August

August

காலம்சென்ற ரெலோ தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் காலமானார்.

Mother_of_Srisabaratnamகாலம் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி ஓகஸ்ட் 21ல் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் 23.08.2010 காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை 92 (சாலிக்கிராமம் 17ஏ 12ஸ்ரீ பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.

1925 செப்ரம்பர் 22ல் பிறந்த இவர் சுந்தரம்பிள்ளை அவர்களை மணந்து கொண்டார். இவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி ஜெ பாக்கியம் , சு. செல்வரெத்தினம், திருமதி தி ஜெயராணி ஆகியோரின் தாயாராவார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிள்ளைகள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் நிலை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாற்றமடைந்து பெற்றோர் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளை நடாத்தும் நிலை உருவானது. ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளை அவர்களது பெற்றோரே அடக்கம் செய்யும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது.

யாழ். குற்றச் செயல்களை தடுக்க ‘பொலிஸ் கார்’

Police_Carயாழ். குடாநாட்டில் எங்காவது குற்றச்செயல்கள் நடைபெற்றால் அங்கு உடனடியாக பொலிஸ் வாகனம் வந்து நிற்கக் கூடியதான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வசதிகள் கொண்ட ‘பொலிஸ் கார்’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுப்பாதற்காக இந்நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்   மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த இடத்தில் குற்றச்செயல் நடைபெற்றாலும் அந்த இடத்திலிருந்து பொது மக்கள் 0213210827 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த இடத்திற்கு பொலிஸ் கார் வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் மக்களை ஏமாற்றி பணம் சேகரிக்கும் தென்னிலங்கை நபர்கள்!

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிசொச்சிப் பகுதிகளில்  மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் நபர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்னிலங்கையிலிருந்து வரும் சில சிங்களம் பேசும் நபர்கள் அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாக சில ஆவனங்களைக் காட்டி பணம் பெற்று வருகின்றனர்.

 வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளில் மொழி தெரியாத பெண்கள் இவர்கள் காட்டும் ஆவணங்ளை நம்பி அல்லது, பயம் காரணமாக பணத்தைக் கொடுத்து வருகின்றனர். கடந்த சிலதினங்களாக கிளிநொச்சி வீடுகளுக்கு வந்த நபரொருவர் தென்னிலங்கையிலுள்ள அநாதை விடுதி ஒன்றிற்கு நிதி சேர்ப்பதாகவும், அதற்கான அனுமதியை படையினர் தந்துள்ளதாகவும் தெரிவித்து, கையெழுத்திட்ட சில ஆவணங்களைக் காட்டி பணம் சேகரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக யாழ்ப்பாணம் வருவதற்கு தடை!

Signpost_to_Jaffnaவெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக வடபகுதிக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி  தரைவழியாக யாழ் செல்வதற்கு தொடர்ந்தும் தடை அமுலில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வரும் சுற்றுலாப்பயணிகள், ஊடகவியலாளர்கள்  உட்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமாக மட்டுமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியின்றி தரைவழியாக பயணிக்க அனுமதி இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இரட்டைக் குடியுரிமையுள்ள இலங்கையர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தும்; எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே வவுனியாவிற்கு அப்பால் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் பயணம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன் பயணவிபரங்களையும் கடவுச்சீட்டு விபரங்களையும் தொலை அஞ்சல் செய்தால் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை இலங்கையில் வழங்கப்படும் தொலைஅஞ்சலுக்கு அனுப்பி வைக்கும். இல்ரலையானால் நேரடியாகச் சென்றும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இந்நடைமுறை வெளிநாட்டவர்கள் சிலர் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதையொட்டியே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட மற்றுமொருவர் இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்கள் மீது தமிழ் பிரதேசங்கள் மீது அரசு நெருக்கடியை வழங்குவதையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம். : பி எம் புன்னியாமீன்

arab_slave_tradeசில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை  ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட்  1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத்  தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம் திகதி இடப்பட்ட CL/3494  இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

ஆபிரிக்க – அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும்,  துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.    

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர” மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425),  2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை,  எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது,  எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக  நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.

ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, ‘அடிமைத் தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு  அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்” என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.

அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.

இவ்வாறாக  ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்” முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன்,  அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும்,  பிடிப்பதும், விற்று வாங்குவதும்,  கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி,  அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும்,  கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும்  island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும்,  டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும்,  ஈகுவடார் 1854இலும்,  பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த,  ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள்,  தனிக் கோவில்கள்,  தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார். நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை. இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும் ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.

ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள் எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில் அறிவித்தனர்.

ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை. இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்வேன்” என்று கூறி வருகிறார்.

“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்” என்று இவர் கூறி வருவது இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

20ம் நூற்றாண்டில்,  ஐ.நா. சபை,  சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை,  பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.

 தற்காலத்தில் அடிமைகள்

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.

அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து,  தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கட்டாய சேவை – அரசாங்கம்,  அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள்,  தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு,  கட்டாய வேலைகளை – துன்புறுத்தியோ,  வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.

அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ,  கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.

ஆள் கடத்துதல் – மனிதர்கள்,  பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது,  ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.

சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில்,  குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப் பட்டாலும் கூட,  இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான்,  மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது.”எனக் கூறப்பட்டிருந்து.

ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் “பெர்பெர்” இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

Rainy_Dayவடக்கில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியமர்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வீடுகள் அழிவுற்ற நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்களை அமைத்து வசித்து வருபவர்களும், கூரைகள் கதவுகளற்ற நிலையில் சேதங்களுடன் காணப்படும் சுவர்களுக்குள் தங்கியிருக்கும் மக்களும் இம்மழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இடைக்காலத்தில் பெய்யும் மழையினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கும் இப்பாதிப்புகள் அதிகமாகவிருக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அழிவுற்ற வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளை அமைக்கு பணிகளும் சேதமுற்ற வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளும் மிகவும் தாமதமாகி வருகின்றமையினால்  மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு என்ன செய்வதென்று தெரியாமலுள்ளனர்.

பலர் கடன்பட்டு அல்லது தங்கள் நகைகளை விற்று வீடுகளைப் புனரமைக்கின்ற போது அவ்வாறு புனரமைக்கப் படுகின்ற வீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என உதவி புரியும் நிறுவன உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் காதல் தோல்வி- தமிழ் மாணவி தற்கொலை

fasebook.jpgலண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வத்தளைத் தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வத்தளைப் பிரதேத்தைச் சேர்ந்த 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்தத் தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி ஆதரவாளர் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் விசாரணை

sajith-premadasa.jpgகட்சி ஆதரவாளர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கட்சித் தலைமையகத்திற்கு முன்னால் றியன்சீ அல்கம என்ற கட்சியின் ஆதரவாளர் தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

மிரிஹான பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து சஜித் பிரேமதாஸவிடம் மிரிஹான பொலிஸார் ஒன்றரை மணித்தியாலம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

89,000 விதவைகளுக்கு மீள் எழுச்சித் திட்டம் – இந்தியா 250 மில்லியன் ரூபா நன்கொடை

hisbullh.jpgவடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை க்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் மொத்தமாக 89 ஆயிரம் விதவைகள் அடையாளங் காணப்பட்டுள்ள னர். இவர்களில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் வட மாகாணத்திலும் உள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதனை மையமாகக் கொண்டே முதற்கட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பி லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப் படவுள்ள விதவைகளுக்கு தையல், விவ சாய, கணனி போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்றார். இந்த மீள் எழுச்சித் திட்டத்தை மேலும் விஸ்தரித்து, சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆராயும் பொருட்டு அடுத்த மாதம் தான் புதுடில்லி பயணமாகவு ள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கண்டி ரந்தோலி பெரஹெரவை ஜனாதிபதி பார்வையிடுவார்

கண்டி எஸல பெரஹரவின் இறுதி ஊர்வலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிடுவார். பெரஹெர இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. கண்டி எஸல பெரஹர ஆரம்ப காலம் தொட்டு பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வலத்தை நாட்டின் தலைவர் பார்வையிடுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.

அதற்கமையவே ஜனாதிபதியும் கண்டியில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிடுவார். ஜனாதிபதியுடன் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ – மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு ரந்தோலி இறுதி பெரஹர ஊர்வலத்தைப் பார்வையிடுவார்கள்.