிக்கொண்டவர் மரணம்

fire.jpgஐ.தே.க. தலைமையகத்தின் முன்பாக தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட ஐ.தே.க. ஆதரவாளர் நேற்றுக் காலை உயிரிழந்தார். இவர் வெலிகமயைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ரியன்ஸி அல்கம (60) என பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன் இவர் மிரிஹானை பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டே இவர் நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்துள்ளார். பிட்டகோட்டை பகுதிக்கு வந்துள்ள இவர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் வாங்கிக்கொண்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இவரின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. அவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சாட்சியமளித்துள்ளனர். இறந்தவரின் சடலம் நேற்று மாலை வெலிகமவில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட ஏற்பாடாகியிருந்தது.