நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்த, ஸ்யாம், பௌத்த பீடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் அரசியல் கைதிகள் நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இக்கைதிகளின் அவலநிலை குறித்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு பல தடவைகள் தெரியப்படுத்தினோம். ஆக்கபூர்வமாகன பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் அதியுயர் நிலையில் மதிக்கப்படுகின்ற பௌத்த பீடங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், அமைச்சர் டீயூ குணசேகர ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே வேளை, கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.